மனைவியை சிறையில் அடைத்து மகிந்தவைக் கொன்று பிரபாகரனின் ஆத்மாவை மகிழ்விக்க அரசு முயற்சி

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மனைவியின் பராமரிப்பு தேவைப்படும் நிலையில், மனைவியை சிறையில் அடைத்து ராஜபக்ஷக்களை கொன்று பிரபாகரனின் ஆத்மாவை மகிழ்விக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மகிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இல்லை. வழமையான நிலையிலேயே இருக்கின்றார். ஆனால் மனைவியின் பராமரிப்புகள் தனக்கு தேவைப்படும் நேரத்திலேயே அவரின் மனைவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எமது வீடுகளில் கனவனுக்கு மருந்துகளை கொடுப்பதற்கும் சரி மனைவி கூடவே இருக்க வேண்டும். இதனால் இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அதாவது இந்த நாட்டுக்கு பெரும் சேவையை செய்தவரே அவர். இவ்வாறான தலைவருக்கு தமது ஓய்வுகாலத்தை இந்த அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுடனேயே கழிக்க வேண்டியுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தில் அனைவரும் திருடியுள்ளனர் என்றும் இதனாலேயே அவர்களை சிறைகளில் அடைக்கின்றோம் என்றும் அரசாங்கம் காண்பிக்க முயற்சிக்கின்றது. ஆனால் யுத்தத்தை முடிவுக்கு வந்தமைக்கான பழிவாங்கலை பிரபாகரனுக்கு பதிலாக அநுரகுமார செய்கின்றார். பிரபாகரனின் ஆத்மாவுக்கு மகிழ்ச்சியை கொடுக்க இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. புலம்பெயர் தமிழர்களுக்கு இது மிகவும் மகிழ்சியை கொடுக்கும். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள மக்கள் கவலையடைகின்றனர். இதற்கு பதிலளிப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ஷ என்ற பெயரை அல்லது அவரை அழிக்க அரசாங்கம் என்ன செய்தாலும் மக்களின் மனங்களில் உள்ள மகிந்த ராஜபக்ஷ மீதான அன்பும் கௌரவமும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் அதிகரிக்குமே தவிர குறையாது என்ற செய்தியை அரசாங்கத்திற்கு கூறுகின்றோம்.
மகிந்த ராஜபக்ஷ என்பவர் அரசியல் கலாச்சாரம் என்றும் அவர் சிரேஷ்டத்துவம் நிறைந்த நபர் என்றும் தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார கூறியிருந்தார். அப்படிக் கூறியவர் இப்போது அவருக்கு என்ன கெட்ட வேலைகளை செய்ய வேண்டுமோ அவற்றை செய்கின்றார். அதற்கான பெயர் வரலாற்றில் இடம்பெறும். ஆனால் மகிந்த ராஜபக்ஷவின் பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்பதனையும் கூறிக்கொள்கின்றோம்.
இதேவேளை மகிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கையின் இறுதிகாலத்தில் செய்யும் இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு கூறுவதுடன், பிரபாகரனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அதற்கு வேறு முறையை தேடுங்கள் என்றும், புலம்பெயர் தமிழர்களிடம் பெற்ற பணத்திற்காக புலம்பெயர் விடுதலைப் புலிகளை மகிழ்விக்க தேவையென்றால் வேறு முறையை தேடிக்கொள்ளுமாறும் கூறுகின்றோம். நீங்கள் செய்யும் வேலைகள் தொடர்பில் வரலாற்றில் எப்போதாவது எழுதப்படும். ராஜபக்ஷக்களை கொன்று புலம்பெயர் விடுதலைப்புலிகளை மகிழ்விக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்று கேள்வியெழுப்புகின்றோம்.
அத்துடன் சிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவர் இல்லாத நோய்க்காக வைத்தியசாலையில் இருக்கின்றார் என்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் கிடையாது. அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். வைத்தியர்கள் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கும் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். . அந்த மருத்துவ அறிக்கையை சவாலுக்கு உட்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்று தெரியவில்லை. உயிர்களுடன் தொடர்புடைய விடயமாகும். அவர் ஆசைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
![]()