செம்மணிப் புதைகுழியில் மனித எலும்புக் கூட்டின் சில பாகங்கள் அகழ்வு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, ஏற்கனவே இலக்கமிடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு பகுதியளவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்பு தொகுதிகளின் சில பாகங்கள் நேற்றைய அகழ்வின் போது அகழ்ந்தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
குறித்த அகழ்வு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அகழ்வுப் பணியின் போது ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு கூடு 211 மற்றும் 220 உடைய பகுதியளவான எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே வடமேற்கு பகுதியாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில என்புத் தொகுதிகளின் இருப்புகள் அடையாளம் காணப்பட்டிருப்பதால் எத்தனை என்பு தொகுதிகள், எந்த விதமான நிலையில் காணப்படுகின்றது, என்பது சுத்தப்படுத்த பின்னரே முழுமையாக தெளிவாகவும் கூற முடியும். அந்த அடிப்படையில் இந்த அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும்.
அகழும்போது வித்தியாசமான மண்படுக்கைகள் காணப்படுகிறது. அது கறுப்பாக உள்ளது. அதில் ஏதாவது சான்ற பொருட்களோ என்பு தொகுதிகளோ, பகுதிகளோ இருக்கின்றதா? என்பதை பார்ப்பதற்காகவும் தெளிவான முடிவுக்கு வருவதற்காகவும் குறிக்கப்பட்ட மண் பகுதி மாத்திரம் அரித்தெடுக்கப்படும் செயற்பாடு நடைபெறுகிறது.
ஒரு சிறிய வலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது மண்ணினுடைய முதலாவது தொகுதி மட்டத்தில் எடுக்கப்பட்டது. எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பகுதியிலிருந்து அது கண்டுபிடிக்கப்படவில்லை – என்றார்.
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.
![]()