தென் கொரிய திரைப்படங்களை பார்த்த வடகொரிய இளைஞன்: பகிரங்கமாக தூக்கிலிட்ட அதிகாரிகள்
தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் கேட்டதற்காகவும், அவற்றை விநியோகித்ததற்காகவும் 22 வயதான வட கொரிய நபர் ஒருவர் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் உள்ள ஐக்கிய அமைச்சினால் கடந்த வெளியிடப்பட்ட வடகொரிய மனித உரிமைகள் தொடர்பான 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் இருந்து தப்பிச் சென்ற நபரின் சாட்சியத்தின்படி, சுமார் 70 தென் கொரிய பாடல்களைக் கேட்டதற்காகவும், மூன்று திரைப்படங்களைப் பார்த்து அவற்றை விநியோகித்ததற்காகவும் அந்த இளைஞன் தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு வடகொரியாவின் தென் ஹவாங்கே மாகாணத்தில் குறித்த இளைஞர் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாச்சாரத்தை தடை செய்யும் வட கொரிய சட்டத்தின் மீறல் செயலாகவே குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மணப்பெண் வெள்ளை நிற ஆடை அணிவது, மணமகளை மணமகன் தூக்கிச் செல்லுதல், சன்கிளாஸ் அணிவது, கண்ணாடி குவளையில் மதுபானம் அருந்துவது உள்ளிட்ட இளைஞர்களை குறித்து வடகொரிய அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இவை அனைத்தும் தென் கொரிய பழக்கவழக்கங்கள் என வடகொரியா கருதுவதால், அவற்றை தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.