4 நாட்களில் 4 பாடசாலைகள் மீது தாக்குதல்: இஸ்ரேல் தாக்குதலில் 29 பேர் பலி
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், செவ்வாய்க்கிழமை பலஸ்தீனத்தின் காசா நகரத்தில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பாடசாலையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் சுமார் 29 பேர் பலியாகியுள்ளனர்.
காசாவின் அப்சான் பகுதியிலுள்ள அல்-அவ்டா பாடசாலையில் 2000 பேர் தஞ்சமடைந்துள்ளனர். இதன்போதே இப் பாடசாலையை குறிவைத்த இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு நாட்களில் இஸ்ரேலில் தாக்குதல்களில் பாதிப்புக்குள்ளான நான்காவது பாடசாலை இதுவாகும். இதுவொரு மோசமான படுகொலை என்று பலஸ்தீன ஊடகம் தெரிவித்ததோடு, இத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தெரிவித்துள்ளது.
ஹமாஸின் உறுப்பினர்கள் அல்-அவ்டா பாடசாலையின் அருகில் பதுங்கியிருந்ததாலேயே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.