பைடன் வாபஸ் முடிவு; திரும்பவும் முதலில் இருந்து… ஆத்திரமடைந்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முடிவுடன் பைடன் களம் இறங்கினார்.
ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த பைடன், அதற்கான அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார்.தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவித்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார்.
எனினும், 2025-ம் ஆண்டு ஜனவரி வரை அதிபராக தொடர்ந்து பதவியில் நீடிப்பார். இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.ஜோ பைடனை சுற்றியிருக்கும் அனைவருக்கும், பைடன் அதிபராக இருப்பதற்கோ அல்லது அதிபர் தேர்தலில் போட்டியிடவோ தகுதியில்லாதவர் என நன்றாக தெரியும் என டிரம்ப் கூறியுள்ளார்.இதுபற்றி டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக பதிவில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜோ பைடன், அதிபர் தேர்தலில் போட்டியிட திறனில்லாத நபர்.
அவர் ஒருபோதும் அதிபராக ஆகியிருக்க கூடாது. மக்களுக்கு சேவையாற்ற அவர் சரியான ஆள் கிடையாது. நம்முடைய நாட்டை அவர் அழித்து கொண்டிருக்கிறார் என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்.இல்லை… நான் கேட்கிறேன். இதில், மருத்துவர்கள், போலியான செய்தி ஊடகம் என அனைவருக்கும் எல்லாம் தெரிந்து இருந்தும், பைடனை சுற்றியிருந்தவர்கள் செய்த மோசடிக்காக அவர்கள், குடியரசு கட்சிக்கு இழப்பீடு தர வேண்டும் அல்லவா?மோசடி பேர்வழியான பைடனுக்கு எதிராக நாம் செலவிட்ட நேரம், பணம் எல்லாம் வீணாகி விட்டது. தேர்தல் விவாதத்தில் பங்கேற்று விட்டு, போட்டியில் இருந்து வாபஸ் பெற்று விட்டார். இதனால், நாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.
இத்துடன் இது முடியவில்லை. போட்டியிடவில்லை என்று அவர் இன்று கூறிய விசயங்களை, நாளை தூங்கி எழுந்திருக்கும்போது மறந்து விடுவார். பைடனுக்கு கொரோனா தொற்றே கிடையாது. அவர் ஜனநாயகத்துக்கு ஓர் அச்சுறுத்தல் என்று டிரம்ப் சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளார்.தொடர்ந்து அவர், நாட்டை யார் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்? கபட நாடகம் போடும் பைடன் எங்கே இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது. அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்றால் நாட்டையும் ஆட்சி செய்ய முடியாது என்று டிரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார்.
பைடன் போட்டியிடும் முடிவில் இருந்து விலகிய சூழலில், மீண்டும் முதலில் இருந்து டிரம்ப் தேர்தல் பணியாற்ற வேண்டும். கமலா ஹாரிஸ், அவர் சார்ந்த ஜனநாயக கட்சியால் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ள சூழலில், அவரை எதிர்கொள்ளும் வகையில், டிரம்ப் பிரசாரத்திற்கு தயாராக வேண்டிய சூழல் உள்ளது.