சிங்கள பௌத்த நாடு என்ற நம்பிக்கையே மத ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலியுள்ளன – தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணையின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு

‘இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்’ எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே ‘நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்’ எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அது மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் மத ரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘அச்சத்திலிருந்து வன்முறைக்கு: இலங்கையில் இடம்பெற்ற மத அடிப்படையிலான தாக்குதல்கள்’ எனும் தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நாட்டில் பதிவான மத அடிப்படையிலான ஒடுக்குமுறைச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இன மற்றும் மத ரீதியிலான வன்முறைகள் தொடர்வதற்கு தனியுரிமை மனநிலை (சகல வசதிகள், சலுகைகள், உரிமைகளை அனுபவிப்பதற்கான உரித்து தனக்கே உண்டு எனும் பக்கச்சார்பான மனநிலை) மற்றும் மக்கள் மத்தியில் தொடரும் அச்சம் ஆகிய இரண்டுமே பிரதான காரணமாக இருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது ‘இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்’ எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே ‘நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்’ எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அதுவே பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதுபோன்ற தனியுரிமை மனநிலை சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்கர்கள் மத்தியிலும் நிலவக்கூடும் எனவும், வட, கிழக்கு மாகாணங்களில் இந்துக்களை முன்னிலைப்படுத்தும் சிவசேனை போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இத்தகைய தனியுரிமை மனநிலை ஆழமான அச்சத்தை விதைப்பதுடன், அது மதரீதியிலான ஒடுக்குமுறைகள் மற்றும் கலவரங்களுக்கு வழிகோலுகின்றது. குறிப்பாக ஏனைய இன, மத சமூகங்களின் செயற்பாடுகளின் விளைவாக தமது இன, மத அடையாளர்கள் தேசிய ரீதியில் அழிவடைந்துவிடும் அல்லது அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் சில சமூகங்கள் மத்தியில் உண்டு. முஸ்லிம்களின் சனத்தொகை உயர்வு மற்றும் பொருளாதாரத்தில் மேலோங்கிவரும் அவர்களது ஆதிக்கம், கிறிஸ்தவ மதமாற்றம் மற்றும் தமிழர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியைக் கோரல் என்பன மேற்குறிப்பிட்டவாறு மாற்று இன, மத சமூகங்கள் மத்தியில் தத்தமது அடையாளம் தொடர்பிலான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளன’ என மத அடிப்படையிலான தாக்குதல்கள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்தவொரு நபரினதோ அல்லது குழுவினதோ மத அடையாளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவகையிலோ அல்லது அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளக்கூடியவாறோ 2023 நவம்பர் தொடக்கம் 2024 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் என்பன இவ்வறிக்கையில் ஆழமான சட்டப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி இக்காலப்பகுதியில் அரசியலமைப்பின் 12 ஆவது பிரிவுக்குப் புறம்பாக மத அடையாளத்தின் அடிப்படையிலான ஒடுக்குமுறைச் சம்பவங்களும், அரசியலமைப்பின் 10 மற்றும் 14(1)(ஏ) பிரிவுகளுக்குப் புறம்பாக விரும்பிய மதம் அல்லது நம்பிக்கையைப் பிற்பற்றும் சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் சம்பவங்களும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.
அவற்றில் அநேகமானவை கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தலங்களைப் பதிவுசெய்தல் தொடர்பானவையும், முஸ்லிம்களின் ஆடைகள் சார்ந்தவையும், இந்துக்களின் மத நிகழ்வுகளின்போது அவற்றுக்கு இடையூறு விளைவித்தல், அச்சுறுத்தல் விடுத்தல் என்பனவுமாகும்.
மேலும் பெரும்பாலான மத ரீதியிலான அடக்குமுறைச் சம்பவங்களின்போது அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதற்குத் தவறியுள்ளமை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை குறித்தும் இவ்வறிக்கையில் அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்பட்டிருப்பதுடன் நாட்டின் அரச கட்டமைப்புக்களுக்குள் வேரூன்றியிருக்கும் பேரினவாதம் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![]()