இலங்கை

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை தமிழ் அரசுக் கட்சி குழப்பவில்லை

தமிழ் மக்களுக்காக தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்படுகிற முயற்சிகளை இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் குழப்பவில்லை. அவ்வாறு ஒன்றுபடுகிற முயற்சியை இலங்கை தமிழ் அரசுக் கட்சியே குழப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுவது முற்றிலும் தவறு என தெரிவித்த அக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அதற்கான நேர காலம் வருகிற போது கூட்டாக பேசுவதற்கு தயார் எனவும் அறிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை முயற்சிக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியே தடையாக இருந்து குழப்புவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியத்துடன் தமிழ் மக்கள் ஒன்றுதிரள்வது போன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களுக்காக ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அவ்வாறான ஒற்றுமைக்கு நாங்கள் எப்போதும் தயார்.

ஆனால் அரசாங்கமே அறிவிக்காத ஒரு விவகாரம் தொடர்பில் நாம் ஒன்று சேர்ந்து எதனைப் பேச முடியும். ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியலமைப்பு ஒன்றை முன்வைத்தால் அது குறித்து நாம் நிச்சயம் பேசலாம்.

ஆகையினால் அரசாங்கம் முதலில் அத்தகைய நடவடிக்கைகள் எதனையும் எடுத்து அறிவிக்கட்டும். அவ்வாறு அறிவிக்கின்ற போது நாம் கூட்டாகவும் பேசத் தயாராக உள்ளோம்.

மேலும் இந்த ஒரு விவகாரத்தை வைத்துக் கொண்டு தமிழ் அரசுக் கட்சி தான் குழப்புகிறது என மீண்டும் மீண்டும் பல இடங்களிலும் கஜேந்திரகுமார் குற்றச்சாட்டி வருகிறார்.

அவ்வாறு அவர் திரும்ப திரும்ப ஒரே கதையை கூறுவதனால் அது உண்மையாகிவிடாது. உண்மையில் நாங்கள் குழப்பியதாக கஜேந்திரகுமார் கூறுவது பிழை. அவர் கூறுவது முற்றிலும் தவறானது.

ஆகவே நாம் திரும்பவும் சொல்கிறோம் தமிழ் மக்களுக்கான எந்தவொரு விடயத்திற்கும் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை முயற்சியை நாங்கள் குழப்பவில்லை. நாங்கள் கூட்டாக பேசவும் தயாராக உள்ளோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *