இலங்கை

ஜே.வி.பி.க்கு எதிராக இருக்கும் திசைக்காட்டி எம்.பி.க்கள் மீதே 22 முதலில் பாயும்

22 அரசியலமைப்பு திருத்தச் சட்டம் முதலில் ஜே.வி.பிக்கு எதிரான திசைக்காட்டி எம்.பிக்களுக்கு எதிராகவே பாயும் எனவும், இதனால் பிரதமர் ஹரிணி அமரசூரிய கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது முஜிபூர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்,

ஜேஆரின் சர்வாதிகார அரசியலமைப்பு என்றும் இதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த ஜே.வி.பியினர் இப்போது ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை செய்யாமல் ஜேஆரின் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர். இதன்படி 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதானது நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதாகவும் இதன்மூலம் வழக்குகளை வேகப்படுத்தவே இதனை செய்வதாகவும் கூறுகின்றனர். ஆனால் எவ்வளவு வழக்குகளை இவர்களால் விசாரிக்க முடியும். உண்மை கதை என்னவென்றால் பிரதம நீதியரசரின் காலத்தை நீடிப்பதற்கே ஆகும். இதுவே உண்மையாகும்.

அன்று கோதாபய ராஜபக்‌ஷவும் இதுபோன்று செய்தார். அவர் அமெரிக்க பிரஜையான பஸிலை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்காக 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். நீங்களும் அதுபோன்றே செய்கின்றீர்கள். பிரதம நீதியரசரை வைத்துக்கொள்வதற்காக தனி நபருக்காக திருத்தத்தை கொண்டு வருகின்றீர்கள்.

நீங்கள் ஏன் இந்த விடயத்தில் அவசரப்பட வேண்டும். அதாவது எதிர்காலத்தில் சுகாதாரத்துறை, கல்வித்துறைகளில் வீழ்ச்சியடையும். பாடசாலைகள் மூடப்படும். அரச சேவைகள் தனியார் மயப்படுத்தப்படும். இதன்போது மக்கள் எழுச்சி ஏற்படும். அதனை தடுப்பதற்கே இதனை கொண்டு வருகின்றனர். இப்போது 22 அடுத்ததாக பயங்கரவாத தடைச் சட்டம் என வரிசையாக சட்டமூலங்கள் வரும். ரஷ்யாவின் ஸ்டாலின் செய்த அரசை அமைக்கவே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். ஸ்டாலின் கெஸ்டாபோ பொலிஸி என்ற அரசை அமைத்தார். அதன்படி அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்தாக அவர் ஒரே இரவில் வழக்கு விசாரணைகளை செய்து 34 பேரை கொன்றார். இதனால் இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இப்போது நிறைவேற்றப்படும் சட்டமூலம் முதலில் ஜே.வி.பிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திசைக்காட்டியின் எம்.பிக்களுக்கு எதிராக வரும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். பிரதமரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்கின்றேன். இந்த சட்டம் எங்களுக்கு பிறகே வரும். முதலில் உங்களுக்கே வரும் என்பதனை தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *