முச்சந்தி

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன்; ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் கடிதம்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பௌத்த மதத் தலைவர்களுள் ஒருவரான கலகொட அத்தே ஞானசார தேரருக்கான சிறை தண்டனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரருக்கு சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமைவாக ஆடைகள் வழங்கப்பட்டமை நாட்டில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது.

பௌத்த மத பீடங்களும் இதுதொடர்பாக கருசணை காட்டி வருகின்ற நிலையில்,குறித்த விவகாரத்தினை சுமூகமாக தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

குறுகிய அரசியல் நலன்களுக்கு இவ்விவகாரம் பயன்படுத்தப்பட்டு நாட்டில் தேவையற்ற அசௌகரியங்களுக்கு இடமளிக்காத வகையில் தங்களின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பபடும் விரைவான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், சட்ட ரீதியான திருத்தங்கள் ஊடாக குறித்த விவகாரத்திற்கான நிரந்தர தீர்வு உறுதிப்படுத்துகின்றபோது, சிறைகளில் அடைக்கப்படுகின்ற ஏனைய மதத் தலைவர்களும் கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் சட்டத் திருத்தங்களில் தெளிவாக உள்ளடக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

80 களில் வெலிக்கடை, மட்டக்களப்பு போன்ற சிறைச்சாலைகளில் நான் இருந்த காலத்தில் சக கைதிகளாக இருந்த மதத் தலைவர்கள் அநாகரீகமாக நடத்தப்படுவதை பார்த்து வெம்பிய தருணங்கள் நினைவிற்கு வருகின்றன.

பின்னர், பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த காலத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் தலைவர்கள் கடிதங்கள் மூலமும் தங்களின் உறவினர்கள் ஊடாகவும் சிறைகளில் எதிர்கொள்கின்ற அசௌகரியங்களை எனக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவை தொடர்பாக சம்மந்தப்பட தரப்பினருடன் தொடர்பு கொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான அனுபவம் உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகின்றேன்.எனவே தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அனைத்து மதத் தலைவர்களும் சிறை சாலைகளில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவதை சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *