தாக்குதலில் காலை இழந்த பெண் ஊடகவியலாளர் ஒலிம்பிக் சுடரை ஏந்தினார்
இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் மேற்கொண்டவேளை காயமடைந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரான்ஸ் தலைநகரில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார்.
ஊடகப்பணியின் போது கொல்லப்பட்ட காயமடைந்த பத்திரிகையாளர்கள் நினைவாக அவர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் முழுவதிலும் பல்வேறு துறைகளை சார்ந்த பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்கின்றனர்.
2023ம் ஆண்டு ஒக்டோபர் 13ம் திகதி லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஏஎவ்பியின் கிறிஸ்டினா அசி.
இஸ்ரேல் லெபனான் எல்லையில் இஸ்ரேலிய படையினருக்கும் ஹெஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான மோதல் குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்தவேளை இவர் காயமடைந்தார்.
கடும் காயங்கள் காரணமாக இவரது வலதுகால் துண்டிக்கப்பட்டது.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ரொய்ட்டரின் வீடியோ ஊடகவியலாளர் இசாம் அப்டெல்லா கொல்லப்பட்டார், அல்ஜசீராவின் ஊடகவியலாளர்கள்காயமடைந்தனர்.
நவம்பரில் ஊடகவியலாளர்கள் மீது தென் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில் அல்மயாடின் வலையமைப்பை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பரிசின் புறநகர் பகுதியான வின்செனெசில் அசி சக்கரநாற்காலியில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த ஏஎவ்பியின் வீடியோ ஊடகவியலாளர் டைலன் கொலின்சும் அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.
தாக்குதலில் கொல்லப்பட்ட இசாமும் உயிருடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கவேண்டும்,என கண்ணீரை அடக்கமுடியாமல் அசி தெரிவித்துள்ளார்.
ஏனையவர்கள் போல நடந்துகொண்டு சிறந்த உடல்நிலையுடன்ஊடகவியலாளர்களை கௌரவிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கவேண்டும் என கருதுகின்றேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா ஏஎவ்பி ரொய்ட்டர் உட்பட பல சர்வதேச ஊடக நிறுவனங்கள் இஸ்ரேல் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு இலக்குவைப்பதாக தெரிவித்துள்ளன.
தங்கள் ஊடகவியலாளர்கள் மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து தொலைவில் நிலைகொண்டிருந்தனர், அவர்களின் வாகனங்களில் அவர்கள் ஊடகவியலாளர்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததாக ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் திட்டமிட்டே தாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள ரொய்ட்டரும் மனித உரிமை கண்காணிப்பகமும் இது யுத்தகுற்றம் விசாரணைகள் அவசியம் என தெரிவித்துள்ளன.
காசா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் இதுவரை 108 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.