யாழில் தமிழுக்கு மூன்றாமிடமா?; ஏற்க முடியாது என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாண கலாசார மையத்தை திருவள்ளுவர் கலாசார மையம் என மாற்றி காணொளி ஊடாக திரைநீக்கம் செய்யும் வரை அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. திறந்து வைத்ததன் பிறகு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகளிடமே வினவ வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு பின்னர் ஊடகவியலாளரின் திருவள்ளுவர் கலாசார மையம் திறப்பு விழாவில் தமிழ் மொழி 3 ஆம் இடத்துக்கு சென்றமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போதே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு கிழக்கில் அல்லது தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் கூடுதலாக வாழுகின்ற பிரதேசங்களில் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. எங்களுடைய கட்சியின் அலுவலகத்தில் பதாகை மற்றும் துண்டுப்பிரசுரங்களை எடுத்துக் கொண்டால் வடக்கில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கின்ற கட்சியாக நாம் இருக்கிறோம்.

அந்த வகையில் இந்திய அரசினால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த யாழ்ப்பாண கலாசார மையமானது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. பெயர் மாற்றம் செய்ததில் எந்தவித குற்றங்களும் கிடையாது. பெயர் மாற்றத்தின் போது புத்திஜீவிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதா என்பது எனக்கு தெரியாது. அன்று அவ்விடத்திற்கு சென்று காணொளி ஊடாக திரைநீக்கம் செய்யும் வரை செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி எனக்கு தெரியாது. திறந்து வைத்ததன் பிறகு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

திருவள்ளுவர் கலாசார மையம் என மாற்றப்பட்டுள்ளது. எங்களுடைய தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டது. முதலாவது ஸ்தானத்தில் இருக்க வேண்டிய வள்ளுவரை மூன்றாவது ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள். இது அவ்வளவு நல்ல விடயம் அல்ல.

அது மாத்திரமல்ல யாழ்ப்பாணம் என்பது அதனுடைய தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். யாழ் பண்பாட்டு மையம் என்று வந்திருந்தால் அதைவிட அழகாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். குறைந்தது யாழ் கலாசாரம் மையம் என்று வந்திருந்தால் கூட அது நன்றாக இருந்திருக்கும். இருந்தபோதிலும் கூட இதை செய்தவர்கள் யார் என்பது உண்மையில் எனக்கு தெரியாது. குறித்த அதிகாரிகளிடம் இது தொடர்பில் வினவவேண்டும்.

இரண்டாவது நிலையில் விளங்கிய சிங்கள மொழியின் மொழிபெயர்ப்பிலும் தவறிருக்கின்றது. அதனால் மிக முக்கியமான நிலையத்தை திறப்பு விழா செய்து அதாவது இந்திய கட்டுப்பாட்டில் இருந்த கலாசார நிலையத்தை எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அல்லது மாநகர சபைக்கு வழங்கும் வைபவத்தில் இவ்வாறான குறைபாடுகள் என்பது இலகுவான முறையில் ஏற்கமுடியாது. இதை உரிய அதிகாரிகளின் கவனத்தில் உடனடியாக கொண்டுவந்து சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *