பொய்யான அறிக்கைகளை சமர்ப்பித்து இழப்பீடுகளை பெற்ற 16 முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்!

எதிர்வரும் நாட்களில் 16 முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த அரசியல்வாதிகள் அரகலய காலப்பகுதியில் தங்களுடைய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளதாக பொய்யான அறிக்கைகளை சமர்ப்பித்து இழப்பீடுகளை பெற்றுக்கொண்டுள்ளதாக ‘சண்டே ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முதற்கட்டமாக, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச மற்றும் அவருடைய மகன் சசீந்திர ராஜபக்ச ஆகியோருக்கு இவ்வாரத்தில் ஆணைக்குழு முன் ஆஜராவதற்கு அழைப்பாணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
சமல் ராஜபக்ச மற்றும் அவருடைய மகன் சசீந்திர ராஜபக்ச ஆகியோர் அரகலய காலப்பகுதியில் திஸ்ஸமகாராம பகுதியில் தங்களுக்கு சொந்தமான சொத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்து 1.5 மில்லியன் ரூபா இழப்பீடு பெற்று மோசடி செய்துள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அந்தச் சொந்தமானவை அல்ல என்பது தெரிய வந்துள்ளது .
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, மகாமாவில் தீ வைத்து அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடு மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு இழப்பீடு பெற்றிருந்தாலும், அழிக்கப்பட்ட மேற்படி சொத்துக்களுக்கு உரியவர்கள்(பெயர்கள் பதிவு செய்யப்பட்ட )இரண்டு பேர், அந்தச் சொத்துக்களுக்கு எந்த இழப்பீடும் பெறவில்லை என்று விசாரணையாளர்களிடம்கூறியுள்ளனர்.
திஸ்ஸமஹாராமவில் உள்ள சொத்து சமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல என்பதும் மாறாக வேறொருவரின் பெயரில் உள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளதுடன், அங்கு வீடு இல்லை என்றும் அங்கு ஒரு நெல் கிடங்கு மட்டுமே இருந்தது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தப் பணத்தை செலுத்துவதற்கு சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது வரும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி பல முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்களை முதற்கட்டமாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான உண்மை அறிக்கையினை மேல் நீதிமன்றத்தில் முன்வைத்து மூன்று மாதங்களுக்கு சொத்துக்களை முடக்குவதற்கான ஆணையை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
![]()