யார் எழுத்தாளன்?…. கிறுக்கல் ஐந்து!…. சங்கர சுப்பிரமணியன்.

என்னிடம் சில கவிஞர்கள் இருப்பதாக சிலர் சொல்லியிருக்கிறார்கள். உங்களில்கூட சிலராவது கேள்விப்பட்டிருக்கலாம். மற்றவர் எழுதிக் கொடுத்த கவிதைகளை தமது கவிதைகளாக போட்டு பெயர் பெறுகிறார்களாம். அதில் உண்மையும் இருக்கலாம் இல்லாதும் போகலாம் இதற்கு சான்றாக நம் இலக்கியமான திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமான் தருமி என்ற வேதியருக்கு கவிதை எழுதிக் கொடுத்ததாக உள்ளது. தருமியே இந்த வேலையை பார்த்திருக்கும்போது நமக்கும் அந்த எண்ணம் வருவதில் தவறில்லை என்ற எண்ணம் வருவதுதான் தவறு.
ஆனால் அதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை என்று சொல்கிறார்அண்ணன் மன்னார்குடி மாடசாமி. வாடகைத் தாயை ஏற்கும் அளவு பரந்தமனதுள்ளவராய் நாம் இருக்கும்போதுஇதை ஏற்பதில் என்ன தவறு என்பதே அவரது அபிப்பிராயம். எழுத்தாளர்கள் தனக்கென ஒரு தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். ஒருவரது படைப்பைவாசிக்கும்போது எழுத்தின் நடையை வைத்தே இவர்தான் இதை எழுதியிருக்கக் கூடும் என்று சொல்லுமளவுக்கு எழுத்தின் நடை இருக்கவேண்டும். இப்படி முத்திரை பதித்த எழுத்தாளர்களும் உண்டு.எழுத்தில் கவிதை, கட்டுரை மற்றும் கதைகள் என எல்லாவற்றையும் படைப்பதேஎழுத்தாளர்களின் படைப்பு. தொழில் என்று வரும்போது விவசாயமும் தொழில்தான் விற்பனை செய்வதும் தொழில்தான். அதேபோல் கவிதை படைப்பவனும் எழுத்தாளன்தான் கட்டுரை படைப்பவனும் எழுத்தாளன்தான். நாம்தான் கவிஞன் கட்டுரையாளன் என்று என்று சொல்லிக் கொண்டுருக்கிறோம்.ஆனால் எழுத்து என்பது காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
அதை உணர்ந்து எழுத்தாளனும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். மாட்டு வண்டியில் பயணித்த மனிதர்கள் இன்று வானில் பயணிக்கிறார்கள். ஆடையின்றி அலைந்து திரிந்தவர்கள் ஆடையால் தம்மை அலங்கரிக்கிறார்கள். இலை தளைகளை உண்டு வாழ்ந்தவன் எண்ணிலா வகையில் உணவைத் தயாரித்து உண்டு மகிழ்கிறான். அதேபோல் சங்ககால இலக்கியங்கள் போலன்றி தற்கால இலக்கியமும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது.முதலில் கவிதைக்கு வருவோம். சங்ககாலத்தில் கவிதை எப்படி இருந்தது என்பதை உணர சங்க இலக்கியங்கள் இருக்கின்றன. சங்ககாலம் போல் கவிதை எழுத நாம் என்ன சங்ககாலத்திலா இருக்கிறோம்? நண்பர் ஒருவர் கவிதை வடிக்க வழிசொன்னார். கவிதைக்கு வேண்டிய எதுகை மோனை சந்தம் பொருள் என்ற இலக்கணத்துடன் கவிதை இருக்கவேண்டும் வேண்டும் என்றார். முற்றிலும் சரிதான். ஆனால் அது தற்காலத்துக்கு எந்தவகையில் உதவுகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.நமது பண்டைய உணவு பாரம்பரிய உணவு ஆரோக்கியமான உணவு என்பது தேனும் தினைமாவும்தான். இன்னும் சொல்லப்போனால் கம்பு, கேழ்வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை, வரகரிசி போன்ற சத்துள்ள உணவைத்தான் சாப்பிடவேண்டும். ஆனால் நாம் பிரியாணியையும் கொத்துரொட்டியையும் பாஸ்மதி அரிசியிலும் கோதுமையிலும் செய்து சாப்பிட்டுக்கொண்டே சங்ககாலக் கவிதைபோல் “யாயும் ஞாயும் யார் ஆகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்”கவிதை வடிக்கவேண்டும் என்றால் எப்படி?இப்படிப் பட்ட கவிதைகள் கவிதைப் போட்டிகளுக்காக மரபுக்கவிதை போட்டி என்ற தலைப்பின்கீழ் இயற்றப்படலாம். ஆனால் யதார்த்தத்தில் எளிமையான கவிதைகள்தான் எடுபடும். பட்டுக்கோட்டையாரும் கண்ணதாசனும் எழுதிய எளிமையான கவிதைகள்தான்இன்றுவரை பாமரமக்களை பரந்துபட்டு சென்றடைந்துள்ளது.இதைப் போன்றே மாறிவிட்ட சூழ்நில்நிலையில் உணவுப்பழக்க வழக்கங்களும் உடைவகைகளும் மாற்றம் கண்டுவிட்ட இந்நாளில் நமது மரபின் உணவு மற்றும் மரபின் உடை என்று மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியுமா? அதைப்போன்றுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மரபுக்கவிதைகளை எழுதி வரலாம். ஆனால் எல்லோரும் அதைப்பின்பற்றுவார்களா? சந்தேகம்தான்.நாம் காலத்திற்கேற்ப விமானத்திலும் மின்தொடர்வண்டியிலும் பேருந்திலும்தானே பயணம் செய்கிறோம். இல்லையில்லை நமது பாரம்பரியத்தை மறக்கக்கூடாது என்று மாட்டு வண்டியிலா பயணம் செய்கிறோம்? எனது நண்பர் ஒருவர் நிகழ்ச்சியொன்றில் மரபுக் கவிதைகளின் சிறப்பையும் எப்படி எழுதலாம் என்பதையும் விளக்கினார். நானும் சில மரபுக் கவிதைகளை எழுதியுள்ளேன்.எனது இன்னொரு நண்பர் மின்னஞ்சல் ஊடாக இலக்கியவட்டம் ஒன்றை நடத்தினார். அதில் மரபுக் கவிதைக்கான போட்டியொன்றை வைத்தார். அதில் சிக்கலான புது விதியொன்றையும் வைத்தார். நானும் கலந்து கொண்டேன். எனது கவிதையை போட்டியில் தேர்வு செய்து பரிசும் கொடுத்தார். ஆதலால் கவிதை எழுதுபவர்களால் மரபுக்கவிதை எழுதமுடியும். கடினம் என்னவென்றால் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.இயற்கையிலேயே எழுத வேண்டும் என்றஎண்ணம் வரவேண்டும். அப்படியான எண்ணமென்பது கடுகளாவது இல்லாதவர்களை எழுதவைக்க முடியாது. குதிரையே தண்ணீருக்கு அருகில் அழைத்துச் செல்லலாமேயன்றி அதைக் குடிக்க வைக்கமுடியாது. குதிரைக்கு தண்ணீர் தாகம் எடுத்தால் அதுவே தண்ணீரைத் தேடிச்சென்று குடிக்கும் என்பதுதான் உண்மை. அதுபோல விருப்பமில்லா எவரையும் கட்டாயப்படுத்தி எதையும் செய்துவிட முடியாது. அப்படியே செய்தாலும் அதில் உயிரோட்டம் இருக்காது.ஆனால் காட்டாற்று வெள்ளமென கற்பனை கரைபுரண்டு ஓடும்போது அதை அணை என்ற விதிமுறையினால் தடுத்து நிறுத்தமுடியாது. அணைகட்ட வேண்டுமெனில் ஆற்றில் வெள்ளம் இல்லாதபோது தண்ணீரை திருப்பிவிட்டு அதன்பின்தான் அணைகட்டவேண்டும். ஆனால் ஜனரஞ்சகமாக (பெரும்பாலும்) கவிஞர்கள் மரபுக் கவிதைகளை எழுதுவதில்லை என்பதும் சிலசமயங்களில் அவர்கள் படைக்கும் கவிதைகளில் விதிமுறைகள் அமைந்து விடுவதும் உண்டு என்பது என் கருத்து.அதற்காக மரபுக்கவிதைகள் கூடாது என்பதல்ல. மெல்லிசையை விரும்புவதுபோல் கர்னாடக இசையையும் விரும்பும் மக்கள் இருக்கிறார்கள். இந்த மெல்லிசைக்கு அடிப்படையே கர்னாடக இசை என்றபோதும் பெரும்பாலான மக்களின் ஆர்வம் எதை நோக்கி திரும்பியுள்ளது என்பதுதான் இங்கு கேள்வி. என்னிடம் உள்ள சிக்கலே நானும் காட்டாற்று வெள்ளம்போல எழுதிவருவதை விட்டு திசைமாறிச் சென்றுவிடுவேன்.இப்போதும் அப்படித்தான். ஆதலால் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சொல்லவருவதற்கு வருகிறேன். இப்போது சொல்லுங்கள் யார் கவிஞன்? இவரும் கவிஞர்தான் அவரும் கவிஞர்தான்? கவிஞர்களும் எழுத்தாளர்களே. கல்லில் பணிபுரிபவன் அம்மியையும் படைப்பான் ஆண்டவன் சிலையையும் படைப்பான். அவன் படைக்கும் படைப்பு வெவ்வேறென்றாலும் அவர்கள் செய்யும் தொழில் கல்வேலை அல்லவா? ஒருவனை சிற்பி என்கிறோம். இன்னொருவரை கல்தச்சன் என்கிறோம் அல்லவா?-சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும)
![]()