விமான ஓடுபாதையில் விழுந்த பாரிய பலூன்கள்; தென்கொரிய விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்
வடகொரியா குப்பைகளுடன் கூடிய பலூன்களை பறக்கவிட்டதால் தென்கொரியாவின் இன்சியான் விமான நிலைய செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரையிறங்குவதை பாதித்ததாக இன்சியான் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வடகொரியாவின் பலூன் ஒன்று பயணிகள் முனையம் அருகே விழுந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பலூன்களும் ஓடுபாதைக்கு அருகில் விழுந்தன.
இதையடுத்து விமான நிலையத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விமான நிலைய எல்லையில் பல பலூன்கள் காணப்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வடகொரியாவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்சியான் விமான நிலையம் மூடப்படுவது இது முதல் முறையல்ல.
முன்னதாக இதுபோன்ற சம்பவம் காரணமாக விமான நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. புதன்கிழமை அதிகாலை 1.46 மணி முதல் 4.44 மணி வரை விமான நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு, ஓடுபாதைகள் திறக்கப்பட்டு, விமான நிலையத்தின் செயல்பாடுகள் வழமைக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் விமானங்கள் குறைவாக இருந்ததால் பெரிய அளவில் பிரச்னை இல்லை என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சரக்கு விமானங்கள் உட்பட இன்சியானில் தரையிறங்க வேண்டிய எட்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமான நிலை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், விமானங்கள் தொடர்ந்தும் தாமதமாவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.