இணைய நிறுவனங்களைக் குறிவைக்கும் மோசடித் தடுப்புச் சட்டம் கொண்டுவரவுள்ள ஆஸ்திரேலியா
மோசடிச் செயல்கள் நடக்கத் தங்கள் தளங்கள் வழிவகுப்பதை இணைய நிறுவனங்களைத் தடுக்கும் சட்டத்தை இவ்வாண்டிறுதிக்குள் அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
அந்தச் சட்டத்துக்கு இணைய நிறுவனங்கள் இணங்காவிட்டால் அவற்றுக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படலாம் என்று அந்நாட்டின் பயனீட்டாளர் விவகாரங்களை நிர்வகிக்கும் முன்னணி அமைப்பு வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 12) தெரிவித்தது. அதனால் ஆஸ்திரேலியாவில் மீண்டும் அதிகாரிகளுக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் எழுந்துள்ளது.
பயனீட்டாளர்களைப் பாதுகாக்கும் வண்ணம் மோசடிகளைத் தடுக்கும் கட்டாய விதிமுறையை வரைவது குறித்து ஆஸ்திரேலிய போட்டித்தன்மை, பயனீட்டாளர் குழுவும் (ஏசிசிசி) அந்நாட்டின் நிதிப் பிரிவும், இணைய, வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகின்றன. அத்தகைய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயனீட்டார்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும். பயனீட்டாளர்களுக்குப் புகார் அளிக்கக்கூடிய சேவையை வழங்குவதும் அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.
ஆஸ்திரேலியாவில் சுரங்க வர்த்தகச் செல்வந்தரான ஆண்ட்ரூ ஃபாரஸ்ட்டின் முகத்தைக் கொண்டு போலி மின்னிலக்க நாணய விளம்பரங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றால் பல ஆஸ்திரேலியர்கள் மில்லியன் கணக்கான டாலரைப் பறிகொடுத்துள்ளனர்.
திரு ஆண்ட்ரூ ஃபாரஸ்ட், இதன் தொடர்பில் ஃபேஸ்புக் சமூக ஊடகத்தை நடத்தும் மெட்டா நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.