ஜனாதிபதி என்பதனை மறந்து களுத்துறையில் அநுர உரை; எதிர்க்கட்சியில் இருப்பதை போன்று இருந்தது

தான் ஜனாதிபதி என்பதனை மறந்து எதிர்க்கட்சியில் இருப்பதை போன்றே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் களுத்துறை உரை அமைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது முஜிபூர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் நூறு நாள் அறிக்கைகளை எடுத்துப் பார்தால் அந்தக் காலத்தில் குறுகிய காலத்தில் அரசாங்கம் செய்வதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் அரசாங்கத்தின் நூறு நாள் பயணத்தில் வெற்றிக்கான விடயங்கள் இல்லையென்றே கூறலாம். அமைச்சர்கள் அழகான கதைகளை கூறினாலும் யதார்த்தபூர்வமாக எடுத்துக்கொண்டால் அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் திருப்பியடையவில்லை என்றே கூற வேண்டும்.

அரிசி பிரச்சினையையும் இன்னும் தீர்க்கப்படவில்லை. சந்தையில் கெகுலு அரிசிக்கு தட்டுப்பாடு உள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் காணவில்லை. தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதையும் நிறுத்தியுள்ளனர். இதனால் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தினாலும் இறுதியில் 10 ரூபா விலை அதிகரிப்பே நடந்தது. இறக்குமதி செய்யப்படும் அரிசி கிலோவொன்றுக்கு 65 ரூபா வரியும் அறவிடப்படுகின்றது.

புதிய அரசாங்கமாக நூறு நாட்கள் கடந்துள்ள போதும் கூறியவற்றை அரசாங்கம் செய்யவில்லை. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் எதிர்வரும் நோன்பு பெருநாள் மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் நிலைமையே காணப்படுகின்றது. அரசாங்கம் இந்த விடயங்களில் யாதார்த்த ரீதியில் எவ்விதமான முடிவுகளையும் எடுக்கவில்லை.

இதேவேளை ஜனாதிபதி களுத்துறையில் உரையாற்றும் போது ஜனாதிபதி என்பதை மறந்தே கதைத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருப்பதை போன்றே கதைத்துள்ளார். இப்போது ஒவ்வொன்றையும் அவர் கூறுவதில் பலனில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும் போது கூறியவற்றை செய்ய வேண்டும். அவரின் கதைகள் ஜனாதிபதிக்கு பொருத்தமான கதைகள் அல்ல. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விடயத்தில் புலனாய்வு அறிக்கைகளுக்கமையவே அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் களுத்துறையில் உரையாற்றும் போது புலனாய்வு அறிக்கை இன்றியே அவர் கருத்துக்களை கூறினார். கடந்த ஜனாதிபதிகள் எப்படி செயற்பட்டனரோ அவ்வாறே இவரும் இருக்கின்றார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *