‘மீணடும் வெடி குண்டு மிரட்டல்’: கட்டுநாயக்கவில் அவசரமாகதரையிறக்கப்பட்ட இந்திய விமானம்
குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட இந்திய விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏற்கனவே, இவ்வாறு விமானத்தில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட இரண்டு விமானங்கள் கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது விமானமும் இவ்வாறு தரையிறக்கப்பட்டது.
இந்தியன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான AI-281 என்ற விமானமே இவ்வாறு இன்று மாலை 4.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
புதுடில்லியில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸின் தலைமை அலுவலகத்திற்கு விமானத்தில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இவ்வாறு விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கப்பட்ட உடனே தீயணைப்பு வாகனங்கள், வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள், பயிற்சி பெற்ற வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய்கள், இலத்திரனியல் வெடிகுண்டுகளை கண்டறியும் உபகரணங்கள் பயன்படுத்தும் நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகள், இராணுவத்தினர், மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் என பல தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரழைக்கப்பட்டு விமானம் மோசதனைக்கு உட்படுத்தப்பட்டது.
என்றாலும், விமானத்தில் எவ்வித வெடி குண்டும் இருக்கவில்லை என சோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த 19 மற்றும் 24ஆம் திகதிகளில் இந்தியாவின் மும்பையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இரண்டு விஸ்தாரா எர்லைன்ஸ் விமானங்களும் வெடி குண்டு மிரட்டல் காரணமாக இவ்வாறு அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.