வீட்டை விட்டு மகிந்தவை அநுர வெளியேற்றுகிறாரா!; போகுமாறு கூறினால் போய்விடுவோம்

முன்னாள் ஜனாதிபதிக்கென அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள வீட்டிலேயே மகிந்த ராஜபக்‌ஷ இருக்கின்றார். அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென்றால் அது தொடர்பில் ஜனாதிபதியினால் எழுத்து மூலம் அறிவிக்க முடியும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லாம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளமை தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள விடயமாகும். இது அவர்களின் பாதுகாப்புடன் தொடர்புடையது. இந்நிலையில் அவர்களின் வீடுகளை எவருக்காவது விற்க வேண்டுமென்றாலோ மகிந்த ராஜபக்‌ஷவை அவரின் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டுமென்றாலோ ஜனாதிபதிக்கு அது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்க முடியும். அது நாங்கள் கேட்டுப் பெற்றவை அல்ல. அரசியலமைப்பு ரீதியில் முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்ததே. உலகில் சகல நாடுகளிலும் முன்னாள் அரச தலைவர்களுக்கு பதவியின் பின்னர் பாதுகாப்பு கருதி அதனை வழங்குவர். இது அரச வீடே போகுமாறு கூறினால் போய்விடுவோம்.

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டை மதிப்பீடு செய்பவர்கள் மற்றைய அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பிலும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

மகிந்த ராஜபக்‌ஷவை இந்த வீட்டில் இருந்து வெளியேற்றி தங்காலைக்கு அனுப்புவதால் பொருட்களின் விலைகள் குறையுமென்றால், நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் எங்களுக்கும் அது மகிழ்ச்சிதான் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *