கைதுகள் மூலம் மக்களை திசை திருப்ப அரசு முயற்சி; ஜெனீவாவிலும் ஐ.எம்.எப்.பிடமும் சிக்குவார்கள்

முன்னாள் அமைச்சர்களை கைது செய்வதன் மூலம் மக்களை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முயற்சித்தாலும், ஜெனீவா மனித உரிமைகள் கூட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் உடன்படிக்கை என்பன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தத்தை வழங்குமென தெரிவிக்கப்படுகிறது.
ஐ .நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கைக்கான அவசர விஜயம் முக்கிய அம்சமாகும். ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய இந்த மாதம் இலங்கைக்கு வருகிறார்.
அடுத்த செப்டம்பரில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ள மற்றொரு தீவிரமான முன்மொழிவின் பின்னணியில், இவருடைய இலங்கைக்கான திடீர் வருகையை சாதாரணமான ஒன்றாகக் கருத முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல பரிந்துரைகள் இன்னும் இலங்கையால் செயல்படுத்தப்படவில்லை அரசாங்கம் இந்த விடயத்தில் எந்த கவனமும் செலுத்தவில்லை என்ற சர்வதேச ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசாங்கம் தற்போது, செப்டம்பரில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவும், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட உள்ள தீர்மானங்களை நிராகரித்து, உரை நிகழ்த்தி இலங்கைக்குத் திரும்பவும் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்துவது என்ற தீர்மானத்தை மறந்து, அரசாங்கம் தற்போது செயல்பட்டு வருவதாகவும் இந்த வாக்கெடுப்பில் இலங்கை ஒரு அவமானகரமான தோல்வியை சந்தித்தால், அதனுடன் தொடர்புடைய பல கடுமையான விளைவுகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அடுத்த இரு வாரங்களில் இலங்கைக்கு வருகை தரும் வோல்கர் டேர்க், அரசாங்க பிரதிநிதிகளை மட்டுமல்ல, எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து விவாதிக்க உள்ளமையால், இந்தக் கலந்துரையாடல்களின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைவாக அரசாங்கம் சாதகமான முடிவுகளை எட்டாமையால், இலங்கைக்கு நான்காவது கடன் தவணையை விடுவிப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மின்சாரக் கட்டணங்களை சரிசெய்வதில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட 18 வீத அதிகரிப்புக்கு சர்வதேச நாணய நிதியம் தனது உடன்பாட்டைத் தெரிவிக்கவில்லை. மின்சாரக் கட்டணத்தை கிட்டத்தட்ட 30 வீதம் அதிகரிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய நிலைப்பாடாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம், முன்னர் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தத்தை செலுத்தி வருகிறது. அதன்படி, பொருளாதாரம் மேலோட்டமாகத் தேக்கமடைந்ததாகத் தோன்றினாலும், ஒரு ஆபத்தான அலையை நோக்கி நகர்வதாகவும் அந்த அலையில் சிக்கினால், நாடு ஒரு கடுமையான சூழ்நிலையை நோக்கி நகருமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
![]()