இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம்: ஹெலிகாப்டர்களை ஏற்றிச்செல்ல நடவடிக்கை
உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான Antonov-124 (28) பிற்பகல் 2.45 மணிக்கு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தரையிறங்கியுள்ளது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப்படைக்கு “MI-17” ரக ஹெலிகாப்டரை எடுத்துச் செல்லும் நோக்கில் குறித்த விமானம் இலங்கை வந்துள்ளது.
இலங்கை விமானப்படை 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், தற்போது மூன்று MI-17 ரக ஹெலிகொப்டர்கள் அதன் சேவைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று பெரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருப்பதால், அதைன இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முன், இந்த MI-17 ஹெலிகாப்டரை அங்குள்ள படையினருடன் இணைக்க வேண்டியுள்ளது.
மத்திய ஆபிரிக்க குடியரசில், இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர்கள் இராணுவ வீரர்களின் போக்குவரத்து, அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் உணவு மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் மூலம் இலங்கை 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள Antonov-124 விமானத்தில் பங்களாதேஷூக்கு சொந்தமான MI-17 ஹெலிகாப்டரும் ஏற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த விமானத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை கொண்டுசெல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்களை ஏற்றிக்கொண்டு குறித்த விமானம் இன்று (06.29) காலை 05.30 மணிக்கு கட்டுநாயக்க விமானப்படை தளத்திலிருந்து மத்திய ஆபிரிக்க குடியரசை நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.