’13’ம் ஏக்கிய ராஜ்ஜியவும் தமிழருக்கு வேண்டாம்; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ்மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியற் கட்சிகள் எதிர்க்க வேண்டும். அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்துப் பணியாற்ற வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொங்குதமிழ் மக்கள் எழுச்சிப் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொங்குதமிழ் நினைவுத் தூபியடியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ்ப் பிரகடனம் என்பவற்றை நீர்த்துப் போகச் செய்வதன் ஊடாகத் தமிழ்மக்களின் விடுதலை வேட்கையினை இல்லாதொழித்துத் தமிழ்த்தேசிய நீக்கத்தினை முன்னெடுப்பதற்குச் ஆட்சியாளர்கள் முனைப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆக்கிரமிப்புக்களாலும், அச்சுறுத்தல்களாலும் மேற்கொள்ளப்பட முடியாத தமிழ்த்தேசிய நீக்கத்தைத் தமிழ்த் தலைவர்கள் எனும் பெயரால் தமிழ்த்தேசியப் போலிகளைத் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக்கி அவர்களுடாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்கப்போகின்றோம் எனும் உரையாடலின் ஊடாக அதிகாரப் பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்றதொன்றை வலுமிக்கதொன்றாக காண்பிக்கும் தோற்றப்பொலிவை உருவாக்க அரசு முனைப்புக் காட்டுகின்றது. நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட “ஏக்கிய ராஜ்ஜிய” எனும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு வரைபினை தமிழ் மக்களின் பிரதிநிதிநிதிகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதனூடாக முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்து தமிழ்மக்களிற்கான தீர்வுத் திட்டமாகத் தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினையே தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகள் முன்வைக்க வேண்டும் என்பதுடன் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஏக்கிய ராஜ்ஜிய வரைபுகளை முற்றாக எதிர்ப்பதற்கு முன்வர வேண்டுகின்றோம்.

தமிழ்த்தேசியம் தேர்தல் அரசியலிற்கு அப்பாலானதொன்று. தமிழ்த்தேசியக் கட்சிகள் மக்களாணையை மீறிய கடந்த காலச் செயல்களின் விளைவே அவர்களின் பாராளுமன்றத் தேர்தலில் அவர்களிற்கு ஏற்பட்ட ஆசனங்களின் குறைவிற்குக் காரணமாகும். அவர்களின் ஆசனங்களின் இருப்பானது ஒருபோதும் தமிழ்த்தேசியத்தின் இருப்பை பிரதிபலிக்கப் போவதுமில்லை.வீழ்ச்சியடையச் செய்யப் போவதுமில்லை.

தமிழ்த்தேசியத்தை தேர்தல் அரசியலிற்கு அப்பால் மக்களை அரசியற்படுத்தி, அணிதிரட்டி மக்கள் அரசியலை முன்னெடுக்க தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகள் தவறிவிட்டன.2009 இற்குப் பின்னர் தனியே அரசியல் விடுதலையை மட்டும் நோக்கிச் சிந்தித்தமையே பின்னடைவுகளிற்குக் காரணம்.

தற்போதைய ஜே.வி.பி. அரசாங்கம் வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்புக்களை முன்னெடுக்காது தேசிய பொங்கல் நிகழ்வினை முன்னெடுக்கின்றமை தமிழ்மக்களை மடையர்களென்றெண்ணிச் செயலாற்றுவதாகும். செயல் அரசியலிற்கு அப்பால் ஜே.வி.பி. அரசு செய்தி அரசியலை நம்பியே ஆட்சிக்கு வந்தது, ஆட்சியை நடத்துகின்றது. ஒரு சில வீதித் தடைகளை மட்டும் நீக்கி விட்டு இராணுவத்திடமுள்ள காணிகளை விடுவித்து விட்டதாகச் சமூக வலைத்தளங்களை நம்பி நுண் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *