இனப் படுகொலை இடம்பெற்றதாக கூறினால் கடும் சட்ட நடவடிக்கையா?; விஜித தான் கூறியதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்

நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்ற கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அரசின் இந்த மன நிலை கேலிக்கூத்தானது. எனவே அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
தனியார் தலைகாட்சி ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய நேர்காணலின்போது நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்ற கருத்தை கூறியுள்ளார். இதனை நானும் அவதானித்தேன். இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு மேற்பட்ட கருத்து. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது அரசின் நகைப்புக்கிடமான ,கேலிக்கூத்தான மனநிலையை வெளிப்படுத்துகின்றது.
வெளிவிவகார அமைச்சர் என்பவர் சர்வதேசத்திற்கு பதில் சொல்லக்கூடியவர்.அவரே இதனைத் தெரிவித்திருக்கக் கூடாது. இனப்படுகொலைக் குற்றச்சாட்டை எதிர் கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை.அதனால்தான் இவ்வாறான பிழையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இனப்படுகொலை என்பது ஒரு குற்றம். நீங்கள் ரோம் உடன்படிக்கைக்கு கூட உடன்பட வேண்டும்.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது.அது ஒரு மிகப்பெரிய குற்றம். ஆனால் இனப்படுகொலை என்று கூறினால் சட்ட நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் அரசுள்ளது. முன்னைய ஆட்சியாளர்களைவிட நாம் மாறுபட்டவர்கள் எனக்கூறும் தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
இனப்படுகொலை தொடர்பில் வழக்குகள் நடக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களினால் வழக்குகள் சுயாதீனமாக தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே,நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று வெளிவிவகார அமைச்சர் தான் கூறிய கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்தக்கருத்து அவர் பதவி வகிக்கும் அமைச்சுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் உங்களினால் ஏன் நீதியை நிலை நாட்டமுடியவில்லை?உங்களிடமும் ஒரு குற்றவுணர்வு இருப்பதனால்தான் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
![]()