முச்சந்தி

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் மோசடி சிறைச்சாலை ஆணையாளர் அதிரடியாக இடை நிறுத்தம்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனியவை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெசாக் தினத்தில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை செய்யப்படும் போது, பொதுமன்னிப்பை முறையற்ற வகையில் பயன்படுத்தி கைதியொருவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலேயே சிறைச்சாலை ஆணையாளரை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு பட்டியலில் குறித்த கைதியின் பெயர் இல்லாத நிலைமையில்ல், அநுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனைப் பெற்றுவந்த நிதி குற்றச்செயலுடன் தொடர்புடைய கைதியொருவர் முறையற்ற வகையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் இரகசிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே சிறைச்சாலை ஆணையாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த கைதியின் முறையற்ற விடுதலை தொடர்பில் சிறைக்கைதிகளை பாதுகாக்கும் அமைப்பினால் நேற்று நீதி அமைச்சுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த கைதி விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இதன்படி விசாரணைகள் முடிவடையும் வரையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கம் என்ற வகையில் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என்றும், இந்த விடயத்தில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் இருந்து துசார உபுல்தெனிய இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button