முச்சந்தி

காணாமாலான உறவுகளுக்கு நியாயம்?… சர்வதேசம் நீதியை நிலைநாட்டுமா?… நவீனன்

(காணாமலாக்கபட்டோர் பிரச்சனைக்கு நீதியினை வழங்குவதில் பின்னிற்கின்ற நாடுகளில் முதலாவதாக இலங்கை தான் இருக்கின்றது. இன்று யுத்தம் நிறைவடைந்தும் இவ்வளவு காலங்களாகியும், மக்கள் தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சர்வதேசம் இதனை யோசித்துப் பார்க்க வேண்டும், ஜெனிவா இது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்)
2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் காணாமல் போன தமிழ் உறவுகளுக்காக
பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு
என்ன நடந்திருக்கும் என்பது தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வரை சென்றும், இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை.
சர்வதேச அளவில் தமிழர்களது நீதிக்கான கோரிக்கைகளை ஆதாரங்களுடன் முன் வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தாயகத்திலும் வடகிழக்கில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழர் தாயகத்தில் மனிதாபிமானற்ற அரசினால் முன்னெடுக்கபட்ட சிங்கள அரசின் யுத்தத்தில் 1லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறவுகளை தமிழர்கள் பறிகொடுத்துள்ளனர். ஆனாலும் போராட்டங்கள் போராட்டங்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. அவர்களுக்கான நீதியை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேசத்தை கேட்டு நிற்கின்றனர்.
இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறை மீது தமிழர்களுக்கு சிறு துளி கூட நம்பிக்கை இல்லை. ஆகவே தான் சர்வதேச பொறிமுறையை நாடி நிற்கின்றனர். எத்தனை ஜனாதிபதிகள் இந்த ஜனாதிபதி மாளிகைகளை அலங்கரித்து தங்களுடைய ஆட்சிக் கதிரைகளை பிடித்து சென்றுள்ளனர். தற்பொழுது பதவிக்கு வந்த ஜனாதிபதி கூட பதவிக்கு வர முதல் தமிழரக்கான நீதியினை நிலை நாட்டுவேன் என தெரிவித்து இருந்தார். ஆனால் இதுவரை அந்த நீதியை நிலைநாட்டவில்லை என்பதே உண்மையாகும்.
ஆயினும் வடக்கு கிழக்கில் காணாமாலாக்கபட்ட உறவுகளுக்கு இதுவரை நீதி நிலைநாட்ட முடியவில்லை. தற்போது இலங்கையில் இடம்பெறவுள்ள கூட்ட தொடர் ஒன்றிற்காக வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் காணாமலாக்கபட்ட உறவுகளுக்கு நீதியை பெற்று தருவாரா என்பது சந்தேகமே.
ஈழத்தில் மனிதப் புதைகுழிகள்:
உலகிலேயே அதிகளவு மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகத்திலேயே உள்ளன. இலங்கையில் இதுவரை பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கம், செம்மணி மனிதப் புதைக்குழி, அரியாலை சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி, மிருசுவில் மனிதப் புதைக்குழி, கிளிநொச்சி மனிதப் புதைக்குழி அத்துடன் கிளிநொச்சி கணேசபுரம் மனிதப் புதைக்குழியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி, முள்ளிவாய்க்கால் மனிதப் புதைக்குழிகள், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி, மன்னாரில் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தென் இலங்கையில் குருநாகல் நிகவரபிட்டிய மனிதப் புதைக்குழி,
கம்பஹா – மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை, கம்பஹா – எஸ்செல்ல மனிதப் புதைக்குழி, கம்பஹா – வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைக்குழி இப்படி பல மனிதப் புதைகுழிகள் உள்ளன என்று அறியப்படுகிறது.
தலைநகர் கொழும்பில் கோகந்தர மனிதப் புதைக்குழி, பொல்கொட எரி மனிதப் புதைக்குழி, மாத்தறை – அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைக்குழி, இறக்குவானை – சூரியகந்தை மனிதப் புதைக்குழி என இன்னும் பல இடங்களில் காணாமல் போனோர் புதைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மனிதப் புதைக்குழி, மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைக்குழி, கண்டியில்அங்கும்புர மனிதப் புதைக்குழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியும் உள்ளன என்று அறியப்படுகிறது.
அம்பாறையில் தொடர் போராட்டம்:
வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை நீதியாக வெளிப்படுத்த வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை அம்பாறை வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தின் முன்றலில் மாதாந்தம் வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் நீதி கோரிய போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இலங்கை அரசிடம் பல்வேறு வழிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்களின் மூலம் எதிர்பார்த்த நீதி கிடைக்காத பட்சத்தில், இன்று சர்வதேசம் வரை இந்த நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்து நிற்கின்றது.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியும் நான் ஆட்சிக்கு வந்தால் இந்த உறவுகள் தொடர்பில் நிச்சயம் கரிசனை செலுத்துவேன் குறிப்பாக இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாது செய்வேன் என குறிப்பிட்டவர் தான் இன்று காணாமல் போன பற்றி எந்த ஒரு சிறுதுளி கூட பேசாது ஜனாதிபதியும் மௌனம் காத்து வருகிறார்.
தமிழ் உறவுகளை காணாமல் போகச் செய்தது இந்த அரச படையினரே. இந்த அரச படையினருக்கு எதிராகத் தான் செயற்படமாட்டேன் என்ற போர்வையில் தற்போது அனுர அரசு பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது . தமிழர்களுக்கு எப்பொழுதும் இந்த உள்ளக பொறிமுறையில் தீர்வு கிடைக்கப் போவதில்லை. சர்வதேச பொறிமுறை தான் எங்களுக்கான தீர்வினை பெற்று தரும் என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் பிரதிநிதி (செயலாளர் நாயகம் ) இலங்கைக்கு வர இருக்கின்ற நிலையில், இங்கு வருகை தந்தால் மாத்திரம் இதற்கான தீர்வினை அவர் பெற்றுத் தருவாரா? இலங்கை அரசுடன் அவர் பேசுகின்ற பொழுது இங்கு ஒரு பிரச்சனைகளும் இல்லை காணாமலாக்கப்பட்டோர் என்ற ஒரு பிரச்சனை இல்லை என்று அப்பட்டமாக கூறுவார்கள்.
காணாமலாக்கபட்டோர் பிரச்சனைக்கு நீதியினை வழங்குவதில் பின்னிற்கின்ற நாடுகளில் முதலாவதாக இலங்கை தான் இருக்கின்றது. இன்று யுத்தம் நிறைவடைந்தும் இவ்வளவு காலங்களாகியும், மக்கள் தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சர்வதேசம் இதனை யோசித்துப் பார்க்க வேண்டும், ஜெனிவா இது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தாய்மார் குரல் கேட்கவில்லையா ?
வடக்கு கிழக்கு வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தினரால் மாதாந்தம் தமது உறவுகளுக்கான நீதியை கோரி முன்னெடுக்கப்படும் மாவட்டம் தழுவிய போராட்டம் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தினரால் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தின் முன்றலில் அமைந்துள்ள மத்திய சந்தை வளாகத்தில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது சிறீலங்கா அரசே எமது மழலைகளை என்ன செய்தாய் , சிறீலங்கா அரசே இறுதி யுத்தத்தில் சரணடைந்த எம் குழந்தைகளை என்ன செய்தாய் ,காணாமல் ஆக்கப்படுதலும் இனவழிப்பே ,என் மகனே எப்போது நீ வருவாய் ,சர்வதசேம எமது குரல் கேட்கவில்லையா ,பெற்ற மகனே என் வயிறு எரியுதடா எப்போது என்னிடம் வருவாய் என பல்வேறு பதாகைகளை தாங்கிய வண்ணம் கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன் பொழுது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தின் தாய்மார்கள் கலந்து கொண்டனர் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button