இலங்கை

நல்லூரில் புதிய அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி மகஜர் கையளிப்பு!

நல்லூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி அல்லது தூயசைவ உணவகமாக மாற்றும்படியான 450 இற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களுடன் கூடிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர்  புதன்கிழமை (21) காலை 9.15 மணியளவில் சைவமக்களின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனிடம் யாழ்.மாநகரசபை அலுவலகத்தில் வைத்து நேரடியாகக் கையளிக்கப்பட்டது.

சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் தலைமையில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

மகஜரைப் பெற்றுக் கொண்ட யாழ்.மாநகரசபை ஆணையாளர் குறித்த அசைவக உணவகத்தை அகற்றுவது தொடர்பில் யாழ்.மாநகரசபை உறுதியான நிலைப்பாட்டிலுள்ளதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார், யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரின் பிரதிகள் நேரடியாகக் கையளிக்கப்பட்டன.

இந்துசமயகலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் ய.அனிருத்தனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரின் பிரதி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அலுவலகத்தில் வைத்து இந்துசமய கலாசாரத் திணைக்களத்தின் வடக்கு மாகாணப் பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.அறிவரசன், இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.மா.அனந்தலெட்சுமி ஆகியோரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டது. மகஜரைப் பெற்றுக் கொண்ட அவர்கள் உடனடியாக மகஜரின் பிரதியை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தனர்.

இதேவேளை, மகஜர் கையளிப்பு நிகழ்வில் சைவமக்கள் சார்பில் தவத்திரு.வேலன் சுவாமிகள், கா.கு.சிவபாலன், சைவசித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ.கதிர்குமாரசுவாமி சுமுகலிங்கம் சிவாச்சாரியார் , ப.பாலசுப்பிரமணியம், பு.பாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *