கட்டுரைகள்

யார் எழுத்தாளன்? கிறுக்கல் ஏழு!

இன்று பெங்களூரில் வாழ்ந்த அந்தநாள் நினைவுகளை மீட்டினேன். பணியிலிருந்து ஓய்வு பெற்ற எனது நண்பனிடம் எப்படி பொழுது போகிறது என்றேன்.
பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் களிக்கவே நேரம் போதவில்லை. இதற்கிடையே நோயின் உபாதையின்றி ஒருநாளை நகர்த்தினாலே பேரின்பம் என்றான். புத்தகம் ஏதாவது படித்தாயா? என்றேன்.

பாலாற்றங்கரையினிலே சந்திரனோடு நான் என்ற வரிகளை இன்னும் மறவாத நான் ஒருகாலத்தில் புத்தகம் படிப்பதில் அப்படியொரு வேட்கையுடன் இருந்தேன். இன்று அப்படியல்ல, பத்து நிமிடங்களுக்கு
மேல் ஓரிடத்தில் அமரவே முடிவதில்லை என்றான்.

அதற்கதற்கென்று ஒரு வயதிருக்கிறது. ஒரே நாளில் மூன்று திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். காலை உணவாக ஒன்பது இட்லிகளை சாப்பிட்டுருக்கிறேன்.
இப்போது கண்பார்வை மங்கலாக உள்ளது. இருக்கும்வரை அதை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்றவன் நீ ஏதே எழுதுகிறேன் என்றாயே எத்தனை புத்தகங்கள் படித்தாய் என்று கேட்டான். அவன் கேட்ட கேள்வியைப் பாருங்கள் எழதுகிறேன் என்றாயே என்றே கேட்டான். நீ எழுதியது நன்றாய் உள்ளது அல்லது உன் எழுத்து சரியில்லை என்று சொல்லவில்லை.

காரணம் தெரியுமா? நான் என் நண்பர்கள் உட்பட யாரிடமும் நான் என்னவெல்லாம் எழுதியிருக்கிறேன் என்று சொல்வதில்லை. முகநால் போன்றவற்றில் தெரியப் படுத்தி என்னை விளம்பரப்படுத்திக் கொள்வதுமில்லை. நான் எழுதும் தளத்தில்
வாசிக்கிறார்கள் என்ற எண்ணம் ஒன்றே என்னை எழுதத் தூண்டுகிறது. அதைத்தாண்டி பெரிதாக எதையாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் என்னிடமில்லை. போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து என்பது பணமீட்டுவதில் மட்டுமன்று முடிந்தவரை மற்ற விடயங்களிலும் இருந்தால் சாலச்சிறந்தது என்பது என் எண்ணம்

எத்தனை புத்தகங்கள் படித்தாய் என்ற நண்பனிடம் நானும் உன்னை மாதிரிதான். அவ்வளவாக புத்தகங்கள் படிப்பதில்லை. ஒருகாலத்தில் நா. பார்த்தசாரதி, சமுத்திரம், பி. வி.ஆர் ஆகியோருடைய எழுத்துக்களை விடாமல் படித்திருக்கிறேன். அதற்கு சான்று சரியாக சொல்லவேண்டுமானால் கிரிக்கெட் விளையாட்டை சொல்லலாம். கிரிக்கெட்டில் ப்ரேக் வரும்போதுதான் மற்றவேலைகளைச் செய்வேன். தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்துவிட்டால் பக்கத்தில் தீ பற்றி எரிந்தாலும் தெரியாது.

அதேமாதிரியே புத்தகங்கள் படிப்பதும். ஆனால் இப்போது நான் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை. தொடர்ந்தாற்போல் அரைமணி நேரத்துக்கு மேல் புத்தகத்தில் கவனம் செலுத்தவும் முடியாது என்றேன். எல்லோரும் செய்கிறார்களே என்றால்
எல்லோர் செய்வதையும் நாம் செய்யமுடியுமா? எல்லோரும் செய்வதில் நமக்கும் ஈர்ப்பு இருக்கவேண்டும் அல்லவா? உண்மையை சொல்வதில் வறட்டு கௌரவம் எதற்கு?

மணிபார்க்கத் தெரியாதவன் கையில் கைக்கடிகாரம் கட்டியிருப்பதும் வாசிக்க விருப்பமில்லாதவன் நம்மையும் நான்குபேர் மெச்சவேண்டும் என்று கையில் தினசரிகளை வைத்துத் திரிபவர்களும் உண்டு. வலம்புரி ஜான் அவர்கள் சொன்னகூற்று ஒன்று நினைவுக்கு வருகிறது. அவரது சிறுவயதில்
அவர் உறவினர் ஒருவர் வீட்டுத்திண்ணையில் இருந்தபடி ஆங்கில நாளிதழை படித்துக் கொண்டிருப்பராம். அந்த தெருவில் செல்லும் பெண்களெல்லாம் நம்ம ஊரிலேயே இங்கிலீஷர் பேப்பர் படிப்பவர் ஐயா ஒருவர்தான் என்று பெருமையாக சொல்லியபடி செல்வார்களாம்.

இதைக்கேட்ட அந்த உறவினர் புலகாங்கிதம் அடைவராம். வலம்புரி ஜானுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசை. ஆதலால் அந்த உறவினரிடம் சென்று நாளிதழைக் கேட்டிருக்கிறார். அதற்கு உறவினரோ உனக்கெல்லாம் தந்தி பேப்பரே போதும் என்பாராம். ஆனால் அந்த உறவினருக்கோ ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாதாம். அந்த பெண்கள் கடந்து செல்லும்போது பெருமையைக்காட்ட அந்த ஆங்கில நாளிதழை தலைகீழாக இருப்பதுகூட தெரியாமல் படிப்பதுபோல் பாவனை செய்வாராம்.

இதைப்போல நூல்களைப் படிப்பதற்கும்
நமக்கு படிக்கும் சூழ்நிலை வாசிப்பில் விருப்பம் ஆகியவை இருக்கவேண்டும். மற்றவர்கள் நம்மை பெருமையாக சொல்லவேண்டும் என்பதற்காக எனக்கு வாசிப்பில் ஆர்வம் அதிகம் நூல்களை வாசிக்காமல் என்னால் இருக்கமுடியாது என்று சொல்லக்கூடாதல்லவா? முழு சாப்பாடு சாப்பிடுபவர்கள் சாப்பிடட்டும் அளவு சாப்படு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள் அல்லவா? அதுபோல்தான் நான்.

ஒருகாலத்தில் நானும் முழு சாப்பாடு சாப்பிட்டவன்தான். இப்போதைய சூழல் அளவாகத்தான் சாப்பிட முடிகிறது. இதற்கு ஏன் பொய் சொல்லவேண்டும். ஆதலால் நண்பனிடம் இன்றைய நிலையைச் சொன்னேன். கட்டுரை, கவிதை மற்றும் சிறுகதைகளைப் படிப்பேன் என்றேன்.

நமக்கு பிடித்ததைத்தானே நாம் செய்ய முடியும். எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். பெரும்பாலானவர்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும். ஆனால் மன்னார்குடி மாடசாமி அண்ணாச்சிக்கு கிரிக்கெட் என்றால் வேப்பங்காய். அறிஞர் பெரனாட்ஷா போன்று பதினொரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள் பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்ற கொள்கையை உடையவர்.

எனது நண்பன் இன்னொன்றையும் சொன்னான். அவன் சொன்னதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கும் என்பதை உங்கள்
வசமே விட்டு விடுகிறேன். பெரும்பாலும் எழுத்தாளர்கள் அதிகம் வாசிக்கமாட்டார்களாம். அப்படி அவர்கள் வாசிப்பதற்கே நேரத்தை பெரும்பகுதி ஒதுக்கினால் அவர்களால் எழுதவே முடியாதாம். பெரும்பாலும் வாசிப்வர்கள் எழுத்தாளர்களாக இல்லாத மக்கள்தானாம். அதற்கு அவன் சொன்ன காரணம் வியப்பளித்தது.

ஒரு கடைவைத்து வியாபாரம் செய்பவர் அவர் கடையில்தான் அதிகம் கவனம் செலுத்துவாராம். அந்த கடையை எப்படி விரிவுபடுத்தலாம். வாடிக்கையாளர்களை எப்படி அதிகப்படுத்தலாம் என்றுதான் எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பாரே அன்றி மற்றவர் நடத்தும் கடையில் போய் பொருள் வாங்கிக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றான். அதிலும் விடாமல் எப்பவும் எதையாவது எழுதிக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்கள் படைப்பை எல்லாம் நேரம் ஒதுக்கி வாசித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள் என்றான்.

-சங்கர சுப்பிரமணியன்.

(கிறுக்கப்படும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *