அமெரிக்காவில் பசிலுக்கு பாரிய சொத்துகள் – சிஐடியில் வாக்குமூலம் அளித்த விமல்

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி தலைவருமம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இரகசிய பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

பஸில் ராஜபக்‌ஷவின் அமெரிக்காவிலுள்ள சொத்துக்கள் தொடர்பிலேயே தான் வாக்குமூலம் வழங்கியதாக வீரவன்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலமளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் அமெரிக்காவிலுள்ள சொத்துக்கள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தினால் உண்மையான திருடனை அரசாங்கத்தினால் பிடிக்க முடியும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பஸில் ராஜபக்‌ஷ மற்றும் அவரின் குடும்ப அங்கத்தவர்களின் அமெரிக்காவிலுள்ள சில சொத்துக்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் நான் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே நான் அழைக்கப்பட்டிருந்தேன். நான் எனது கருத்து தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் தெளிவுப்படுத்தியதுடன் என்னிடம் இருந்த எழுத்துமூல தகவல்கள் சிலவற்றையும் கையளித்தோம். நாங்கள் கையளித்த எழுத்துமூல ஆவணங்களுக்கமைய பெருமளவான சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்ளன.

பஸில் ராஜபக்‌ஷ அமெரிக்காவில் தொழில் செய்யவில்லை. இலங்கையிலேயே தொழில் செய்தார். அப்படியென்றால் அமெரிக்காவில் இருக்கும் சொத்துக்கள் இலங்கையில் சம்பாதித்தவையாகவே இருக்க வேண்டும். மகன், மகள், மனைவி ஆகியோரின் பெயர்களின் சொத்துக்கள் இருக்கின்றன. இவை தொடர்பாக எங்களிடம் இருக்கும் இருக்கும் தகவல்களை வழங்கியுள்ளோம். எங்களுக்கு தெரியாத தகவல்களும் இருக்கலாம். இது தொடர்பாக தேடிப் பார்க்க வேண்டும்.

திருடர்களை பிடிப்பதாக அரசாங்கம் பெறுமதியற்ற நெத்தலிகளை தூக்கிச் செல்லாது உண்மையான திருடனை பிடிக்க வேண்டுமென்றால் அமெரிக்காவிலுள்ள பஸில் ராஜபக்‌ஷவின் சொத்துக்களை சரியாக தேடிக் கண்டுபிடித்தால் திருடன் யார் என்பதனை கண்டுபிடிக்கலாம்.

இதேவேளை சிலரின் பெயரில் இங்கேயும் சொத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவை தொடர்பில் எமக்கு தெரியாது. ஆனால் அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் தொடர்பிலேயே நாங்கள் கூறியுள்ளோம். எங்களிடம் பஸில் ராஜபக்‌ஷ தொடர்பிலேயே கேட்டனர். அவர் தொடர்பிலேயே கூறியுள்ளோம். எங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கூற முடியாதே. முதலில் பஸில் தொடர்பில் கூறியுள்ளோம். அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் இன்னும் தெரிந்தவற்றை கூறுவோம்.

நிதித் சலவை தொடர்பிலேயே நான் முன்னர் கருத்து கூறியிருந்தேன். அது தொடர்பிலேயே என்னிடம் இன்று கேட்டறிந்தனர்.

பஸில் ராஜபக்‌ஷ இலங்கை – அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர். இதனால் அவருக்கு எதிராக விசாரணை நடத்துவதில் சிக்கலில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக காலம் எடுக்கத் தேவையில்லை. பஸிலை பாதுகாக்க அமெரிக்காவுக்கும் தேவையிருக்காது. இதனால் நடவடிக்கைக்கு காலம் எடுக்காது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *