முச்சந்தி

யாழில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். இவரது குடும்பத்தில் இவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் விசேட தேவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழலில், இந்த மாணவன் கைபேசி விளையாட்டுகளுக்குத் தீவிரமாக அடிமையாகியிருந்த நிலையில், நேற்று அதிகாலை விபரீத முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டபோது, வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவனின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த மாணவனின் இந்தத் துயர முடிவு, அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *