உலகம்

ஜம்மு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானில் குறித்த நேபாள ஏர்லைன்ஸ் – இந்தியா கண்டனம்

இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் என கூறி மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான நிறுவனம்.

நேபாள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்தான் நேபாள ஏர்லைன்ஸ்.   புதன்கிழமை தமது விமான நிறுவன சேவை கிடைக்கும் நெட்வொர்க் குறித்த வரைபடம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. அதில் டெல்லி, மும்பை, பெங்களூரு, டுபாய், தோஹா, தம்மாம், பாங்காக், கோலாலம்பூர், நரிட்டா, ஹாங்காங், குவாங்சவ் உள்ளிட்ட நகரங்களுக்கு தங்களது விமான நிறுவன சேவை கிடைப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவுதான் சர்ச்சையாகி உள்ளது. அதில் இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி, பாகிஸ்தானின் பிரதேசத்தில் காட்டப்பட்டு இருந்தது. அது சமூக வலைதளத்தில் உடனடியாக வைரல் ஆனது.

வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம், சம்பந்தப்பட்ட நேபாள ஏர்லைன்ஸ் மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுளடளன.

மேலும், விமான நிறுவனத்தின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளன. இதையடுத்து அந்த பதிவை நீக்கியது நேபாள ஏர்லைன்ஸ் விமான நிறுவனம்.

“சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட விமான நெட்வொர்க்கின் வரைபடத்தில் இருந்த பிழைக்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். அதில் சர்வதேச எல்லைகள் தொடர்பான விவரம் துல்லியமானதாக இல்லை. அதில் பிழைகள் இருந்ததாக நேபாள ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

அண்டை நாடுகளுடன் எங்களுக்கு உள்ள வலுவான உறவுகளை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய இந்த வரைபட விவகாரம் நேபாளம் அல்லது நேபாள ஏர்லைன்ஸின் நிலைப்பாடு அல்ல. இந்தப் பதிவு ஏற்படுத்திய தாக்கத்துக்கு வருந்துகிறோம்” என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் தங்கள் விமான நிறுவன சேவையை விரிவு செய்ய உள்ளதாக நேபாள ஏர்லைன்ஸ் தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் வரைபட சர்ச்சை அந்த நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *