இலங்கை

பாதாள உலகக் கும்பல் ஊடாக எதிர்க்கட்சியின் எம்.பி.க்களை கொல்ல திட்டமா? – அரசிடம் தயாசிறி கேள்வி

பாதாள உலகக் கும்பலுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் நேரடி தொடர்பிருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இது பாதாள உலகக் குழுவினர் ஊடாக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பமா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கட்சிகளில் போட்டியிட முடியாத கள்வர்களே சுயேட்சை குழுக்களில் களமிறங்குகின்றனர் என தேசிய மக்கள் சக்தி கூறியது. கள்வர்களை கைது செய்வதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி, தற்போது கள்வர்களுடன் இணைந்தே ஆட்சியமைக்க முயற்சிக்கிறது.

கள்வர்களோடு எவ்வாறு அரசாங்கம் ஆட்சியமைக்கப் போகிறது? தேசிய மக்கள் சக்தியிலும், ஜே.வி.பி.யிலும் காணப்பட்ட நேர்மை தற்போது முற்றாக காணாமல் போயுள்ளது.

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய கட்சிகள் எவை? அந்த கட்சிகளில் யார் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர் என்பதை பகிரங்கமாகக் கூறுமாறு நாம் பாராளுமன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

எனினும் சபாநாயகர் உட்பட ஆளுந்தரப்பு எம்.பி.க்களால் அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.

நாம் ஆளுந்தரப்பின் குறைகளை சுட்டிக்காட்டும் போது பாராளுமன்றத்துக்கு வெளியில் எமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு கடிதம் மூலம் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஏதேனுமொரு எதிர்க்கட்சி எம்.பி. கொல்லப்பட்டால் அந்த பழியை நேரடியாக பாதாள உலகக் குழுவின் மீது சுமத்த முடியும்.

பாதாள உலகக் குழுவினரால் எதிர்க்கட்சி எம்.பி.க்களில் யாராவது கொல்லப்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்த சுயேட்சை குழு உறுப்பினர்களில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதிநிதிகள் இருந்தனர்.

அவ்வாறெனில் அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனா பயணிக்கிறது? இதன் ஊடாக எதிர்க்கட்சிகளின் குரலை முடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும்.- என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *