நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள்… அநுர பெரும்பான்மை இல்லாத இன்னாள்… எனக்கும் அநுரவுக்குமுள்ள வேறுபாடு இதுதான்
நான் தோல்வியடைந்ததால் என்னை வீட்டில் இருக்குமாறு அநுர கூறுகிறார். எனக்கு பெரும்பாலானவர்கள் வாக்களிக்கவில்லை. நான் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். அநுரவு க்கும் பெரும்பான்மையான 51 வீதம் கிடைக்கவில்லை. நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி. அவர் பெரும்பான்மை இல்லாத தற்போதைய ஜனாதிபதி. இதுதான் அவருக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
புதிய ஜனநாயக முன்னணியில் கம்பஹா மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் கூட்டம் நீர்கொழும்பு ஒலேன்ரோ ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரணில் விக்ரமசிங்க மேலும் பேசுகையில்,
நானும் கம்பஹா மாவட்டத்தில் பியகம தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக பாராளுமன்றம் சென்றேன். முன்பு கொழும்பு வடக்கு என்றே இருந்தது. நான் இன்று வந்தது யாணைக்கு வாக்குக் கேட்பதற்கல்ல. கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்பதற்காகும். அன்று சஜித், அநுர ஜனாதிபதி பதவியையோ பிரதமர் பதிவியையோ ஏற்க முன்வரவில்லை. நிமல் லான்சா என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் பதவியை பெற்றுத் தரவா என்று கேட்டார். உங்களால் எப்படி முடியும் என நான் திருப்பிக் கேட்டேன். எடுப்பதற்கு யாரும் இல்லை எனக் கூறினார். அந்த ஏற்பாட்டிற்கு அமையவே பிரதமர் பதவி கிடைத்தது.
கம்பஹாவில் திசைகாட்டியில் வருபவர்களுக்கு அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல முடியுமா? கடவத்த நகரை அபிவிருத்தி செய்ய முடியுமா? பியகமவை புதிதாக உருவாக்க இயலுமா? இவற்றைச் செய்யக்கூடிய யார் அந்தப் பட்டியலில் உள்ளனர்? எமது பட்டியலில் பல அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். காலநிலை மாற்றம் தொடர்பான அறிவுள்ள எனது ஆலோசகர் ருவன் இருக்கிறார். நலின் அமைச்சராக இருக்கும்போது தேங்காய் வரிசை இருக்கவில்லை. லசந்த வீதி அபிவிருத்தி தொடர்பாக செயல்பட்டவர், லான்சாவை பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். சிலிண்டரில் உள்ள இவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள்.
அநுர ஜனாதிபதியாக மூன்று மாதம் கூட இருக்கமாட்டார் எனக் கூறுகிறார்கள். நான் அப்படிச் சொல்லமாட்டேன். அவர் பக்கத்திலிருந்து குற்றப் பிரேரணை வருமோ எனக்குத் தெரியாது. அவர் சமர்ப்பித்துள்ள பட்டியல்களை பார்த்தால் மூன்று மாதம் அல்ல மூன்று வாரம் ஓட்ட முடியுமா என்பதே சந்தேகம்.
நாட்டிற்கு அனுபவம் உள்ளவர்கள் இருக்கவேண்டும். எமது அனுபவமுள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்பி பெரும்பான்மையை பெற்றுத்தாருங்கள். அப்படி இருந்தால்தான் மூன்று வருடங்களுக்கு நாட்டை கொண்டு செல்ல முடியும். இல்லாவிட்டால் தேங்காய் வரிசை மாத்திரமல்ல இன்னும் பல வரிசைகள் ஏற்படும்.
என்னை தோல்வியடைந்தால் வீட்டில் இருக்குமாறு அநுர கூறுகிறார். எனக்கு பெரும்பாலனவர்கள் வாக்களிக்கவில்லை. நான் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கும் பெரும்பான்மையான 51 வீதம் கிடைக்கவில்லை. அவருக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி. அவர் பெரும்பான்மை இல்லாது இருக்கும் ஜனாதிபதி.
நான் அவர்களை கிள்ளுவதாக கூறுகிறார்கள். நான் எப்படி கிள்ள முடியும்? அரசிலுள்ள விஜித ஹேரத் கிள்ளுவதனால்தான் நான் அது தொடர்பாக கதைக்க முற்பட்டேன். ஜே.வி.பி. என்.பி.பி. சார்ப்பு அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தங்களைச் செய்தார்கள். நான் இது விடயமாக உதய செனவிரத்ன தலைமையில் குழு அமைத்தேன். சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்க முடியாது என திறைசேரி கூறியது. எனது செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி 2024ல் 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பும் 2025ல் 10 ஆயிரம் ரூபா வழங்கவும் தீர்மானித்தோம். அரச ஊழியர்களின் வருமானம் 50 சதவீதம் குறைந்தன. வாழ்வதற்காக உதவிசெய்ய வேண்டிய நிலை மை ஏற்பட்டது.
ஐ.எம்.எப். செப்டம்பரில் வருவதாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் அனுமதியும் பெறப்பட வேண்டும். எமது செலவை தேசிய உற்பத்தியில் 13 வீதமாக மட்டுப்படுத்தினார்கள். நாம் செய்யும் செலவுகளை அறிக்கையில் உட்படுத்த வேண்டும். அதற்காக அமைச்சரவை அனுமதியை பெற்று அதனை உற்படுத்தி அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். விஜித்த ஹேரத் அதனை உத்தியோகபூர்வமானது அல்ல, சட்ட ரீதியானதுமல்ல எனக் கூறினார்.
என்னை சந்திக்க வந்த எமது கட்சி தொழிற்சங்க பிரதிநிதிகள் என்னிடம் வினவியதற்கு நான் விபரமாக தெளிவுபடுத்தினேன். அவர்கள் அதனை ஊடகங்களிடம் கூறினார்கள். இந்தத் தீர்மானத்தை மாற்றுவதற்கு அவர்களுக்கு சம்பூரண அதிகாரம் உண்டு. இது தொடர்பாக அவதானம் செலுத்துவதாக தெரிவிக்கிறார்கள். அப்படியானால் அமைச்சரவை முடிவை அமுல்படுத்துமாறு நான் கேட்கிறேன்.
அதனை அமுல்படுத்துவது தொடர்பான பொறுப்பு விஷேடமாக கம்பஹா மாவட்ட வேட்பாளர்களுக்கு உள்ளன. விஜித்த ஹேரத், மஹிந்த ஜயசிங்க, பொருளாதாரம் தொடர்பான நிபுணர் அனில் பெர்ணான்டோ ஆகியோர் கம்பஹாவில்தான் உள்ளனர். நீங்கள் உங்கள் பகுதிகளுக்குச் சென்று அவர்கள் இதனைச் செய்யாவிட்டால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக்கு கூறுங்கள். கிராமங்களுப் போய் அரச ஊழியர்க ளுக்கு இதனை தெளிவுபடுத்துங்கள்.
நாம் போட்டியிடுவது அரசாங்கத்தைப் பெற்று நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கேயாகும். அவர் ஜனாதிபதியாக இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை என்றார்.