இந்திய மீனவர்கள் எங்கள் மீது பெற்றோல் குண்டு வீசி வாளினால் வெட்டினர்

யாழ்ப்பாணம் – பலாலி, வடக்கு அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவரின் படகு மீது, இந்திய கடற்றொழிலாளர்களால் பெற்றோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாளினால் மீனவர்கள் மூவர் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பலாலி கடலிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த போது எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் ஐவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை கடற்றொழிலாளர்களின் படகும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பெற்றோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாளினால் இளைஞர்கள் மூவர் தாக்கப்பட்டதாகவும் இலங்கை கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான கடற்றொழிலாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17,18,27 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் ஒருவாறு அவர்களிடமிருந்து தப்பி வந்ததுடன் 27 வயது குடும்பஸ்தர் செருதூர் மீனவர்களால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை (27) காலை 8 மணிக்கு செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கடலில் தமிழக மீனவர்கள் தாக்கியதில் இந்த மீனவருக்கு வலது கண் புருவம், இடது பக்க தலை,கைகளில் இரத்தக் காயங்களும், நெற்றியில் வீக்கமும் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு வைத்தியக் கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கீழையூர் பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தப்பி வந்த மீனவர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
![]()