அநுரவின் அரசில் இந்தியப் படகுகள் வருகை அதிகரிப்பு
இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறல் பிரச்சினைக்கு ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் சரியான ஒரு முடிவை எடுக்காவிட்டால், நாங்கள் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை மேற்கொள்வோம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் இரட்ணகுமார் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் ஓரளவு இந்திய இழுவைமடி படகுகள் கட்டுப்படுத்தப்பட்டு நாங்கள் தொழில் செய்துகொண்டிருந்தோம். புதிய அரசாங்கம் வந்தபின்னர் தற்போது அதிகளவிலான இந்திய இழுவைமடி படகுகள் எமது வளங்களை அள்ளிச் செல்கின்றன .
புதிதாக வந்துள்ள கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கு புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. நாம் கடந்த காலத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு எமக்கு நீதி கோரினோம்
நாங்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சருக்கு பல கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். ஆனால் இன்றும் நெடுந்தீவில் இருந்து சுண்டிக்குளம் இடையில் இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
இனிமேல் இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் இதற்கு சரியான ஒரு முடிவை எடுக்காவிட்டால் நாங்கள் பழையபடி ஆர்ப்பாட்டத்தை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
யாழில் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை மேற்கொள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் தயாராக வேண்டிய நிலை ஏற்படும்.
இப்பொழுது புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றபோது தண்ணியால் அடிப்பார்கள், கட்டையால் அடிப்பார்கள் அவற்றையெல்லாம் பற்றி எங்களுக்கு பயமில்லை.
எங்களது பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாங்கள் போராட்டம் செய்வோம். எனவே ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் இதனை கவனத்தில் எடுத்து இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
![]()