மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலும் நல்லூர் ஞானப்பிரகாசர் சுவாமிகளும்!…. ஏலையா க.முருகதாசன்.

![]()
நீண்டகாலமாக இதுதான் உண்மையான வரலாறு என்று நம்பியிருக்க, மக்கள்;, தாங்கள் நம்பியிருந்த வரலாறு பொய்யானது புனைவானது என்று சொல்லப்படும் போது இதுவரை காலமும் அதனை நம்பியவர்கள் நிலைமை என்னாவது என்பது மட்டுமல்ல,நம்பிக் கொண்டிருந்த வரலாறுகள் பொய்யா புனைகதையா என மக்கள் தடுமாறும் நிலை ஏற்படுகின்றது.
தமிழறிஞர்,ஞானி என்றெல்லாம் இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் மதிக்கப்பட்டு கொணடாடப்பட்டு வரும் கத்தோலிக்க மதப்பிரிவின் வணக்கத்துக்குரிய குருவான நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் உருவாகியமை பற்றியும் அதன் வரலாறு பற்றியும்,யாழ் பாடி பற்றியும் அவர் கூறிய விடயம் பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.உண்மையா பொய்யா என்ற தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது
கொழும்பிலிருந்து வரும் ஞானம் சஞ்சிகையின் 261வது இதழில் (மாசி 2022) பக்கங்கள் 13 -16 வரை, வணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள்; தனது நூல்களில் எழுதியதாக,பேராயர் எஸ். ஜெபநேசன் அவர்கள் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.
அக்கட்டுரை மீதான எனது கருத்தை’இலங்கை வரலாறும் தேடலும்’ என்று தலைப்பிட்டு எழுதிய கட்டுரை ஞானம் சஞ்சிகையின் 263வது இதழில் (சித்திரை 2022) 34 – 38 வரையிலான பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
பேராயர் எஸ் ஜெபநேசன் எழுதிய கட்டுரையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் பற்றித் தெரிவிக்கையில் உக்கிரசோழனின் மகளான இளவரசி மாருதப்புரவல்லி குன்ம நோயினால் பீடிக்கப்பட்டு முகம் குதிரை முகமாகியதால்; தமிழகத்திலிருந்து வந்து கீரிமலைக் கடலில் குளித்து,மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலில் வணங்கியதால் அவரின் குதிரை முகம் நீங்கியதாகக் கூறும் வரலாறு ஒரு புனைவு மிகுந்த பொய்யான வரலாறு என்றும், மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் இருந்த இடத்தில் பெரிய ஆலமரத்தடி விகாரையொன்று இருந்ததாகவும் அது இடிக்கப்பட்டே மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் கட்டபட்டதாகவும் என்ற தகவல் உண்மையானதென்றும், அதே போல யாழ் வாசித்ததால் அன்றிருந்த அரசர் யாழ் நிலப்பரப்பை பாணருக்கு கொடுத்தார் அதனால் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது என்ற வரலாறும் பொய்யென்று வணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள்; குறிப்பிட்டதாக பேராயர் எஸ். ஜெபநேசன் அவர்கள் அந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.
எது உண்மை என்பதே இப்பொழுது எமக்கு முன் இருக்கும் கேள்வியாகும்.
மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் பற்றியும் யாழ்பாடி பற்றியும் எல்லோராலும் தமிழறிஞர்,ஞானி என்று போற்றப்படும் வணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாச
சுவாமிகள் பொய் சொன்னாரா அல்லது இப்பொழுது மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலிருக்கும் இடத்தில் உண்மையிலேயே ஆலமரத்தடி பெரிய விகாரையொன்று இருந்து,இராமர் கோவில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது போல,விகாரை இடிக்கப்பட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் கட்டப்பட்டதா எனக் கேள்வி எழுகின்றது.
வுணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாசர் சுவாமிகளின் கூற்றுப் பொய்யானால் அவரைபற்றிய வரலாற்றில் அது பெரும் களங்கமாகவும் அவமானமாகவும் அல்லவா கருதப்பட வேண்டும்.
அறிஞர் என்ற சொல்லுக்குரியவர்களும், எச்சமயத்தைச் சார்ந்தவர்களானாலும் ஆன்மீக வழியைக்காட்டுபவர்கள் ; உண்மைகளையே பேச வேண்டும் என்பது ஆன்மீக மார்க்கத்தின் மாண்பு ஆகும்.எனவே நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் கூறியது பொய்யெனில் அவரை நாம் எங்கே வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றதே.அவர் ஒரு மதகுருவா?.அவர் ஒரு தமிழறிஞரா? ஆவர் ஒரு ஞானியா? எனப் பலகேள்விகள் எழுந்து மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்றல்லவா நம்ப வேண்டியுள்ளது.
நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் கூறியது உண்மையெனில் , மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் இருந்த இடத்தில் பெரிய ஆலமரத்தடி விகாரையொன்று இருந்தது உண்மையாகி அவ்விகாரை இடிக்கப்பட்டு அங்கே கந்தசுவாமிக் கோவில் கட்டப்பட்டதென்பதே உண்மையாகி,அதை மக்கள் தெரிந்து கொள்ளாதிருக்க,பொய்யை நிஜப்படுத்த மாருதப்புரவல்லி கதை புனையப்பட்டதா,அப்புனைவை நிஜமாக்க மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலின் கோபுரத்தில் வைக்கப்பட்ட மாருதப்புரவல்லியின் கதை சொல்லும் சிலைகள் பொய்யை உண்மையாக்குவதற்காக அமைக்கப்பட்டதா?.அப்படியானால் அங்கிருந்த விகாரையும் ஒரு மதத்தின் புனித சின்னந்தானே,அவ்வகையில் பார்த்தால் அதை இடித்தது மாபெரும் குற்றமல்லவா.அந்த இடிப்புக்கு துணை போன வணக்கத்துக்குரிய சைவசமயக் குருமார்களும் சைவ மக்களும் பெருந் தவறைச் செய்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே.
இக்கட்:டுரை தொடர்பாக, நான் எழுதிய பதில் கட்டுரைக்கு கட்டுரைக்கு சூம் நிகழ்ச்சி வழியாக பதிலளித்த ஆய்வாளரும் எழுத்தாளருமாகிய கலாநிதி ச.குணேஸ்வரன் அவர்கள், இக்கட்டுரை தொடர்பாக தர்க்க ரீதியாக பொய் அல்லது உண்மை என்பதைத் தெட்டத்தெளிவாகக் கூறாது அது ஒரு ஐதிகம் என்று சொல்லி கடந்து போனது உண்மையின் மீதான அவருக்கு ஏற்பட்ட அச்சம் என்றுதானே நினைக்க வேண்டியுள்ளது.
மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் பற்றிய வரலாறு ஒரு ஐதிகமெனில் அந்தப் பொய்யான வரலாற்றை பல நூறு வருடங்களாக உண்மையென மக்களுக்குக் கூறியதும், கூற வைத்ததும் நம்ப வைத்ததும் யாருடைய தவறு?.சொன்னவர்களின் தவறு.ஐதிகத்தை வரலாறாக்கிய அனைவரினதும் தவறல்லா?
அது மட்டுமல்லாது மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலும் அங்கு வழிபாடு செய்யப்பட்ட உக்கிரசோழனின் மகளான இளவரசி மாருதப்புரவல்லி பற்றிப் பாடப்புத்தகங்களில் கூறுகையில்,அவர் கீரிமலைக் கடலில் குளித்துவிட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலில் வழிபட்டார் என்ற விபரத்தை உண்மையென்று நம்பிப் படித்த மாணவர்களில் நானும் ஒருவன்.
எனது சிறுவயது முதல் இன்றுவரை நான் படித்த இந்த வரலாற்றை எத்தனை பேருடன் பகிர்ந்திருப்பேன்.மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலை எண்ணிறந்த தடவைகளில் கடந்து போகும் போதெல்லாம் நிமிர்ந்து நின்ற கோபுரத்தில் வைக்கப்பட்ட மாருதுப்புரவல்லி வரலாற்றோடு சம்பந்தப்பட்ட சிiலைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த வரலாறு ஞாபகத்திற்கு வருவதும்,நானறிந்த கோவில்கள் பற்றி நண்பர்களுடனோ கோவில்கள் சம்பந்தப்பட்டவர்களுடனோ உரையாடும் போதெல்லாம் மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலைப் பற்றியும் அதையொட்டிய மாருதப்புரவல்லி பற்றிய வரலாற்றில் கீரமலைக் கடல் தண்ணீரின் மருத்துவக் குணம் பற்றியெல்லாம் சிலாகித்தும் மகிழ்ந்தும் பெருமையுடையன் கதைத்தது பொய்யாகியதும், கந்தசுவாமிக் கோவிலுக்கருகிலிருக்கும் தேநீர்க் கடைகளில் தேநீர் குடித்துக் கொண்டே கடைக்காரருடன் இக்கோவில் பற்றிக் கலந்துரையாடும் போதெல்லாம் இவ்வரலாறும் வந்து போனதே இப்பொழுது நாம் நம்பியிருந்தது, படித்தது எல்லாமே பொய்யென்ற புனைவில் இழைக்கப்பட்டதெனில் இம்மாபெரும் தவறைச் செய்த பொய்புனைந்த வரலாற்று நூல்களை எழுதியவர்கள் மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்றல்லவா எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
பல உயர் வகுப்புகளில் சிந்தியடைந்து தொடர் கல்வியை நோக்கிப் போகும் போதெல்லாம் இவ்வரலாற்றை உண்மையென நம்பி அதனைத் தன்னுடனேயே காவிக் கொண்டு பல்கலைக் கழகம் வரை செல்லும் ஒரு மாணவன்,அங்கு சைவக் கோவில்கள் பற்றியோ,இந்துக் கலாச்சாரம் பற்றியோ படிக்கும் பட்சத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலோடு சம்பந்தப்பட்ட மாருதப்புரவல்லி வரலாற்றின் பதிவுகளை பரீட்சைத் தேர்வுகளுக்கு எழுதி நல்ல விளக்கமான தகவல் என அவனது விடைகளைத் திருத்தும் பேராசிரியர்கள் அதற்கான மதிப்பெண்களை இட்டார்களானால் தவறான தகவலுக்கு மதிப்பெண் இடப்பட்டதாகத்தானே கருத வேண்டியுள்ளது.
இப்படியான தவறான தகவலை உண்மையென நம்பிப் படித்து பட்டதாரியாகி பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியே வரும் ஒரு பட்டதாரி,பல்கலைகழகத்திலேயே சைவக் கோவில்கள் பற்றியோ,இந்துக் கலாச்சாரம் பற்றிய விசேட படிப்பான ஓனர்ஸ் படிப்பைப் படித்திருந்தாலும்,கலாநிதிப் படிப்புக்கு சைவக் கோவில்கள் பற்றியோ, இந்துக் கலாச்சாரம் பற்றிய ஆய்வினை எடுத்து அதனைச் சமர்ப்பிக்கையில் மாருதப்புரவல்லி பற்றிய பொய் புனைந்த வரலாற்றை எழுதியிருந்தால், அது நூலாகி வெளிவரும் போது பல்கலைக் கழக மாணவர்கள் அந்நூலை உசாத்துணையாக எடுக்கும் போது ஒரு தவறான தகவலடங்கிய வரலாற்றையல்லவா இவர்கள் உசாத்துணையாக எடுத்து படித்திருக்கிறார்கள்,படிக்கிறார்கள் என்பதுதானே உண்மையாகின்றது.
மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவில் உள்ளடங்கலாக,இலங்கையிலுள்ள சைவக் கோவில்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் கலாநிதிப் பட்டதாரிக்காக, ஒரு பட்டதாரி உசாத்துணை நூல்களாக எவர் எவர் மாருதப்புரவல்லியின் வரலாற்றை தங்கள் ஆய்வு நூல்களில் எழுதியிருந்தார்ளோ அதனை உள்வாங்கி தனது ஆய்வுக்கு சாட்சியங்களாக்கியிருந்தால்,நல்லூர் ஞானப்பிரகாசஎ சுவாமிகள் கூறிய பொய்யில் புனையப்பட்டதுதான் மாருதப்புரவல்லியின் வரலாறெனில் தவறான தகவல்களை உள்ளடக்கிய உசாத்துணைத் தகவல்களை கலாநிதிப் பட்டப்படிப்புக்கு எடுத்தாண்டமை பொய் என்ற அடிப்படையில் கலாநிதிப் பட்டத்திற்காக ஆய்வினை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளலும் தவறானதேயாகும்.
இதுமட்டுமல்லாது பட்டதாரிப் படிப்பினை படித்து பட்டதாரியாகி பாடசாலைகளில் படிப்பிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்டதாரி ஆசிரியர்களாகட்டும்,சைவக் கோவில்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமிக் கோவிலோடு தொடர்புடைய மாருதப்புரவல்லியின் வரலாற்றை உள்வாங்கி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் அவ்வரலாற்றை இன்னும் திடநம்பிக்கையடன் படித்து பாடசாலைகளில் படிப்பிக்க வரும் ஆசிரியர்களாகட்டும் மாணவர்களுக்கு தாம் கற்றதை, தாம் கற்றுக் கொண்ட வரலாற்றுத் தகவல்களை சொல்லிக் கொடுப்பார்களாயின்,பொய் மீது புனையப்பட்ட கந்தசுவாமி கோவிலின் வரலாற்றையும் மாருதப்புரவல்லி வரலாற்றையும் படித்த மாணவனே பின்னர் ஆசிரியனாகி மீண்டும் பொய்யான வரலாற்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது மாணவர் சமுதாயத்தை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கு சமமானதுதானே.
அதுவல்லாது நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் கூறியது அத்தனையும் பொய்த் தகவல்கள் மாருதப்பரவல்லி வரலாறு உண்மையெனில்,இறைவழியில்,அன்பு வழியில்,கருணைமிகு வழியில் நற்பண்புகளை போதித்து வழிகாட்டி,பொய் சொல்வது என்பது ஒழுக்கமற்றது என்றெல்லாம் போதித்து „பகைவனுக்கும் அருள்வாய் நல்நெஞ்சே’ என்று தான் உணர்த்தும் ஆன்மீக வழியினைப் பின்பற்றும் மக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கமான நல்வழியைக் காட்டும் அவரைப் பொய்யெரென்று நினைக்கும் நிலைக்கு தன்னை உட்படுத்திவிட்டது மட்டுமல்ல இக்கோவிலுக்காக உழைத்தவர்களையும் அது சார்ந்தவர்களையும் வேதனைக்குள்ளாக்கிவிட்டாரே என்றல்லவா எண்ணத் தோன்றுகின்றது.
முதல் கோணல் முற்றும் கோணல் என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில் அவரால் எழுதப்பட்ட நூல்கள் அனைத்தையும்,அந்நூல்கள் கூறும் ஒவ்வொரு எழத்தும் ஒவ்வொரு வரிகளும் உண்மைதானா என உற்றுக் கவனிப்புக்குள்ளாக்கும் நிலைமையத் தோற்றுவிக்கும்.
வணக்கத்துக்குரிய, நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் என்று,அவரை அறிஞர்,ஞானி என்றெல்லாம் எண்ணி அவரை இன்றுவரை மிகு மதிப்புடன் பெருமைமிகு ஞானி என்றெண்ணிய மக்கள் அவர்,தம் சமயத்தின் மீதான வரலாற்றினை மாசுபடுத்தியவர் பொய்யுரைத்தவர் என்றும் மதசார் வெறுப்பினை உமிழ்ந்தாரா என்றுதானே நினைக்கத் தோன்றும்.
வணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகளின் சமயத் தொண்டுபற்றியோ,தமிழ்த் தொண்டு பற்றியோ ஆய்வினை மேற்கொள்ளும் எச்சமய பட்டதாரியாகினும்,எழுத்தாளனாகினும் அவர் எழுதிய நூல்களில் மதச்சார்பு உண்டென்று நினைப்பதில் தவறில்லையே.
கலாநிதிப் படிப்பிற்காக வணக்கத்துக்குரிய குருவான நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் பற்றியதும் அவர் எழுதிய நூல்கள் பற்றியும் ஆய்வினை மேற்கொள்ளும் ஒரு பட்டதாரி அவரின் நூல்களை நம்பி எங்ஙனம் ஆய்வினை மேற்கொள்ள முடியம்.உசாத்துணைக்கு இவரின் நூல்களை எடுத்தாளுவதற்கு தயக்கம் வராதா?.
தமிழின வரலாறுகளையோ,சமய வசரலாறுகளையோ எழுத முற்படும் ஒரு எழுத்தாளன் எந்த நம்பிக்கையுடன் வணக்கத்துக்குரிய இவரின் நூலை வழிகாட்டும் துணையாக எங்ஙனம் எடுத்துக் கொள்ள முடியும்.
அவர் வணக்கத்துக்குரிய கத்தோலிக்க கிறீஸ்தவ மதகுருவாகினும் இவரை எப்படி மதிக்க முடியும் என்று கேள்வி எழுகின்றன.
ஒரு சமூகம்,ஒரு இனம் உண்மையான சரித்திரச் சான்றுகளாலேயே கட்டமைக்கப் படுகின்றது,கட்டமைக்கப்பட வேண்டும்.காலம் காலமாக வாழையடி வாழையாக ஒரு தலைமுறைமாறி இன்னொரு தலைமுறைக்கு சொல்லப்படும் தகவல்களே வரலாறாக உருப்பெறுகிறது.வரலாறுகள் அவ்வாறுதான் உண்மையென்ற உறுதியான இழைகளால் பின்னப்படுகின்றன.
தவறான,பொய்யான,புனைவான தகவல்களைக் கொண்ட இழைகளால் பின்னப்படுகின்ற வரலாறுகள் பொய்யான வரலாறாகுமானால் ஒரு இனம் அல்லது சமூகம் அவமானப்பட்டுக் கூனிக்குறுகி நிற்க வேண்டி வரும்.
வணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாசஎ சுவாமிகள்,யாழ்பாடி யாழ் வாசித்துப் பெற்றுக் கொண்ட ஊர்தான் யாழ்ப்பாணம் என்பதும் பொய்யென்று வணக்கத்துக்குரிய சுவாமிகள் எழுதியதாக பேராயர் எஸ்.ஜெபநேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணம் என்ற காரணப் பெயர் வந்ததற்கான பல தகவல்கள் யாழ்ப்பாண வரலாறையொட்டியும்,பாணர்களையொட்டியும் வந்ததெனினும் அவை யாவும் பாணர்களால் யாழ் வாசித்து பெற்றுக் கொண்ட மையத்தகவல் கருத்தையொட்டியே அது இருந்து வந்ததெனினும்,அது பொய்யெனில் அதனைப் பாடப் புத்தகங்களில் படித்த மாணவர்களுக்கு என்ன பதில் சொல்லப்படப் போகின்றது.
யாழ் வாசித்த பாணர்களுக்கு அன்றிருந்த அரசன்,பாணர்களின் யாழ் வாசிக்கும் திறமை கண்டு வியப்பு மேலீட்டால் ஒரு ஊரைப் பரிசாகக் கொடுக்க, பாணர்கள் யாழ்பாடிப் பெற்றுக் கொண்டதனால் அவவூருக்கு யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்ததென்று பாடப்புத்தகத்தில் நானும் படித்தேனே, ஆசிரியர்கள் சொல்லித் தந்தார்களே.
யாழ்பாடி என்ற வரலாறே பொய்யெனில் நான் பொய்புனைந்த வரலாற்றையா படித்தேன்,ஆசிரியர்களும் பொய்யான வரலாற்றையா சொல்லித் தந்தார்கள்.
பல பாடசாலைகளில் எண்ணற்ற மானவர்கள் பொய்புனைந்த வரலாற்றையா படித்தார்கள?;.பரீட்சைக் காலங்களில் யாழ்பாடி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு,படித்த பாடத்திலிருந்து பதில் எழுதி அது சரியெனப் புள்ளியிட்டு, சரியெனப் புள்ளியிட்டதனால் தான் எழுதியது சரியென மாணவனை,மாணவர்களை நம்ப வைத்தது தவறுதானே.இது கல்விக்கு ஏற்பட்ட இழுக்குத்தானே.
மாருதப்புரவல்லி தொடர்பான வரலாற்றினை மேற்கொண்டது போல பொய்யான யாழ்பாடி வரலாற்றினை, வரலாற்று ஆய்வாளர்களும் கலாநிதிப் பட்டப் படிப்புக்காக அதனை எடுத்துக் கொண்டார்களானால் யாழ்ப்பாணம் என்ற பெயரினை நோக்கியும் அதற்கான காரணப் பெயரைத் தேடி யாழ்பாடிகளே அதற்குக் காரணம் என்பதை நம்பி எழுதிய ஆய்வுக்கட்டுரை தொடர்பாக கல்வியல் உலகம் எவவாறு நம்பிக்கை வைக்க முடியும்.
இவ்வாய்வுக்காக உசாத்துணைத் தேடலில் ஈடுபட்டுத் தேடிய அனைத்துத் தகவல்ளுமே வணக்கத்துக்குரிய சுவாமிகள் கூறியதின்படி பொய்யானால் உண்மையான தகவல்கள் என எழுதிய உசாத்துணை நூல்களும் அதனை எழுதியவர்களும் மக்களுக்குத் தவறான தகவல்களை அவர்கள் உண்மையென்று நம்பும்விதமாக கொடுத்தமையும் அது உணமைக் கல்விக்கும் மக்களின் நம்பகத்தன்மைக்கும் தொடர்ந்து கல்வியிலாளர்களினால் ஏமாற்றப்படடுள்ளோமே என்பது சாதரண மக்களுக்கு அறிவுஜீவிகள் கொடுக்கும் வலிதானே.
யாழ்பாடி வரலாறு உண்மையாகி வணக்கத்திற்குரிய நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் கூறியது பொய்யானால்,அந்தப் பொய்யையொட்டி சாதாரண மக்களிலிருந்து ஆரம்ப கல்வியைக் கற்கும் மாணவர்களிலிருந்து அதனைத் தொடர்ந்து உயர்கல்லி பட்டப்படிப்பு எனத் தொடர்ந்து ஆசிரியர்களாக,பல்கலைக்கழகங்களில் கலாநிதிகளாக பேராசியர்களாக விரிவுரை நடாத்தும் விரிவுரையாளர்களாக ,எழுத்தாளர்களாக, பத்திரிகையாசிரியர்களாக இருக்கும் கல்வித்தகைசார் பெரியோர்கள் வணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் பற்றி,அவர் சொன்னது எழுதினது பொய்யெனில், உண்மையை மதச்சார்புக்கமையவே பொய்யாக்கினார் என்று ஏன் நினைக்கக்கூடாது.
உவத்தல் காய்தல் இன்றியும் ,மொழியினச் சுயநலச் சார்பு,சமூகச் சுயநலச் சார்பு,சமயச் சுயநலச் சார்பு,சமூக ஏற்றதாழ்ச் சார்பு அகியவையின்றி உணமையின் மீது கட்டப்படும் வரலாறுகளே நிலையானது ஆகும்.
பொய் புனைந்து எழுதப்படும் வரலாறுகள் சதுப்பு நிலத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்குச் சமமானது என்பதே எனது திடமான துணிவுமிக்க முடிவான கருத்தாகும்.
சாதாரண மனிதர்கள் தவறு விட்டாலும் தவறு தவறுதான்.கல்விச் சமூகம் தவறு விட்டாலும் தவறுதான்.படித்தவர்கள் சொல்வதெல்லாம் உண்மையென்று நம்புவதை விடுத்து,
„எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு „
என்பதற்கொப்ப பகுத்தறிவு அளவுமாணி கொண்டு அளக்க வேண்டிய பொறுப்பு கல்வியியலாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும்,சாதாரண மனிதர்களுக்கும் வேண்டும்.
படித்தவர்கள் சொல்வதெல்லாம் உண்மை, பொய் சொல்ல மாட்டார்கள் என்பதே தவறான கருதுகோளாகும்.
![]()