ரஃபா நகரின் கடற்கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதல்; 11 பேர் பலி; 40 க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம்
இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து று வருகின்றது. இதில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களால் காசா நகரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
இந்நிலையில் ரஃபா நகரம் மீது இஸ்ரேலின் பார்வை திரும்பி, அங்கு மக்கள் தஞ்சமடைந்துள்ள மருத்துவமனைகள், முகாம்கள் என அனைத்து இடங்களிலும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதனை உலக நாடுகள் கண்டித்தும் அது எதையும் இஸ்ரேல் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.
இவ்வாறிருக்க நேற்றிரவு, ரஃபா நகரிலுள்ள கடற்கரை பகுதி அல் – மவாசி பகுதியில் தற்காலிகமாக மக்கள் தஞ்சமடைந்துள்ள கூடாரங்கள் மீது சரிமாரியாக குண்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்த திடீர் தாக்குதல்களினால் 11 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இஸ்ரேலின் பீரங்கிகள் முன்னேறி வந்துள்ளது. இது பலஸ்தீனிய மக்களிடையே பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தவே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர் தொடங்கிய நாள் முதல் இன்றுவரையில் சுமார் 1000 கிலோ எடைகொண்ட 10,000 ஆயுதங்களையும் மிசைல்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது என்கின்ற அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.