முச்சந்தி

ஆம்புலன்ஸ் விட மறுத்த மருதங்கேணி வைத்தியசாலை

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொதுச்சந்தையில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நபரை கொண்டு செல்வதற்கு மருதங்கேணி வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் உதவி மறுக்கப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்திருக்கின்ற பொதுச் சந்தையில் காய்கறிகளை வாங்குவதற்காக நபர் ஒருவர்  (07) காலை வருகை தந்துள்ளார்.

காய்கறிகளை கொள்வனவு செய்து கொண்டிருக்கின்ற பொழுது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி கீழே விழுந்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்து ஓடியது.

குறித்த சந்தையில் இருந்த பொதுமகன் ஒருவர் உடனடியாக அருகில் உள்ள மருதங்கேணி வைத்தியசாலைக்கு சென்று சம்பவத்தை எடுத்து கூறியதுடன் நோயாளர் காவு வண்டியையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

மருதங்கேணி வைத்தியசாலையில் காணப்பட்ட ஆம்புலன்ஸ் சாரதியிடம் விடயத்தை தெரியப்படுத்தியவேளை இப்போது ஆம்புலன்ஸ் விட முடியாது என்றும் வைத்தியர் தூங்குவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் வைத்தியரை ஒருமுறை கேட்டு சொல்வதாக தெரிவித்தார்.

1990 என்னும் அவசர இலக்கத்திற்கு அழைத்து வேறு ஆம்புலன்சை அழைக்குமாறும் மருதங்கேணி வைத்தியசாலை ஆம்புலன்ஸ் சாரதியால் கூறப்பட்டதால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்றுவதற்காக 1990 இலக்கத்திற்கு அழைத்து ஆம்புலன்சை வரவழைத்ததாக குறித்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக மக்கள் மருத்துவ தேவைகளை பெறுவதில் மருதங்கேணி வைத்தியசாலையில் தொடர்ந்து சிக்கல்களை எதிர்நோக்கி வருவதுடன், இவ்வாறு அவசர தேவைக்கு உதவாத இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு பொது மகனாக கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button