அக்டோபருக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்!; ஏப்ரலுக்கு முன் உள்ளூராட்சித் தேர்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்பாகவும் மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்கு முன்பாகவும் நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சரியான தேர்தல் திகதிகளை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இதன் அடிப்படையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்பாகவும் மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்கு முன்பாகவும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, புதிய வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னரே தேர்தல் திகதியை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
![]()