“கனகர் கிராமம்”… தொடர் நாவல் அங்கம் – 55 … செங்கதிரோன்
அரசியல் – சமூக – வரலாற்று நாவல்
வார விடுமுறையை மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மனைவியின் வீட்டாருடன் கழிக்கச்சென்ற கோகுலன் தனது மனைவியுடன் ஞாயிறு இரவே தம்பிலுவில் திரும்பினான்.
மறுநாள் காலையில் மனைவி பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்றபின் கோகுலன் மோட்டார் சைக்கிளில் கோமாரிக்குப் புறப்பட்டான்.
‘கோமாரிக் குவாட்டஸ்’ சில் பத்தரைமணி வரைக்கும் உத்தியோகரீதியான அலுவல்களைக் கவனித்துவிட்டுக் கனகரட்ணம் சொன்னபடி பொத்துவில் நீர்ப்பாசனத் திணைக்களச் சுற்றுலா விடுதியை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான்.
கனகரட்ணம் பொத்துவில் நீர்ப்பாசனத் திணைக்களச் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்து பொதுமக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். கோகுலன் உள்ளே சென்று அவரைக் கண்டதும், “தம்பி நேற்றிரவும் பொத்துவில் ‘ஓ.ஐ.சி’ யிட்ட உன்னப்பத்திக் கதைச்சிட்டன். அவனால ஒரு பிரச்சினையும் உனக்கு வராது. எதற்கும் உடன நீ திரும்பாத நில்லு, மத்தியானம் சாப்பிட்டுவிட்டு நானும் மட்டக்களப்பிற்கு வெளிக்கிடுறன். நீயும் என்னோடிருந்து சாப்பிட்டுவிட்டு இருவரும் போகலாம்” என்றார்.
கோகுலன் மறுக்கமுடியாமல் “சரி” என்றான். மோட்டார் சைக்கிளைப் பக்கத்தில் இராஜகோபால் ‘ரி.ஏ’ இன் “குவாட்டஸ்” சில் வைத்துவிட்டுப் போய் பின்னர் ஒருநாள் வந்து எடுத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தான்.
மத்தியானம் பொத்துவில் நீர்ப்பாசனத் திணைக்களச் சுற்றுலா விடுதிக் காப்பாளர் தேவசுந்தரம் சுவையான மதிய உணவைப் பரிமாறத் தொடங்கப் பக்கத்துக் ‘குவாட்டஸ்’ சில் குடியிருக்கும் பொத்துவில், லகுகல மற்றும் பாணமைப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான இராஜகோபால் ‘ ரி.ஏ’ உம் அவரது வேலைகள் மேற்பார்வையாளர் ‘இராமையாக் காடியர்’ என அழைக்கப்பெறும் இராஜநாதனும் வந்து இணைந்து கொண்டனர்.
மதிய உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான வீதியிலிருந்து ‘ ஜீப்’ இல் சுற்றுலா விடுதி வளாகத்துள் நுழைந்து கொண்டிருந்தான்.
அவன் வந்திறங்கியதும்தான் தாமதம் இராஜகோபால் ‘ ரி.ஏ’ கோகுலனைக் காட்டி அவனுக்கு அறிமுகம் செய்தார். அதற்கு அவன் சிரித்துக்கொண்டே “இவரைத் தெரியும்” என்று தனக்குத் தெரிந்த தமிழில் பதில் சொன்னான்.
இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று கருதிய கோகுலன் எதுவும் தெரியாதது போல, “என்னை வந்து சந்திக்க சொன்னீங்களாம். எனது காவலாளி செய்தி சொன்னான்” என்று ஆங்கிலத்தில் கூறினான்.
உடனே அவன் சற்று யோசித்துவிட்டு “ஓன ந” (தேவையில்லை) எனச் சிங்களத்தில் கூறி வைத்தான். “அப்பாடா! ஒரு பிரச்சினை தீர்ந்தது” என்று எண்ணிய கோகுலன் “பொகோமஸ் தூத்தி” (மிக்க நன்றி) என்றான்.
பின்பு அங்கே நின்றிருந்த தேத்தாமர நிழலின்கீழ் நின்றுகொண்டே இராஜகோபால் ரி.ஏ – இராமையா காடியர் – பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கோகுலன் நால்வரும் சிநேகபூர்வமாக உரையாடிக்கொண்டனர்.
பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனக்குத் தெரிந்த தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறிமாறிக் கதைத்து உரையாடலில் உவகையோடு கலந்து கொண்டான்.
கனகரட்ணம் மட்டக்களப்பிற்குப் புறப்படத் தயாராகினார். கார் “சேர்கியூட் பங்களாவின் முன் ‘போர்டிகோ’ வின் கீழ் வந்து நின்றது. கனகரட்ணம் கோகுலனுக்குச் “சற்று நின்று கொள்” எனும் படியாகக் கண்களால் சாடை காட்டிவிட்டுக் காரில் பின் ஆசனத்தில் ஏறி அமர்ந்தார்.
பொலிஸ் பொறுப்பதிகாரி காரின் முன்பக்கம் ஒரு ஓரமாகநின்று கனகரட்ணத்தைப் பார்த்துச் ‘சல்யூட்’ அடித்தார்.
கனகரட்ணம் அந்தப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் காதில் விழக்கூடியவாறு சத்தமிட்டுக் கோகுலனின் பெயர் சொல்லி அழைத்து காரில் பின் ஆசனத்தில் ஏறச்சொல்லித் தனக்கு அருகில் அமரச்செய்தார்.
கார் புறப்பட்டு இன்ஸ்பெக்ரர் ஏத்தத்தால் போய்க்கொண்டிருக்கும்போது “தம்பி! உன்ன அவனுக்கு முன்னால பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் காரில் ஏற்றி எனக்குப் பக்கத்தில இரித்துக் கொண்டது எதற்குத் தெரியுமா?” எனச் சிரித்துக் கொண்டு கேட்டார்.
“சொல்லுங்க” என்றான் கோகுலன்.
“அவன் இப்ப நினைச்சிரிப்பான் நீ அரசாங்க கட்சிக்காரன். அசல் யூ.என்.பி.ஆள் எண்டு” என்றுவிட்டு மேலும் சிரித்தார். கோகுலன் பதிலுக்கு ஒன்றுமே சொல்லாமல் அவனும் அவருடன் சேர்ந்து சிரித்தான்.
கனகரட்ணத்தை எண்ணிப்பார்த்தான். இப்படியும் ஒரு அரசியல் வாதியா? எனப் பெருமிதப்பட்டான்.
கனகரட்ணம் கோகுலனின் மனதில் மலையாக உயர்ந்து நின்றார். தன்னைக் காப்பாற்றுவதில் எவ்வளவு கவனமாக உள்ளார் என்பதை எண்ணி உணர்வுபூர்வமாக உவகையடைந்தான்.
இப்படியானதோர் அரசியல்வாதியுடன் இணைந்து மக்கள் பணியாற்றக் கிடைத்தமை தான் பெற்ற பேறெனவும் உணர்ந்தான்.
தொடர்ந்து பலதையும் பத்தையும் பேசிக்கொண்டே பயணித்தார்கள். வழியில் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் கோகுலன் இறங்கிக் கொள்ள கார் மட்டக்களப்பு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தது.
கோமாரியில் ராஜு போஸ்ட் மாஸ்டரின் வீட்டில் துரைராசரட்ணத்துடன் சந்திப்பு நிகழ்ந்து இரு வாரங்கள் கழிந்திருக்கும்.
கோகுலன் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் கடமைகள் நிமித்தம் நின்றிருந்தபோது ஒரு நாள் பொறியியலாளர் மேர்சா அலுவலகப் ‘பியோனி’ டம் சொல்லியனுப்பியிருந்தார் தன்னைச் சந்திக்கும்படி.
கோகுலன் பொறியியலாளரின் அறைக்குச் செல்லும் அசையும் அரைக்கதவைத் தள்ளிக்கொண்டு உள் நுழைந்தான். பொறியியலாளர் மேர்சா தனக்கு முன்னால் அமரும்படி கையைக் காட்டினார். கோகுலன் அமர்ந்ததும், “மிஸ்ரர் கோகுலன்! தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ‘டி.டி’ துரைராசரட்ணம் சொல்லச் சொன்னதால் சொல்லுகிறேன்” என்ற பீடிகையுடன் தொடங்கியவர் கோகுலனின் முகத்தை ஊன்றி நோக்கினார்.
கோகுலனின் முகத்தில் எந்தச் சலனமும் தென்படவில்லை.
“உமக்கு தமிழ்த்தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாம். அண்மையில் சங்கமன் கண்டிப்பகுதியில் உமிரிக் கடற்கரையில் மீன்வாடியொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் நீரும் இருந்துள்ளீராம். பொலிஸார் தனக்கு முறைப்பாடு செய்துள்ளார்களாம். தான் அவர்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைத்துள்ளாராம். பொலிஸார் சிலவேளை உம்மைக் கைது செய்யலாம். பொலிஸாரின் கண்காணிப்பிலேயே நீர் உள்ளீராம். பொலிஸார் கைது செய்யவந்தால் தன்னால ஒன்றும் செய்ய முடியாதாம்” என்று எல்லாவற்றையுமே துரைராசரட்ணம் தன்னிடம் சொன்னதாக ஒப்புவித்தார்.
பொத்துவில் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி தன்னைக் கோமாரிக்குத் தேடிவந்த மற்றும் கனகரட்ணத்திடம் பொறுப்பதிகாரி கூறிய விடயத்தின் ‘ரிஷி மூலம், நதி மூலம்” எங்கேயுள்ளது என்பது இப்போது கோகுலனுக்குப் புரிந்தது.
கோகுலன் இது விடயமாக அதிகம் பேச விரும்பவில்லை.
“இவைகள் எல்லாம் முழுப்பொய்யான தகவல்கள்” என்று ஒற்றை வசனத்தில் பதில் கூறிவிட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான்.
தன்னைச்சுற்றி துரைராசரட்ணத்தாலும், மேர்சாவினாலும் ஒரு “சதிவலை” பின்னப்படுவதைக் கோகுலன் தெளிவாக உணர்ந்தான்.
அன்றைய தினமும் ஒரு வெள்ளிக்கிழமையானதால் உடனே அலுவகத்திலிருந்து புறப்பட்டுத் தம்பிலுவில் வந்து வார இறுதியை மட்டக்களப்பில் தன் மனைவியின் பெற்றோர் வீட்டில் கழிக்கலாம். அதேவேளை கனகரட்ணத்தையும் அவரது மட்டக்களப்பு கல்லடி அலுவலகத்தில் சந்திக்கலாம் என்ற இரட்டை எண்ணங்களுடன் பாடசாலை முடிந்து வந்த தனது மனைவியையும் கூட்டிக்கொண்டு அன்று மாலையே மட்டக்களப்பை அடைந்தான்.
மாலையே மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்சவீட்டின் அருகிலுள்ள அவளது பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டுக் கல்லடிக்கு விரைந்தான் கோகுலன். நல்லவேளை கல்லடியில் கனகரட்ணத்தின் வாசஸ்தலத்தையடையும்போது அப்போதுதான் அவரும் எங்கோ வெளியிலிருந்து தன் வாசஸ்த்தலத்தையடைந்தார்.
காரில் இருந்து இறங்கிய கனகரட்ணம் கோகுலனைக் கண்டதும் அருகில் வந்து அவனது தோளிலே கைபோட்ட வண்ணம் “வா! தம்பி” என்று உள்ளே அழைத்துப்போனார்.
“இரு தம்பி குளித்துவிட்டு வருகிறேன்” என்று தனது அறையினுள்ளே போனவர். அரைமணிநேரத்தில் குளித்து உடை மாற்றி வேட்டியுடனும், மேலுடம்பில் “பெனியன்” னுடனும் முன்வந்து அமர்ந்தார்.
ஆறுதலாகப் பேசக்கூடிய அற்புதமான சூழல். பக்கத்தில் எவரும் இல்லை. துரைராசரட்ணம் சொன்னதாக மேர்சா தன்னிடம் சொன்ன எல்லாவற்றையுமே ஒன்றும் விடாமல் ஒளிவுமறைவில்லாமல் கனகரட்ணத்திடம் ஒப்புவித்தான் கோகுலன்.
எல்லாவற்றையும் நன்கு செவிமடுத்த கனகரட்ணம் கோகுலனிடம் “இது பற்றி மேசாவுடன் நான் கதைக்கவா? எனது ஆதரவாளன் ஒருவரை மிரட்டுகிறீரா? என்று அவரைக் கேட்கவா?” என்றார்.
“இல்லை. இப்போதைக்கு அது வேண்டாம் அவசியமேற்பட்டால் பிறகு பார்ப்போம். உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால்தான் இதைச் சொன்னேன்” என்றான் கோகுலன்.
“அது சரி! போனகிழமைக்கு முந்தின கிழம கோமாரி ராஜு வீட்டில என்ன நடந்தது?” என்றார் திடீரென்று. இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத கோகுலன் பதில் சொல்லச் சற்றுத் தயங்கினான்.
உண்மையில் கோமாரியில் ராஜு போஸ்ற் மாஸ்டரின் வீட்டில் துரைராசரட்ணத்திற்கும் தனக்கும் நடந்த சம்பாஷணையைக் கனகரட்ணத்திடம் சொல்வதைத் தவிர்க்கவே கோகுலன் எண்ணியிருந்தான். துரைராசரட்ணத்தைக் கனகரட்ணத்திடம் தான்தான் மூட்டிவிட்டதாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் அவனது அக்கறைக்குரியதாக இருந்தது. ஆனாலும், இப்போது கனகரட்ணமே தன்னிடம் நேரில் என்ன நடந்தது என்று கேட்கிறாரே? என்ன பதிலைச் சொல்வது என்று யோசித்தான்.
கோகுலன் உடனே பதில் சொல்லாமல் யோசித்துக்கொண்டிருப்பதைக் கனகரட்ணம் புரிந்து கொண்டிருக்கவேண்டும்.
“தம்பி சங்கடமாயிருந்தால் சொல்லவேண்டாம். உண்மையைச் சொல்ல நீ விரும்பாவிட்டாலும் அங்கு நடந்தவையெல்லம் எனக்குத் தெரியும்” என்றார்.
“எப்படித்தெரியும்? ராஜூ போஸ்ற் மாஸ்ரரா சொன்னவர்” என்று கேட்டான் கோகுலன். “நீ அதை என்னிடம் சொல்லவிரும்பாதபோது அதை வேறுயார் என்னிடம் சொன்னால் உனக்கென்ன? அந்தக் கதையை விடு” என்றார்.
அவரிடம் அச்சம்பவம் பற்றி யார் சொன்னது என்பதைத் தன்னிடம் அவர் சொல்வதை அவர் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட கோகுலன் அதைப் பற்றி மேலும் கேட்பதைத் தவிர்த்துக் கொண்டான்.
ராஜூ போஸ்ற் மாஸ்டர் அவரிடம் இதைச் சொல்லியிருக்கலாமோ! என்ற சந்தேகம் கோகுலனுக்கு எழுந்தாலும்கூட துரைராசரட்ணம் ராஜூவின் நெருங்கிய நண்பர் என்பதால் ராஜூ அதைச் சொல்வதற்குச் சாத்தியமில்லையென்றும் எண்ணினான்.
பின்பு கனகரட்ணம் கோகுலனைத் தன்னுடன் இருந்து இரவு உணவும் எடுத்துவிட்டுப் போகும் படி கேட்டதால் கோகுலனும் அவருடன் நெடுநேரம் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தபடி பலதும் பத்தும் பேசிக்கொண்டார்கள்.
அப்போது கனகரட்ணம் பொத்துவில் அறுபதாம் கட்டையில் முப்பது வீடுகளையும் வீடமைப்பு அதிகாரசபை நிர்மாணிக்கத் தொடங்கிவிட்டதைக் கூறி அப்பகுதியால் போய்வரும்போது அதனைக் கண்காணித்துக் கொள்ளும்படி கூறினார்.
அவ்வருட இறுதிக்குள் அவ்வீடுகளைப் பூர்த்தியுறச் செய்து பயனாளிகளிடமும் அவற்றைக் கையளித்து அந்த இடத்திற்குக் கனகரட்ணத்தின் பெயரைச் சூட்டவேண்டுமென்ற தனது ஆசையை மீண்டுமொருமுறை மனதில் புதுப்பித்துக் கொண்டான் கோகுலன்.
நீண்ட நேரம் கனகரட்ணத்துடன் உரையாடிவிட்டுக் கோகுலன் தன் மனைவியின் பெற்றோரின் வீடு வந்து சேர இரவு பத்து மணியாகிவிட்டது.
சனியும், ஞாயிறும் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் தங்கியிருந்துவிட்டு திங்கள் காலை மனைவியுடன் தம்பிலுவிற்கு மீண்ட கோகுலன் வழமைபோல் மனைவி பாடசாலைக்குக் கடமைக்குச் சென்ற பின் தொடர்ந்து பயணித்துக் கோமாரியை அடைந்தான்.
கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்திட்டத்திற்கான மதிப்பீடு சம்பந்தமான சில மேலதிக தொழில்நுட்பத் தகவல்களைக் கேட்டு நீர்ப்பாசன அமைச்சிடமிருந்தும் நீர்ப்பாசனப் பணிப்பாளரிடமிருந்தும், அம்பாறைப் பிராந்திய பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளர் ஊடாகக் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளருக்கு வந்த கடிதங்களின் பிரதிகளை இணைத்து, தாமதமின்றி உரிய தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளரிடமிருந்து கோகுலனுக்கு முகவரியிட்டு வந்திருந்த உத்தியோகபூர்வ கடிதம் அங்கு அவனுக்காகக் காத்திருந்தது.
கேட்கப்பட்டிருந்த மேலதிக தொழில்நுட்பத் தகவல்களை ஒருவார இடைவெளியின் பின் கல்முனைக்கு எடுத்துச் சென்று நீர்ப்பாசனப் பொறியியலாளரிடம் சமர்ப்பித்தான்.
“இவ்வளவு விரைவாக எல்லா வேலைகளையும் முடித்துவிட்டீரே!” என்ற பாராட்டுதலுடன் பொறியியலாளர் மேசா அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆவன செய்தார்.
அந்தப் பாராட்டுதல் உண்மையிலேயே அவரது உள்ளத்திலிருந்து வந்ததா என்பதில் கோகுலனுக்குச் சந்தேகமே.
கல்முனையிலிருந்து தம்பிலுக்குத் திரும்பியபோது கோகுலனை வேறொரு பிரச்சினை காத்திருந்தது.
கோகுலனின் வீட்டடியில் வீதியில் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளப்பாய்ச்சலின் கீழுள்ள கஞ்சிக்குடிச்ச ஆறு – சாவாறு – கோம்பக்கரச்சி ஆகிய கண்டங்களின் வட்டவிதானைகள் மூவரும் நின்றிருந்தனர்.
கோகுலனைக் கண்டதும் மூவரும் ஏககாலத்தில் “வாங்க ஜயா! உங்களத்தான் பார்த்துக் காத்திட்டு நிற்கிறம்” என்றார்கள். “ஏன்? என்ன பிரச்சினை” என்று கேட்ட கோகுலன் மூவரையும் உள்ளே அழைத்துச் சென்று வீட்டின் வரவேற்பு மண்டபத்தில் அமரச் செய்தான்.
கோகுலன் மனைவியிடம் தேநீருக்குக் கண்காட்டிவிட்டு வட்டவிதானை மூவரிடமும் “கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறி அறையினுள் சென்று உடுப்பை மாற்றி கிணற்றடிக்குப் போய் முகம் கழுவி, கை, கால்கள் அலம்பிட்டு மீண்டும் வந்து அமர்வதற்கும் மனைவி நான்கு பேருக்கும் தேநீர் கொணர்ந்து தருவதற்கும் சரியாக இருந்தது. நால்வரும் தேநீரைப் பருகினர்.
கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்கண்டத்தின் வட்டவிதானை கணேசமூர்த்திதான் பேச்சை ஆரம்பித்தார். “ஐயா! இந்த வருஷம் கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளத்துக் கட்ட உயத்திர வேல தொடங்கிடுமா? என்றார்.
“ஏன் எதற்காகக் கேக்கிறீங்க” என்றான் கோகுலன்.
“இல்ல கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குள வேல தொடங்க இரிக்கிறபடியா இந்த முறை மாரிப்போகம் செய்யிறத்துக்கு ஆரம்பக்கூட்டம் நடத்த ஏலா எண்டு ஜி.ஏ.சொல்லிப்போட்டார்” என்றார்.
“ஏனாம்?” என்று எதிர்க்கேள்வியைப் போட்டான் கோகுலன்.
“குளத்துவேல நடக்கப்போகிறபடியா குளத்திலிரிந்து இந்த மாரிப்போகத்துக்குத் தண்ணி தர ஏலாதாம். உங்கட திணைக்களத்துப் பெரியவர்தானாம் ‘ஜி.ஏ’ க்கு இப்படி அறிவிச்சி அதாலதான் ஜி.ஏ இப்படிச் சொல்லியிரிக்கார்” என்றார் சாவாறுக்கண்ட வட்டவிதானை மார்க்கண்டு.
“நீர்ப்பாசனத் திணைக்களப் பெரியவரெண்டா ஆர். துரைராசரட்ணம் என்ஜினியர்தான். உங்கட தம்பிலுவில் ஊர்தானே உங்களுக்குச் சொந்தக்காரராகவும் இரிப்பார். நான் சொன்னண்டு சொல்லாம அவரிட்டப்போய்க் கேளுங்களன்” என்று வழியைக் காட்டினான் கோகுலன்.
அதற்குக் கணேசமூர்த்தி “ஜயா! அவர் எங்கட ஊர்தான். எங்கட சொந்தக்காரார்தான். விவசாயிகள் கொஞ்சப்பேர் அவரிட்டப் போய்க்கேட்டதற்கு அப்படிச்செய்ய ஏலாது எண்டு போட்டார். அதற்குத்தான் உங்களிட்ட ஆலோசன கேட்கலாமெண்டு வந்தநாங்கள்” என்றார்.
கோகுலன் சிறிது நேரம் அமைதியாக இருந்து யோசித்தான். இந்த விவசாயிகளுக்கு எப்படி உதவ முடியும் என்று அதற்கு வழியைத் தேடியே சிந்தித்தான். அமைதிக்குப்பின் கோகுலன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.
“ஆரம்பக் கூட்டம் வைப்பதன் நோக்கம் என்ன?”
பதிலேதும் கூறாமல் மூவரும் ஆளையாள் பார்த்தபடி அமைதிகாத்தனர்.
கோகுலன்,
“ஆரம்பக்கூட்டம் நடத்துவது நெற்செய்கையைச் சட்டப்படி அங்கீகரிப்பதற்காகத்தான். சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டால்தான் வெள்ளம் – வறட்சி – நோய் போன்ற அனர்த்தங்களால் பயிருக்குச் சேதமேற்படுமாயின் நட்டஈடோ அல்லது காப்புறுதியோ கோரமுடியும். சட்டப்படி நெற்செய்கை அங்கீகரிக்கப்படாவிட்டால் அவற்றைக் கோரமுடியாது. கோரினாலும் கிடைக்காது. எனவே, ஆரம்பக் கூட்டமில்லாமல் நீங்கள் நெற்செய்கை செய்தால் அது சட்டரீதியானதல்ல” என்பதே நிலை.
ஆனால், நான் சட்டத்தை வழைத்து உங்களுக்கு உதவ ஆயத்தமாயுள்ளேன். அது எப்படியென்றால், கஞ்சிக்குடிச்ச ஆற்றுக்குளவேலைகள் அடுத்தவருடம் இரண்டாம் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படுவதற்கான சாத்தியமேயுண்டு. நீங்கள் இவ்வருடம் நேரத்திற்கு விதைத்தால் அடுத்த வருடம் இரண்டாம் மாத நடுப்பகுதிக்குள் அறுவடை முடிந்துவிடும். எனவே, நீங்கள் இம்முறை செய்யப்போகும் மகாபோகச்செய்கை குளவேலைகளைப் பாதிக்காது. அதாவது குளவேலைகளில் குறுக்கீடு செய்யாது. குளம் எனது பொறுப்பில் உள்ளது. குளத்துத் துருசித்திறப்பு எனது பொறுப்பிலேயே உள்ளது. குளத்தைத் திறந்து வெள்ளாமைக்குத் தண்ணீர் தருவது எனது பொறுப்பு. ஆனால், இதனைச் சட்டரீதியற்றே உங்களுக்கு உதவுவதற்காகச் செய்யப் போறன். ஆகவே நான் இப்படிச் சொன்னதாக எவரிடமும் போய்க் கூறவேண்டாம். இவ்வருடம் மகாபோக வேளாண்மைச் செய்கைக்குரிய ஆயத்தங்களை அமைதியாகச் செய்யுங்கள். உங்களுக்குத் திருப்திதானே” என்றான்.
“இப்படியொரு துணிச்சலான – விவசாயிகளுக்கு உதவக்கூடிய ஒரு ‘ரி.ஏ’ எங்களுக்குக் கிடைச்சதிக்கு நாங்க ஆண்டவனுக்கு அடுத்ததாக உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றார் கணேசமூர்த்தி.
“நன்றி ஒன்றும் வேண்டாம். வேளாண்மை செய்து நல்ல விளைச்சலைப் பெற வாழ்த்துகிறேன். சந்தோஷமாகப் போய் வாருங்கள்” என்று அவர்களை வழியனுப்பிவைத்த கோகுலன்,
சிரித்துக்கொண்டே “நான் சொன்னதை மறந்து விடாதீர்கள். நான் இப்படி உதவி செய்வதாக எவரிடமும் போய்க் கூறிவிடாதீர்கள். என்னைக் காட்டிக்கொடுக்க மாட்டீங்கதானே” என்றான்.
“என்ன ஐயா இது! எங்கட உயிர்போனாலும் உங்களக் காட்டிக்கொடுக்கமாட்டம்” என்று கூறி வட்டவிதானைகள் மூவரும் விடைபெற்றார்கள்.
(தொடரும் …… அங்கம் – 56)