இலங்கை

பலஸ்தீனியர்களை கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!

காஸா போரில் பலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

காஸாவிலும், ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியிலும் சண்டையின்போது பலஸ்தீனியர்களை இஸ்ரேல் இராணுவம் மனிதக் கேடயங்களாக பயன்படுத்திவருகிறது.

வீடுகளை சோதனையிடும்போது உள்ளே ஆயுதங்களுடன் யாராவது இருக்கிறாா்களா என்பதைத் தெரிந்துகொள்ள, பலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் இராணுவ சீருடை அணிவித்து, கண்களைக் கட்டி, நெற்றியில் கெமரா பொருத்தி அந்த வீட்டுக்குள் அனுப்புவதை இஸ்ரேல் படையினா் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

ஒரு பலஸ்தீனியரை அவ்வாறு பயன்படுத்தி, வீட்டுக்குள் ஆயுதப் போராளிகளோ, கண்ணிவெடிகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு, அவரை இன்னொரு இஸ்ரேல் இராணுவப் படைப் பிரிவு மற்றொரு வீட்டை சோதனையிட மீண்டும் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தும்.

இதற்கு ஒப்புக் கொள்வதற்காக பலஸ்தீனியர்களை அடித்து உதைக்கும் இஸ்ரேல் படையினா், மனிதக் கேடயமாக செயல்படாவிட்டால் தாங்களே அவா்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவாா்கள். எனவே, வேறு வழியில்லாமல் பலஸ்தீனியர்கள் மனிதக் கேடயங்களாகச் செல்வாா்கள் என்று இஸ்ரேல் வீரா்களும், ஏற்கெனவே மனிதக் கேடயங்களாக செயல்பட்டவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போரில் பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்த இராணுவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை பின்பற்றுமாறு வீரா்கள் அவ்வப்போது வலியுறுத்தப்பட்டுவருகின்றனா்.

அதையும் மீறி போா் நடவடக்கையில் பாலஸ்தீனா்களும் ஈடுபடுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் வரும்போது, அது குறித்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் கடந்த 2023 ஒக்டோபா் மாதம் 7-ஆம் திகதி நுழைந்து சுமாா் 1,200 பேரை ஹமாஸ் அமைப்பினா் படுகொலை செய்தனா்.

அதையடுத்து அந்த அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.

இதில் இதுவரை 53,901 போ் உயிரிழந்துள்ளதுடன், 1,22,593 போ் காயமடைந்துள்ளனா். அவா்களில் கணிசமானவா்கள் பெண்கள், குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

அப்பாவி பொதுமக்களின் உயிரை துச்சமாக மதித்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதால்தான் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஆனால், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இராணுவ நிலைகளை அமைப்பதன் மூலம் ஹமாஸ் அமைப்பினா் அவா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக இஸ்ரேல் பதிலுக்குக் குற்றஞ்சாட்டிவருகிறது.

இந்தச் சூழலில், இஸ்ரேல் இராணுவமே பலஸ்தீனியர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *