முச்சந்தி

பலாங்கொடை உடகந்த பகுதியில் விநாயகர் சிலை சேதம் மக்கள் போராட்டம்

பலாங்கொடை, உடகந்த பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வீர சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை, விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தோட்டப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நியாயம் கோரி பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (24) முறைப்பாடு செய்ததுடன், பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் உடகந்த பகுதி பொதுமக்கள் மற்றும் ஆலய பக்தர்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயத்தில், கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ச்சியாகப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில்கூட விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருந்தது. மேலும், இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

ஆலயத்திலிருந்த விநாயகர் சிலையின் திருவுருவமும் கரங்களும் உடைக்கப்பட்டுள்ள தோடு, விக்கிரகங்களும் திரிசூலங்களும் திருடப்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஆலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்களின் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் அடிப்படையில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பலாங்கொடை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பிரதேச மக்கள்,விநாயகர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மலையக பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்

இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பலாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பணிப்புரை விடுத்தார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *