ரணிலுக்கு வாய்ப்பு இல்லை; ராஜபக்சர்கள் பொறுமையை இழந்துவிட்டனர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட மாட்டாது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கையால், ராஜபக்சவினர் பொறுமையின் எல்லையை எட்டியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்டுள்ள சர்வஜன அதிகாரம் என்ற அரசியல் கூட்டணி விரைவில் பொதுஜன பெரமுனவுடன் இணையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இருக்கின்றனர்.
இந்த சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரும் அவரது நெருங்கிய நண்பராகவும் கருதப்படும் உதயங்க வீரதுங்கவின் இந்தக் கருத்து இவர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, செஹான் சேமசிங்க, கஞ்சன விஜேசேகர உட்பட பொதுஜன பெரமுனவின் பல முக்கிய அமைச்சர்களும் சிரேஷ்ட தலைவர்களும் பல கட்சிகளுடன் இணைந்து விரைவில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் பொது கூட்டணியொன்றை உருவாக்கவும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.