ஈரான் இஸ்ரேல் போரை நிறுத்திய டிரம்ப்?… நேட்டோ உச்சி மாநாட்டில் முரண்பட்ட டிரம்ப்?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் ராணுவ முதலீடுகளை அதிகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். இதனை பல உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என முதலில் கூறப்பட்டது. டிரம்பின் அதீதமான வேண்டுகோள்களால் , நேட்டோ நாடுகள் இடையேயான கருத்து முரண்பாடு அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.
இதே வேளை இஸ்ரேலும் ஈரானும் போரை நிறுத்த விரும்பினர் என்றும், ஈரானின் அணு ஆயுதத் தளங்களை அமெரிக்கா முழுமையாக அழித்ததாகவும், அதன் பின்னரே போர் நிறுத்தம் ஏற்பட்டதாகவும் ட்ரம்ப் கூறியமைக்கு பென்டகனிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன)
நெதர்லாந்து ஹேக் நகரில் ஜூன் 23 முதல் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. இதன் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு பல நாடுகளும் விமர்சனம் தெரிவித்தன.
உலகின் மிகப்பெரிய நேட்டோ பாதுகாப்பு அமைப்பை, ஒரு புதிய பாதுகாப்பு செலவீன அதிகரிப்பின் மூலம் ஒன்றிணைக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 32 உறுப்பினர்களுக்கு இடையேயான பிளவுகள் அதிகரிக்கவே முடியும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
நெதர்லாந்து நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, (Mark Rutte) ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அமெரிக்காவைப் போலவே தங்கள் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவை பாதுகாப்புக்காக செலவிட ஒப்புக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையை முதலில் தெரிவித்து இருந்தார்.
ஆனால், ஸ்பெயின் அரசு, ஒவ்வொரு நாடும் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 5% பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்ற புதிய இலக்கை சாத்தியமற்றது என மறுத்தது. டிரம்ப் அந்த இலக்கை அடைய வேண்டும் வலியுறுத்தியுள்ளார். நேட்டோவில் எந்த ஒரு தீர்மானமான முடிவுக்கும் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.
புதிய பாதுகாப்பு செலவீன அதிகரிப்பை அமெரிக்கா கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் மற்ற நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். நேட்டோ ஸ்பெயினை சமாளிக்க வேண்டியிருக்கும், ஸ்பெயின் மிகவும் குறைவாக செலவிடும் நாடாக இருக்கிறது என்றும், கனடாவைவையும் குறைவாக செலவிடும் நாடு என டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இவ்வருட உச்சி மாநாட்டின் முக்கியக் கருப்பொருளாக உக்ரைனுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா விரும்பின. ஆனால் டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் கவனத்தை ஈர்க்காது, அவரை ஓரங்கட்டியதாகவும் கூறப்படுகிறது.
வாஷிங்டனின் தந்திரோபாய போர் நிறுத்தம் :
வாஷிங்டன் அரசு ஈரானுடன் நேரடியாக சண்டையிடவில்லை, அதன் அணுசக்தி திட்டத்துடன்
மட்டுமே போராடுகிறது என துணை அதிபர் ஜே. டி வான்சின் அறிக்கைகளை பார்த்தால் அமெரிக்க தற்போதைய போர் விவகாரத்தில் அழுத்தமாக காலடி எடுத்து வைக்க முடியவில்லை – அல்லது விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு அளவிலான போர் நிறுத்த இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். தீவிரமாக ஏவுகணை தாக்குதல்களை நடத்திய இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததாகவும் தற்போது கூறப்படுகிறது.
வாஷிங்டன் மூலமாக தெஹ்ரான் – டெல் அவிவ் இடையே ஒரு மூலோபாய – தந்திரோபாய (Tactical Ceasefire) யுத்த நிறுத்தம் ஏற்பட்டது போல முதலில் தோன்றியது.
ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதலான ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ நீண்டகால போருக்கு வழிவகுக்கும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டது. தற்போதய நிலையில் இந்த போர் நிறுத்தம் நீடிக்குமா என்பதனை எவராலும் தீர்மானிக்க முடியாது.
தொடர்ந்து தீவிரமாக வளர்ந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியில் அமெரிக்க தலையீடு காரணமாக போர் மேலும் தீவிரமடையும் என்றும் கூறப்பட்டது. கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் பழிவாங்கும் தாக்குதல்களையும், ஹைஃபா மற்றும் டெல் அவிவ் போன்ற இஸ்ரேலிய நகரங்கள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களையும் ஈரான் தொடர்ந்து நிகழ்த்தி வந்தது.
தற்போது வாஷிங்டன் மேற்பார்வை மூலமாக தெஹ்ரான் – டெல் அவிவ் இடையே ஒரு மூலோபாய யுத்த நிறுத்தம் ஆனது, புவிசார் அரசியலில் தீவிர தருணத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்தம் ஒரு பரந்த போரின் தொடக்கமா, அல்லது கவனமாக வடிவமைக்கப்பட்ட யுத்த நிறுத்த உத்தியா என்றும் ஊகங்கள் உள்ளன.
ஈரான் அணு ஆயுதம் அழியவில்லை:
ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முழுமையாக அழிக்கப்படவில்லை, சில மாதங்களுக்கு மட்டுமே தாமதமாகியிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறையின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், ஈரான் ஒப்பந்தத்தை மீறாவிட்டால் இஸ்ரேல் அதை மதிக்கும் என்று உறுதியளித்தார்.
அதேபோல், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்ஸேகியன், இஸ்ரேல் மீறாவிட்டால் ஈரான் ஒப்பந்தத்தை பின்பற்றும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து, இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையமும், ஈரானின் வான்பரப்பும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா என கேள்விகள் எழுந்துள்ளன. ஆனாலும் கண்டிப்பாக போர் நிறுத்தம் தொடரும் என அமெரிக்க கூறுகிறது.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான பகை முழுமையாக தீரவில்லை. மத்திய கிழக்கில் ஓரளவு பதற்றம் குறைந்திருந்தாலும், எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தம் எவ்வளவு உறுதியாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
நேட்டோ பாதுகாப்புக்கு அதிக நிதி:
மத்திய கிழக்கு போர், ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ராணுவ முதலீடுகளை அதிகரிக்க நேட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளது. ஹேக் நகரில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதலீடுகளில், ஒவ்வொரு நாடும் ஜி.டி.பி.யில் 5 சதவீதம் உயர்த்துவது என நேட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 32 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ராணுவ ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பு, ஐரோப்பாவில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், ராணுவத்துக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என, நேட்டோ நாடுகளுக்கு, அமெரிக்கா சமீபத்தில் ஆலோசனை கூறியது.
ஐரோப்பாவைத் தவிர மற்ற பிராந்தியங்களில் உள்ள பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பாகவும்
அமெரிக்கா தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
தற்போதைய 2% ஜி.டி.பி. செலவுக்கு பதிலாக 5% ஆக உயர்த்துவது குறித்து பல உறுப்பு நாடுகள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளன. கூட்டுக் கடமைகளை உறுதி செய்ய 2035ம் ஆண்டிற்குள் முக்கிய பாதுகாப்பு தேவைகள் மற்றும் ராணுவம் தொடர்பான செலவினங்களுக்காக உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் முதலீடு செய்வது கடினமான விடயம் என்றும் சில நாடுகள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த அமைப்பில் உள்ள எந்த ஒரு நாட்டை எதிரி தாக்கினாலும், அது அனைத்து உறுப்பு நாடுகள் மீதான தாக்குதல் என கருதுவது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் 2035 காலக்கெடுவுக்குள் இலக்கை அடைய முடியாது எனவும், இது நியாயமற்றது எனவும் ஸ்பெயின் கூறியுள்ளது.
மேலும் நேட்டோவின் புதிய ராணுவ திட்டங்களில் ஒன்றான, எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள, 30 நாட்களில் 300,000 படைகளை களமிறக்கும் திட்டம் உள்ளது. ஆனால் நிபுணர்கள் அதற்கான வளங்களை உருவாக்க முடியாது என்று சந்தேகிக்கின்றனர்.
பெல்ஜியமும் இதேபோன்ற கருத்தை மறைமுகமாக தெரிவித்துள்ளது. ஸ்லோவேகியா, தனது பாதுகாப்பு செலவினங்களை தாங்களே தீர்மானிப்போம் என அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் ஈரானின் அணு ஆயுதத் திட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. நேட்டோ தலைவர் மார்க் ருட்டே, ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
உக்ரைன் போரின் நிலமை :
2022ல் ரஷியா உக்ரைனை தாக்கியதன் பின்னர், நேட்டோ நாடுகள் பாரியளவு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டாலும், அவருக்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ தொடர்த்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

2024ல், உக்ரைனுக்கான இராணுவ உதவியில் ஐரோப்பிய நாடுகள் 60% பங்குவைத்தன. இத்தகைய உதவிகள் எதிர்காலத்தில் தொடருமா என்பது சந்தேகமே.
![]()