முச்சந்தி

சோமரத்ன ராஜபக்ஷ உட்பட பலர் உள்ளனர்; செம்மணி சாட்சிகளை விரைவில் சந்திப்போம்; அவர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டு விபரங்களை நீதிமன்றுக்கு வழங்குவோம்

சோமரத்ன ராஜபக்ஷ உட்பட செம்மணி மனித புதைகுழி வழக்கோடு தொடர்புபட்ட பல்வேறு சாட்சிகள் பல்வேறு இடங்களில் இருப்பதாக நாங்கள் அறிகின்றோம் என தெரிவித்த காணாமல்போனோர் அலுவலகத்தின்(ஓ.எம்.பி.)நிறைவேற்றுப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான ஜெகநாதன் தற்பரன், அது சம்பந்தமாக நிச்சயமாக எமது அலுவலகத்திற்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதை குழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்கு பின்னர் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே சட்டத்தரணி தற்பரன் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊடகங்கள் வாயிலாக நாங்களும் இதனைப் பார்த்தோம். நிச்சயமாக அவர் மட்டும் இல்லை. இந்த வழக்கோடு தொடர்புபட்ட பல்வேறு சாட்சிகள் பல்வேறு இடங்களில் இருப்பதாக நாங்கள் அறிகின்றோம். அது சம்பந்தமாக நிச்சயமாக நாங்கள், காணாமல்போனோர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்களுக்குள் அவர்களை சந்திப்பதற்கோ அல்லது அவர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டு அவர்கள் சம்பந்தமான விபரங்களை நீதிமன்றுக்கு வழங்குவதற்கோ தயாராக இருக்கிறோம் என்றார்.

சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகளை பாதுகாப்பதற்கென ஒரு அதிகார சபை இருக்கின்றது. கூடுதலான வரைக்கும் ஓ.எம்.பி அலுவலகம் அதாவது காணாமல் போனோருக்கான அலுவலகம் காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடைய பாதுகாப்பு சம்பந்தமான கரிசனைகளையே அதிகம் வெளிப்படுத்துகின்றது.

சாட்சிகளுடைய பாதுகாப்பு என்பது நிச்சயமாக அந்த அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டிருக்கும்.

அவருக்கு ஏதாவது சிக்கல்கள் இருக்குமாக இருந்தால் அந்த அதிகார சபையுடன் இணைந்து நாங்கள் கரிசனைகளை முன்னெடுத்துச் செல்லலாம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button