என்னுடைய திட்டத்திற்கு அநுர பெயர் போடுகிறார்
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை போன்று திருகோணமலை எரிபொருள் களஞ்சியத் தொகுதி தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்வைக்கும் விடயங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் எரிசக்தி அமைச்சராக இருந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான உடன்படிக்கை 2022ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட போது அப்போது தேசிய மக்கள் சக்தியினரே அதனை எதிர்த்தனர் என்றும், அவர்கள் தற்போது அந்த திட்டத்திற்கு உரிமை கோருவது வேடிக்கையானது என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது கம்மன்பில மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை எரிபொருள் களஞ்சியத் தொகுதியிலுள்ள 99 தாங்கிகள் இலங்கை எரிபொருள் களஞ்சியத்தின் தேவையை விடவும் அதிகமானது என்றும் இதனால் 24 தாங்கிகளை எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு வைத்துக்கொண்டு தற்போது எல்ஐஓசி நிறுவனத்தினால் பயன்படுத்தப்படும் 14 தாங்கிகளையும் அவர்களிடமே ஒப்படைத்து மிகுதி 61 தாங்கிகளையும் இந்திய – இலங்கை கூட்டு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி கட்டுகுறுந்தவில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதனை மூன்று வருடங்களுக்கு முன்னரே நாங்கள் செய்துவிட்டோம். அதனை ஜனாதிபதி புதிதாக கூற வேண்டிய தேவை கிடையாது. 2020இல் நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. 2022 ஜனவரி 6ஆம் திகதி இது தொடர்பான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது. அந்த வேலைகள் இப்போது பூர்த்தியடைந்துள்ளன. இதனை தற்போது தமது வேலைத்திட்டங்கள் போன்று காட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். இது தொடர்பான நூலையும் நான் 2022ஆம் ஆண்டில் எரிபொருள் தாங்கிகள் மீண்டும் இலங்கைக்கு” என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன். இதனால் அடுத்தவரின் பிள்ளைக்கு திருட்டுத் தனமாக பிறப்புச் சான்றிதழை செய்வது போன்று செய்ய வேண்டாம். உங்களின் பிள்ளையை பெற்றெடுத்து பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ளுங்கள் என்று அரசாங்கத்தை கேட்கின்றேன்.
இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு 75 வருடங்கள் பாவனையின்றி இருந்த எரிபொருள் தாங்கிகளை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக்கொண்டு அபிவிருத்தி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்த போது தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் தாங்கிகளை இந்தியாவுக்கு கொடுப்பதாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இப்போது நாங்கள் செய்தவற்றை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம் என்றார்.
![]()