முச்சந்தி

வடக்கு ரயில் பாதை புனரமைப்பு மோசடியால் 9 இலட்சம் டொலரை இழக்கும் நிலை

அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையும் மற்றும் மாஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் ரயில் பாதை புணரமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் அந்தத் திட்டத்திற்கு பொறுப்பான நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய தண்டப்பண தொகையான 9 இலட்சத்து 20 ஆயிரம் டொலர்களை சில அதிகாரிகளின் மோசடியான நடவடிக்கைகளால் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அனுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கும் மற்றும் மஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் போடப்படும் ரயில் பாதை திட்டத்தில் 91 மில்லியன் டொலர் செலவாகின்றது. அதாவது 28ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகின்றது. இதில் உள்ள நிபந்தனை என்னவென்றால் குறிப்பிடப்பட்ட தினத்திற்குள் இந்த வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்யாவிட்டால் 10 ஆயிரம் டொலர் நாளென்றுக்காக தண்டப்பணமாக ரயில்வே திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும். அது தொடர்பான உடன்படிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டம் இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான ரயில் பாதை அமைப்பு பணி ஜுன் 7ஆம் திகதிக்கு நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் ஜுலை 13ஆம் திகதியே அது நிறைவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி 36 நாட்கள் அதனை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த நிறுவனம் 3 இலட்சத்து 60 ஆயிரம் டொலர்களை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும். இதன் இலங்கை பெறுமதி 160 மில்லியன் ரூபாவாகும்.

அத்துடன் மஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை அமைப்பு பணி ஜுலை 6ஆம் திகதி நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் அது நிறைவடையவில்லை. ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவு செய்யவுள்ளதாக பொறியியலாளர்கள் கூறியுள்ளனர். அப்படி நிறைவு செய்தால் 56 நாட்களாவது தாமதமாகலாம். இதற்காக 5 இலட்சத்து 60 ஆயிரம் டொலர்களை தண்டப்பணமாக செலுத்த வேண்டும். இதன்படி இரண்டு திட்டங்களுக்கும் 9 இலட்சத்து 20 ஆயிரம் டொலர் கள் முழுமையாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் பணிப்பாளரான பொறியியலாளர் அசோக முனசிங்கவை நீக்கியுள்ளனர். இவரை அமைச்சின் செயலாளரே நீக்கியுள்ளார். அந்த செயலாளர் பாரியளவிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரியாவார். சில வருடங்களுக்கு முன்னர் வெள்ளைப்பூடு மோசடியின் போது இப்போதுள்ள அமைச்சரே வர்த்தக அமைச்சராக இருந்தார். அதன்போது சதோச நிறுவனத்தில் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்தவர் தற்போதைய அமைச்சின் செயலாளரே ஆகும். அத்துடன் உழுந்து கொள்கலன்கள் காணாமல் போன சம்பவத்துடனும் இவருக்கு தொடர்பு உள்ளது. அவரையே இப்போது பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளனர்.

ஏன் இவர் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் பணிப்பாளரான பொறியியலாளர் அசோக முனசிங்கவை நீக்க வேண்டும். இந்திய நிறுவனம் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு குறித்த திட்டத்தின் தாமதத்தால் செலுத்த வேண்டிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அதிகாரியே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை ஜனாதிபதி அறியவில்லையா என்று கேட்கின்றோம். டீல் ஒன்றின் ஊடாக இந்திய நிறுவனத்திற்கு அந்த நஷ்ட ஈட்டை செலுத்த வேண்டாம் என்று கூற முயற்சிக்கின்றனர். வேறு டீல் ஊடாக அந்த பணத்தை தமது பைக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.