இலக்கியச்சோலை

கற்பகத்தரு…03… சங்கர சுப்பிரமணியன்.

சங்கர சுப்பிரமணியன்

மூன்றாம் அங்கமாக முகிழ்த்து வரும் கற்பகதரு நூலின் விமர்சனத்தை இருபத்தோராம் சுவைதொட்டு முப்பதாம் சுவைவரை சுவை குன்றாது சமைக்கிறேன்….. 

பனை நுங்கு கிடைக்கும் காலம் வைகாசி மாதம் முதல் ஆடிமாதம் வரை நீடிக்கும். இந்தக் காலத்தில் பனை நுங்கு வியாபாரம் இந்தியாவில் களைகட்டுமென்பதை இருபத்தோராம் சுவையாகத் தருகிறார் ஆசிரியர். இந்த வியாபாரத்தை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் இருப்பதை அறிய முடிகிறது.

நுங்கு சுவைத்து சாப்பிட மட்டுமே என்று எண்ணாமல் இதில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்களை தன்னுள் வைத்திருப்பதையும் அறியலாம். கண்பார்வை நீடிக்கவும் உடல் எடை குறைந்து அழகுடன் விளங்கவும் நுங்கு உதவுகிறது என்பதையும் அறியமுடிகிறது. மேலும் நுங்கிலே இருக்கும் மேல் தோல் சதைப்பகுதி மற்றும் நீர் என்று மூன்றும் உள்ளன. இதில் மேல்தோலில் பல உயிர்ச்சத்துக்கள் நிரம்பியிருப்பதை நினைவூட்டுகிறார்.

யோகத்தைப் பற்றி நுங்கு கூறுகிறது என்பதை இருபத்தி இரண்டாம் சுவை கூறுகிறது. நுங்கை சீவும்போது மூன்று கண்களைத்தான் பார்க்கமுடியும். ஆனால் அதில் நான்கு கண்கள் இருந்தால் யோகமாம். ஏழு கண்கள் இருந்தால் இருந்தால் இன்னும் சிறப்பு. யோகம் யாருக்கு நுங்கு விற்பவருக்கா? அல்ல விற்பவருக்கா என்பதை மட்டும் விடுகதையாக்கியுள்ளார்.

நுங்கில் போசனைக் கூறுகள் எந்தெந்த விகிதத்தில் கலந்திருக்கிறது என்பதனை பட்டியலிட்டுத் தந்திருப்பது பாராட்டக் கூடியது. நுங்கினை குலையாக கோவில் திருவிழரக்களில் அலங்காரத்துக்காக கட்ட தொங்கவிடப்படுவதை இங்கே பதிவாக்கியிருக்கிறார். நுங்கை சுவைத்தபின் அந்த காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஆடு மாடுகளுக்கு தீவனமாக்குவது அரியதோர் தகவல்.

இருபத்துமூன்றாம் சுவையில் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று முருகனால் வினவப்பட்ட ஔவையார் மூவேந்தர்களுக்காக உடனே பனம்பழம் கிடைப்பதற்காக பாடியதை அறிந்தேன். பனம்பழம் மரத்திலிருந்து கீழே அல்லிக்குளத்தில் விழுவதைத் தொடரந்து அல்லிக் குளத்தில் நடந்தேறிய நிகழ்ச்சியின் வர்ணனயையும் சுவைமிகுந்தே உள்ளது.

சுவை இருபத்தி நான்கில் இவர் தனது கவலையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். யாருக்குமே இப்படியொரு கவலையுடன் கலந்த சிந்தனை ஓட்டம் ஏற்பட்டிராது என்பதை அடித்துக் கூறலாம். அவரது கவலை, பழக்கடைகளில் பற்பல பழங்களை வைத்திருந்தாலும் சொந்த மண்ணின் பழமான பனம்பழம் இல்லையே என்ற ஆதங்கம்தான்.

பனம்பழம் கருப்பாக மட்டுமே இருக்கும் என்ற நமது எண்ணத்தை உடைத்து அது பல நிறங்களில் இருக்கும் என்ற உண்மையை இச்சுவை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இலங்கையில் புத்தளம், மண்டல்கண்டல், ஆலன்குடா பகதிகளில் பன்னிரெண்டு வகைகள் இருப்பதையும் இச்சுவை கூறுகிறது.

பழக்கடைகளில் பனம்பழம் விற்பனைக்கு வைக்கப்படவில்லையே என்ற நூலாசிரியரின் ஏக்கப் பெருமூச்சை தீர்த்து வைக்கிறது இருபத்தியைந்தாம் சுவை. சேலம் பகதிகளில் விவசாயிகள் பலர் சாலையோரங்களில் பனம் பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்வதுதான் அது. அங்கே விற்பனை செய்பவர்கள் முருகனாக மாறி சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா என்றுகேட்டு நம்மை ஔவையாராக்கி நம் தேவையை நிறைவேற்றுவார்களாம்.

பனம்பழத்தின் சிறப்பே அதன் களித்தன்மைதான் என்பதோடு பனங்காய்ப் பனியாரத்தை நமக்கு நினைவட்டி தங்கத்தாத்தா நாவலியூர் சோமசந்தரப் புலவரின் புகழையும் கவிதை மூலம் காட்டி நிற்கிறார். அதுமட்டுமா? கோதுமைப் பனியாரத்தின் செய்முறைகளையும் கூறி தனது பன்முகத்தன்மைக்கு சான்றாய் நிற்கிறார்.

சுவை இருபத்தியாறில் மற்ற பழங்களைப் பெறும் விதத்திற்கும் பனம் பழத்தை பெறும் விதத்துக்குமுள்ள வேறுபாட்டை கூறும்போது எவரும் பனம் பழத்தை பறிப்பதில்லை என்ற உண்மையை கூறுகிறார். அது தானாகத்தான் பழுத்து விழுகிறது. பனம்பழம் சர்க்கரை நோயை கட்டுப் படுத்துமென்றும் பனம்பழச்சாறு தோல்வியதியை அகற்றும் என்றும் மருத்துவ குணத்தையும் இதில் நாம் அறியலாம்.

பனாட்டு பற்றியும் அதன்வகைகளான பாணிப் பனாட்டு மற்றுத் தோற்பனாட்டு பற்றியும்
அதலுண்டான சிறப்பைப்பற்றுயும் அத்தோடு யாழ்ப்பாண மக்களின் உணர்வு பற்றியும் அறியமுடிகிறது. இதனை சோமசுந்தரப் புலவர் பார்வையில் தென்படுவதையும் தெவிட்டாத அமுதாக சுவைக்க முடிகிறது. கொழும்பு வாழ் உறவுகளுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் உறவுகள் இராசவள்ளிக்கிழங்கு, மாம்பழம், நல்லெண்ணெய், எள்ளுப்பாகு இவற்றுடன் பனாட்டையும் எடுத்துச் செல்வதாக யாழப்பாணத்தின் செழுமையை படம்பிடித்து காட்டுகிறார்.

பனாட்டு செய்யும் முறையில் சுகாதாரம் எந்த அளவை கடைப்பிடிக்கப் பட்டது என்பதில் ஐயப்பாடு இருப்பினும் இன்றைய நவீன முறையில் சுகாதாரம் கடைப்பிடிக்கப் படும் விதத்தை விளக்கியிருப்பதை சுவை இருபத்தேழில் காணமுடிகிறது. பனங்களி எப்படியெல்லாம் பனம்பாணம், பனங்கோடியல், பனம்பழ ஐஸ்கிரீம், பனம் பழ ஜாம், பனம்பழ யோக்கட், பனம்பழ சாக்லேட், பனம்பழ கேக், பனம்பழ குக்கீஸ் என்று மாறுகிறது என்பதையும் அறிகிறோம்.

பனம்பழமானது சுவைத்து மகிழ்வதோடு மட்டும் நின்றுவிடாமல் பனம்பழத்தில் சவர்க்காரம், ஷாம்பு, முகத்தில் பூசப்படும் அழகுசாதனப் பொருட்களாகவும் வந்திருப்பதை பார்க்கிறோம்.

சுவை இருபத்தெட்டில் பனங்கொட்டையைப் பற்றிக் கூறும் பாங்கு பாராட்டுக்குரியது. “வந்தவன் வல்லவனானால் வறுத்த முத்தும் முளைக்கும்”என்ற சொலவடையை மேற்கோள்காட்டி சங்கு சுட்டாலும் பலன்தரும் என்பதைப்போல் வறுத்த முத்தும் முளைக்கும் என்பதை பனம் பழத்தை சுட்டபின்னும் முளைக்கும் என்ற கூற்றால் நிறுவுகிறார்.

பனங்கொட்டையிலிருந்து பனங்கிழங்கு சாகுபடி செய்யும் முறையையும் அதை மண்ணுக்கு தகுந்தபடி எப்படி எல்லாம் செய்யப்படுகிறது என்பதையும் விளக்கமாக
இச்சுவை சொல்கிறது. மண்ணின் தன்மைக்கு தக்கபடி கிழங்கும் இருக்கிறது. மணற்பகுதியில் வளரும் கிழங்குகள் மாப்பிடிப்புடன் அதிகத் திரட்சியாகவும் நீளமாகவும் இருக்கும் என்பதையும் அறிகிறோம்.

இருபத்தொன்பதாம் சுவையில் பனை விதைகளில் நூற்றுக்கு தொன்னூறுக்கும் மேல் முளைக்கும் என்ற உண்மை தெரிய வருகிறது. பனங்கிழங்கை எப்படி எல்லாம் சாப்பிடலாம் என்பதை மூன்று விதமாக விளக்கப் பட்டுள்ளது. பனங்கிழங்கை வெயிலில் காயவத்து மாவாக்குவதுதான்
ஒடியல்மா ஆகும். இந்த மா தான் பல பதார்தங்களை செய்வதற்குண்டான மூலப் பொருளாகும்.

இந்த மாவிலிருந்து அவரவர் விருப்பப்படி மரக்கறிகளைச் சேர்த்தும் அசைவம் சேர்த்தும் சமைக்கப்படுவதை ஆசிரியர் கூறுகிறார். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் இருப்பதையும் கூறும் இவர் பச்சைக் கிழங்கை இடித்து எடுத்து நீரில் கரைத்து வடித்தெடுத்த வெயிலில் உலரவைத்த பின் கிடைக்கும் மா பாலூட்டும் பெண்களுக்கு சிறந்ததெனவும் குறிப்பிடுகிறார். ஒடியல்மா பிட்டு ஏழைகளின் பசிபோக்கும் உணவாகவும் வலிமையையும் தருகிறது என்பதும் சிறப்ப.

முப்பதாம் சுவையில் பனங்கிழங்கை பச்சையாகவும் அவித்தும் சுட்டும் சாப்பிடலாம் என்ற முறைகளைக் கூறுகிறார். அவித்த கிழங்கை பச்சைமிகாய், தேங்காய் மற்றும் உப்புடன் கலந்து உரலில் இடித்து உருண்டையாக உருட்டி சாப்பிடும் முறையை கூறும்போதே நாவில் நீர் சுரக்கிறது.

அவித்த கிழங்கை வட்டமாக நறுக்கி காயவைத்து எடுப்பதற்கு தோட்டுப் புழுக்கொடியல் சீவற் புழுக்கொடியல் என்று பெயர். பழுக்கொடியல் மாவிருத்து தயாரிக்கப் படும் “பாம்போஷா” என்ற உணவுப் பொருள் சிறுவர், கற்பினி, மற்றும் பாலாட்டும் தாய்க்கு ஏற்ற உணவாக யாவருக்கும் பயன்படுகிறது. மேலும் புழுக்கொடியல் மாவினால் கேசரி, அல்வா, பான்கேக், லட்டு, பிஸ்கட், வடை, பான்ஸிகேக், பட்டர்கேக் என் பலவகையான உணவுப் பொருட்களை தயாரிக்கலாம் என்பதையும் தெரியலாம்.

-சங்கர சுப்பிரமணியன்.

(வளரும்)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.