6 கோரிக்கைகளுக்கும் ஐ.நா.விரைவில் பதில்; ஆணையாளர் வோல்கர் டேர்க்

ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்படட கோரிக்கை மனுவொன்றும் கையளிக்கப்பட்ட கோரிக்கை மனுவுக்கான பதிலை விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஊடாகப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக, யாழ் செம்மணியில் ‘அணையா விளக்குப்’ போராட்டத்தை நடத்திய ‘மக்கள் செயல்’ எனும் தன்னார்வ இளையோர் அமைப்பின் ஏற்பாட்டாளர்களிடம் ,ஐ.நா. ஆணையாளர் வோல்கர் டேர்க், உறுதியளித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் தனது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் புதன்கிழமை (25) யாழ் மாவட்டத்துக்கும் விஜயம் செய்திருந்த நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும்,’மக்கள் செயல்’ எனும் தன்னார்வ இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (23) முற்பகல் யாழ் செம்மணி வளைவுப் பகுதியில் ஆரம்பமான ‘அணையா விளக்குப்’ போராட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை (25) மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. ‘அணையா விளக்குப் போராட்டத்தின்’ ஒரு கட்டமாக நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும், கையெழுத்துப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று முன்தினம் போராட்டத்தில் வடக்கு- கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் செயல் தன்னார்வ இளையோர் அமைப்பினர், தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கை ,போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நீண்டநேரமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் மாலை 4.45 மணியளவில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் போராட்டக் களத்துக்கு வருகை தந்தார். போராட்ட ஏற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அவர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது இலங்கையின் பொறுப்புக் கூறல் விவகாரம் தொடர்பாக ஐக்கியநாடுகள் பொதுச் சபை ஊடாக ஐக்கியநாடுகள் பாதுகாப்பு அவைக்கு விடயம் பாரப்படுத்தப்பட்டு இதனூடாகச் சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றைச் சாத்தியப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் முடுக்கிவிட வேண்டும்.
செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் தொடர்பில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக் கூறல் செயற்திட்ட அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீட்டை வழங்கவும், கண்காணிப்பில் ஈடுபடவும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமது சமூகத்தின் வளங்களைப் பெற்று அதன் மூலம் சுதந்திரமான தொழில்நுட்ப உள்ளீட்டைப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமாறு அழுத்தம் வழங்க வேண்டும்.
புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் கோரப்படும் அனைத்து நிதிக் கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதுவரை வெளிவந்த தகவல்கள் பிரகாரம் அனைத்துப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கண்காணிப்புடனான அகழ்வுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கையெழுத்துக்களுடன் கூடிய கோரிக்கை மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையாளர் வோல்கர் டேர்க், மேற்படி கோரிக்கைகளுக்கான பதிலை விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஊடாகப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
![]()