இலங்கை

நான் இப்போது தமிழீழ ஆதரவாளன் அல்ல; நாமல் என்னை முற்றாகவே மாற்றிவிட்டார்; முன்னர் டயஸ்போராக்களால் தவறாகக் கூறினேன்

நான் இப்போது தமிழீழ ஆதரவாளனோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவனோ அல்ல. நான் பாராளுமன்றம் வந்த பின்னர் ஆரம்ப காலத்தில் தமிழீழம் தொடர்பில் சண்டையிடுமாறு எனக்கு வாக்களித்த தரப்பினர் கூறியதையே கதைத்தேன். ஆனால் நாமல் ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் நான் எனது முன்னைய கொள்கையில் இருந்து மாறிவிட்டேன் என்று யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாமல் ராஜபக்‌ஷ 2029இல் ஆட்சிக்கு வருவாராக இருந்தால் அப்போது மீண்டும் பிள்ளையான், கருணா அம்மான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்றோரை நாமல் தங்களுடன் இணைத்தால் நான் விலகி போய்விடுவேன் என்றும் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.

“நெத் எப்.எம்.” சிங்கள செய்தி சேவையின் ‘ரதுகட்ட’ நிகழ்ச்சியில் இடம்பெற்ற நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மொட்டுக் கட்சியின் மேடையில் நான் புலி என்று அர்ச்சுனா எம்.பி கூறிய விவகாரம் தொடர்பிலும், அவரின் தற்போதைய கொள்கைகள் தொடர்பிலும் , தேர்தலில் வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் நேர்காணல் கண்டவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அர்ச்சுனா எம்.பி இவற்றை கூறியுள்ளார்.

இதன்போது அவர் கூறியவை வருமாறு,

வடக்கில் போட்டியிடும் போது ஒருபோதும் தமிழீழத்தை பெற்றுத்தருவதாகவோ, நான் புலிகளுக்காக முன்னிருப்பேன் என்றோ ஒரு வசனமேனும் கூறவில்லை. நான் சிங்கள மக்களை நேசிக்கின்றேன். நான் வடக்கில் போட்டியிடும் போது வைத்தியசாலைகளில் ஊழல் மோசடிகளை பிடிப்பேன் என்றும், வடக்கை அபிவிருத்தி செய்வேன் என்று கூறினேன். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் உண்மையை கூறுவேன் என்று கூறினேன். இதனை தவிர வேறு வாக்குறுதிகளை வழங்கவில்லை.

நாமல் ராஜபக்‌ஷ 2029 இல் வருவாராக இருந்தால் அப்போது மீண்டும் பிள்ளையான், கருணாஅம்மான் மற்றும் டக்ளஸ் போன்றோரை இணைத்தால் நான் விலகிப் போய்விடுவேன். பழையவர்களின் இரத்தக் கரை படிந்த கைகளை பிடித்தால் நான் போய்விடுவேன் என்று நாமலிடம் கூறினேன்.

நான் சிங்கள மக்களை சந்திக்கவும் சிங்கங்களை சந்திக்கவுமே அனுராதபுரத்தில் மொட்டுக் கட்சியின் மேடையில் ஏறினேன். தமிழ் டயஸ்போராக்கள் சிங்கள மக்களுக்கு சண்டையிடத் தேவையில்லை நாம் ஒற்றுமையாக இருப்போம் என்ற செய்தியை கூறுமாறு கேட்டனர். அவர்களுக்கு மீண்டும் யுத்தத்தை விரும்பவில்லை.

சிங்கள மக்களுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே எமது மனதில் இருந்தது. ஆனால் நான் பாராளுமன்றத்திற்கு வந்த பின்னர் எனக்கு வாக்களித்த தமிழ் மக்களில் சிலர் எமக்கு தமிழீழம் வேண்டும் என்று சண்டையிடுமாறு கூறியதாலேயே நான் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது உரைகளில் குறிப்பிட்டேன். தமிழ் மக்கள் கூறுவதையே அப்போது கதைத்தேன். எனினும் நாமல் ராஜபக்‌ஷவை சந்தித்த பின்னர் அவர் என்னுடன் கதைத்த விதம் பிடித்திருந்தது. நாங்கள் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்க தேவையில்லை என்று அவர் கூறினார். இதனை நான் ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னரே நான் மாறினேன். நான் புலிகளை ஆதரிக்கும் காலத்தில் ஜெபுனையே (ஜே.வி.பி) ஆதரித்தேன். ஆனால் நாமலை சந்தித்த பின்னர் நான் சிங்கள மக்களுடன் எதிர்ப்பு அரசியலை செய்ய மாட்டேன் என்று தீர்மானித்தேன்.

சஜித் பிரேமதாச என்னை அவரின் கட்சியில் இணையுமாறு கூறினார். ஆனால் இதுவரையில் நாமல் ராஜபக்‌ஷ இன்னும் கேட்கவில்லை. கேட்கும் போது பார்ப்போம். எவ்வாறாயினும் சகல மாவட்டங்களிலும் நான் எனது கட்சியிலேயே போட்டியிடுவேன். சகல இனத்தவர்களையும் இணைத்து போட்டிடுவேன். அடுத்த முறை நான் கொழும்பில் போட்டியிடுவேன். அதில் வெற்றிபெற்று காட்டுகின்றேன் என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *