கற்பகதரு நூல்விமர்சன நிறைவுப்பகுதி…. சங்கர சுப்பிரமணியன்
பழந்தமிழ் இலக்கியமான பதிணெண்கீழ்க் கணக்கில் வாழ்வியலுக்கு வழிவகுத்த இன்னா நாற்பது இனியவை நாற்பதைப்போன்று பனையினை தொடர்பு படுத்தி அதன் பெருமையை நாற்பது சுவைகளாக்கி நயமுடன் இதுவரை யாரும் பனைபற்றி கூறாத எண்ணற்ற செய்திகளை இயம்பியிருக்கிறார் நூலாசிரியர். இப்போது நிறைவாக முப்பத்தியோராம் சுவை தொடக்கத்திலிருந்து நாற்பதாம் சுவைவரை பதமாக சமைத்தை இதமாக பரிமாறி விமர்சனத்தை நிறைவு செய்கிறேன்.
சுவை முப்பத்தியொன்றில் பனங்கொட்டை பற்றி மேலும் கூறியுள்ளார். பனங்கொட்டைகளில் சில கிழங்கினைத் தராமல் இருப்பதுண்டு. அந்த கொட்டைகளை உடைத்தால் கட்டியாக திரட்சியான பூரான் என்று அறியப்படும் பொருள் இருக்கும். இனிப்பான சுவையுடன் இருக்கும் இந்த பூரான் சத்துள்ள இயற்கை உணவாகும். இதில் மாச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் நிரம்பியிருப்பதுடன் புற்றுநோய் மற்றும் இருதய நோயை தடுக்கும் குணம் கொண்டது என்பதையும் அறியலாம்.
பனங்கிழங்கை தந்தபின்னும் கொட்டை உருமாறாமல் ஊமல் என்ற பெயர்மாற்றம் பெறுகிறது. இந்த ஊமல் புகையிலைத் தயாரிப்பில் புகயிலையை சரியான பதத்துக்கு வாட்டி உலர்த்த எரிபொருளாக பயன்படுகிறது. ஊமலை முழுவதுமாக எரிக்காது பெறப்படும் கரியை நகைத் தொழில் மற்றும் இரும்புத் தொழில் செய்வோர்க்கும் பயன்படுகிறது. ஊமலை வைத்து திருஷ்டிப் பொம்மைகள், அழகான பொம்மைகள், அகப்பைகள், மேசையில் வைக்கும் பேப்பர் வெயிட் போன்றவைகளும் தயாரிக்கப் படுகின்றன.
பனையிலிருந்து நுங்கு, பனம்பழம், கிழங்கு போன்றவை கிடைப்பதை பார்த்தோம். பனையில் ஆண்பனை பெண்பனை என்ற வேறுபாடின்றி அவற்றிலிருக்கும் பாளையில் இருந்து சாறு இறக்கப்படுகிறது. இந்த சாறுதான் கள் என்பதை சுவை முப்பத்து இரண்டில் காணமுடிகிறது. நம் முன்னோரது வாழ்வில் கள் இணைந்துள்ளது அதை களிப்புடனே பகிர்ந்துள்ளார்கள் என்பதை உங்கள் காணமுடிகிறது.
பனை சீவுதல் என்றால் கள் இறக்குதல் பதனீர் இறக்குதல் என்றெல்லாம் அறியப்படுவதை உணர்கின்றோம். ஆண் பெண் பனைகளின் பாளைகளைப் பதப்படுத்திய பிறகே அதிலிருந்து சாறு எடுக்கப்படுகிறது. இப்பதப்படுத்தலை பாளை இடுக்குதல் என்றறியலாம். சாறு எடுக்க பனையில் ஏறவேண்டும். அப்படி ஏறும் வகைகளை நெஞ்சணைத்து ஏறுவது, கைகுத்தி ஏறுவது, குத்தி ஏறுவது மற்றும் இடைக்கயிற்று முறை என்று விரிவாக கூறியுள்ளார்.
சுவை முப்பத்து மூன்றில் பாளையிலிருந்து எடுக்கப்படும் சாறான பூத்துணர்ச்சாறு ஆண் பனைகளைவிட பெண் பனைகளில்தான் அதிகம் கிடைப்பதாக கூறும் இவர் ஆண் பனையில் ஏழுமுதல் எட்டுமாதம் வரையிலும் பெண் பனையில் ஏழுமுதல் ஒன்பதுமாதம் வரை கிடைக்கும் என்கிறார். பெண் பனையில் இளம் பாளையில் கள்ளெடுக்கும் முறையை தட்டுப் பனைமுறை என்றும் முதிர்ந்த பாளையில் எடுப்பதை காய்வெட்டிப் பனைமுறை என்றும் கிறிப்பிடுகிறார்.
இதேபோல் ஆண் பனையில் இளம் பாளையில் கள்ளெடுப்பதை அரிபனை முறையென்றும் முதிர்ந்த பாளயில் கள்ளெடுப்பதை வழுப்பனை முறையென்றும் அறிய முடிகிறது. கள் குடிப்பது நீண்டகாலமாக உள்ளதென்றாலும் அது தீமை பயக்கக் கூடியது என்ற கருத்தை புலப்படுத்தும் இவர் அதற்கு சான்றாக திருக்குறளை காட்டுகிறார்.
இரும்பைப் போல் பனை வலுவாக இருப்பதோடு நூற்றிருபது ஆண்டுகள் வரை இருக்கும் என்பதை முப்பத்து நான்காம் சுவையில் அறிகிறோம். பனைமரத்தால் பல பலன்களை நாம் பெறுவதால் பனை நல் வரம் என்று கூறப்படுவதை நினைவூட்டுகிறார். மனித உடலில் இளமைக்கால உரம் வயது முதிர்ந்த பின் இருப்பதில்லை. ஆனால் பனை ஆண்டுகள் கூடக்கூட வைரம் பாய்ந்து நிற்கிறது என்பது இங்கு வலியிறுத்தப் பட்டுள்ளது.
பனைமரம் வைரம்பாய்ந்ததாக இருப்பதால் எந்தெந்த வகைகளிளெல்லாம் பயன்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவுடன் கூறுகிறார். மேலும் கூடுதலாக இதனை ஒரு நீண்ட பாடலாக தந்திருப்பது சுவையின் மேன்மையை அதிகரித்து தனித்து நிற்கிறது.
வள்ளலாக விளங்கிய சீதக்காதி எவ்வாறு இறந்த பின்னும் வழங்கினாரோ அதுபோன்றே பனைமரம் இருக்கும்போதும் பட்டபின்னும் அல்லது வீழ்ந்த பின்னும் தன் கொடையினை நிறுத்துவதில்லை என்பதை முப்பத்து ஐந்தாம் சுவை முன்னிறுத்துகிறது. பட்டுப்போன பனைமரத்தை கொட்டுப்பனை என்பதையும் அறிய முடிகிறது.
காய்ந்த பனையைப் பற்றி சங்கப்பாடல் என்ன சொல்கிறது என்பதை சங்கப்பாடலின் மூலம் வெளிக்கொணர்ந்து சங்கப்பாடலின் நுட்பத்தையும் நம்மிடம் பகிர்கிறார். சில கொட்டுப்பனைகளில் வைரத்தன்மை இருக்காது. ஆயினும் இறந்த பின்னும் எஞ்சியதைக் கொடுத்த சீதக்காதிபோல் பட்டபின் வைரத்தன்மை இல்லாது போனாலும் விறகாக இருந்து பயனளிப்பேன் என்பதை எண்ணும்போது அன்புடையார் என்பும் உயிர்க்கு என்ற குறள் கண்ணில் நீரை சுரக்க வைக்கிறது.
முப்பத்தாறாம் சுவையில் பதநீர் பற்றிக் கூறும்போது அவர் கூறும் பொருள் விளக்கத்தின் மூலம் தன்னை யாரென்று நிறுவுகிறார். பதநீரின் பல பெயர்களை பட்டியலிடும் இவர் ஆண்பனையிலுருந்து பெறும் பதனீருக்கு சோம்பாணம் என்பதையும் பெண்பனையிலிருந்து எடுக்கும் பதநீரை சுரபாணம் என்பதனை கண்டறிந்திருப்பதன் மூலம் இவரது தேடலின் தன்மைய நாம் உணரலாம்.
பனையிலிருந்து இறக்கப்படும் பதநீர் காற்றிலுள்ள நொதியங்களால் கெட்டுப் போகாதிருக்க பாளையுடன் இணைக்கப் பட்டிருக்கும் மட்பாண்டங்களின் உட்புறத்தில் சுண்ணாம்பு தடவப்படும் தொழில்நுடபத்தையும் பாராட்டுகிறார். பதநீரில் சுண்ணாம்பு சத்து கலப்பதால் பதநீர் மருத்துவ குணம் கொண்டதாகிவிடுகிறது. இந்த மருத்துவ குணம் எலும்பு தொடர்பான நோய்களுக்கு மருந்தாவதுடன் எலும்பு தேயமானத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதையும் அறியலாம்.
சுவை முப்பத்தேழில் பதநீர் எப்படியெல்லாம் உருமாற்றம் பெற்று பனங்கட்டி, பனைவெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு என்று நமக்கு பயனளிக்கிறது என்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். பனங்கட்டி செய்வது குடிசைத்தொழிலாக இருந்ததைக் குறிப்பிடும்போதே இத்தொழில் யாழ்ப்பாணத்தில் மூவாயிரம் ஆண்டுக்கும் முந்தைய பழமையினையும் கொண்டது என்பதையும் தவறாது பதிவிடுகிறார்.
பதநீரை கொதிக்க வைத்தபின் பெறப்படும் பாணியினால் பனங்கட்டி அல்லது கருப்பட்டி எப்படி செய்யப்படுகிறது என்ற செய்முறை விளக்கத்தையும் இதில் காண முடிகிறது. பனங்கட்டியின் சுவையோடு யாழ்ப்பாணப் புலவர் பொன்னாலை கிருஷ்ணம்பிள்ளை அவர்களின் கவிச்சுவையையும் தந்து சுவையை இரட்டிப்பாக்குகிறார்.
குடிசைத் தொழிலாக இருந்த பனங்கட்டி செய்யும் முறை காலத்திற்கேற்ப நவீனமடைந்து 1954ல் யாழ்பாணம் பலாலியில் பனங்கட்டி உற்பத்தி நிலையமாக மாறி தரமான பனங்கட்டிகளை தயாரித்ததாக முப்பத்து எட்டாம் சுவை மூலம் பதிவிடுகிறார். இதனைத் தொடந்து 1970ல் கீரிமலையில் சீனித்தொழில் நிபுணர் திரு.
இரத்தினசிங்கம் அவர்களின் முயற்சியாலும் மேற்பார்வையிலும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டதையும் பதிவிடுகிறார்.
தமிழ்நாட்டில் கருப்பட்டி எங்கெல்லாம் செய்யப்படுகிறது என்று நீண்ட ஊர்ப்பட்டியலைத் தந்திருக்கிறார். கூடுதலாக திருச்செந்தூரில் பனங்கட்டியை புட்டுக் கருப்பட்டி என்றும் திருநெல்வேலி பகுதிகளில் சிறிய குளிகைகளாக நெல்லிக்காய் அளவில் சில்லுக்கருப்பட்டி செய்யப்படுவதையும் அறியமுடிகிறது. நூறு கிராம் எடையுள்ள பனங்கட்டியில் என்னென்ன சத்துக்கள் எந்த அளவில் உள்ளது என்பதை கூறி இருக்கும் முறை பாராட்டுக்குரியது.
புலவர்கள் போற்றும் கருப்பட்டியை மருத்துவர்களும் போற்றுகிறார்கள் அதிலும் சித்த மருத்துவர்கள் அதிகப்படியாகவே போற்றுகிறார்கள் என்பதை சுவை முப்த்து ஒன்பது கூறுகிறது. நம் முன்னோர்கள் உணவே மருந்தாக வாழ்ந்திருந்ததால் மருத்துவ குணமிக்க பனங்கட்டியை உணவில் சேர்த்திருக்கிறார்கள். நாளடைவில் பனங்கட்டிக்குப் பதில் சீனி பயன்பாட்டில் வந்ததால் நீரழிவு நோயும் தொற்றிக் கொண்டது என்ற உண்மையையும் எடுத்துரைத்துள்ளார்.
உணவு உண்டபின் சிறு துண்டு பனங்கட்டியை சாப்பிட்டால் அது எந்தெந்த வகையில் எல்லாம் நம் உடல் நலனை பாதுகாக்கிறது என்பதையும் இங்கு கூறப்பட்டுள்ளது. தாய்ப்பால் மகிமை பற்றிக் கூறும்போது அது தாயிடம் சுரக்காதபோது பால்குடிக்கும் குழத்தையின் நிலைபற்றி கூறுகிறார். தாய்ப்பால் சுரக்க பனங்கட்டி உதவும்முறை அதன் மருத்துவ குணத்துக்கு சான்றாக நிற்பதையும் இங்கு காணலாம்.
கரும்பு தின்னக் கூலியா? என்று நாற்பதாவது சுவை தொடங்குகிறது. இனிப்பை தின்ன யாராவது கூலி கேட்பார்களா என்பதுபோல் இந்நூலப் படிக்க நேரம் பார்ப்பார்களா
என்றே எண்ணத் தோன்றுகிறது. உடனடியாகப் படிக்கத் தூண்டும் வகையில் தகவல்கள் செரிந்து கிடக்கின்றன். இங்கு சீனி எல்லா பாணங்களிலும் பலகாரங்களிலும் அதிக அளவில் பயன்படுவதைக் கூறுகிறார். சீனிக்கு பதில் பனச்சீனியைப் பயன்படுத்தினால் உடல் நலனைப் பாதுகாக்கும் என்கிறார்.
பிரித்தானியர் காலத்தில் பொலிகண்டிப் பகுதியில் பனஞ்சீனி தொழிற்சாலை ஒன்று இருந்ததாகச் சொல்லியிருக்கிறார். 1972 – 1973ல் சிங்கைநகர் பனம்பொருள் உற்பத்தி நிலையத்தால் பனஞ்சீனி உற்பத்தி உச்சநிலை அடைந்தது. 1974 – 1975ல் யாழ்ப்பாணத்தில் பனஞ்சீனி உற்பத்தி அதிகரித்தது. ஆனால் உள்நாட்டுப் போர் அரசின் கொள்கைகளால் பனஞ்சீனித் தொழில் தொடரமுடியா நிலைக்குத் தள்ளப் பட்டது.
பதனீரின் நிறைவாக கழிவுப்பாகு அமைகிறது. இந்த கழிவுப்பாகிலும் ஊட்டச்சத்து நிறைந்துள்றது. பதனீரில் உள்ள சத்துக்கள் யாவும் உள்ளன. இப்பாகில் கந்தகம் இருப்பதால் மக்கள் பயன்படுத்துவதில்லை. இதனை நல்ல முறையில் சுத்திகரிப்பு செய்தால் சுவை மிக்கப் பாகினைப் பெறலாம். இத்தகைய பாகு பானங்களும் பதார்த்தங்களும் செய்யப் பயன்படும். மேலும் புகையிலையை பதப்படுத்தவும் கால்நடைத் தீவனங்களுடனும் கலந்து கொடுக்கலாம் என்கிறார்.
எஞ்சியிருக்கும் கழிவுப்பாகைக் கூட கொடையாய் தந்து கற்பகதரு கோலோச்சுவதை இந்நூலில் கொண்டாடி மகிழ்ந்து குதுகூலமடைந்திருக்கிறார் திரு. ஜெயராமசர்மா அவர்கள். யாம் பெற்ற இன்பத்தை இவ்வையமும் பெற கற்ககதருவின் கொடையை நமக்கு அளித்திருக்கிறார் என்று கூறி நான் சுவயுடன் சமைத்ததை உங்களுக்கு சுவைத்து மகிழ அளித்து மகிழ்கிறேன்.
தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல அள்ள அள்ளக் குறையா செல்வம் போல படிக்கப் படிக்க இனிக்கும் தமிழைப்போல் சுவைக்க சுவைக்க சுவை கூட்டுகிறது கற்பகதரு. எண்ணற்ற தகவல்கள் எல்லையற்று கிடப்பதால் என்னால் ஓரளவுக்குத்தான் சுவையைக்கூற முடிந்தது. சுவைத்தது அனைத்தையும் கூற முற்பட்டால் அது மறுபதிப்பாக முடியும்.
யான் பெற்ற இன்பகம் பெறுக இவ்வையகம் என்பதற்கொப்ப மொத்தச் சுவையையும் முழுமையுடன் சுவைத்து மகிழ கற்பகதருவை சுவையுங்கள் என்ற கூறி இத்தோடு என் சமையலை நிறைவு செய்கிறேன்.
(நிறைவுற்றது)
-சங்கர சுப்பிரமணியன்