நட்பெனும் நறுமுகை!… சங்கர சுப்பிரமணியன்.

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவப் பெருந்தகை. நண்பராக எண்ணி நட்பு பாராட்டுபவர்களாலும் இடுக்கண் வருவதுண்டு. அப்போது உடுக்கை இழந்தவன் கையாக இருப்பார்கள் என்பது முற்றாகமாறி முரணாகிப்போவதும் உண்டு. எல்லோருடைய நட்பும் வடக்கிருந்தோர்நட்பாகிவிடாது. நட்பென்று வந்துவிட்டால் அங்கே ஒருவரின் செயலை மற்றொருவர் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்வதில்லை.
துரியோதணன் மனைவியின் மணிமாலையை கர்ணன் பற்றி இழுக்க மணைமாலை அறுந்து மணிகள் தரையில் விழுந்து ஓட ஆரம்பித்ததும் கர்ணனிடம் கள்ளங்கபடமற்று “எடுக்கவா தொடுக்கவா?” என்றானே அதுபோன்ற நட்பெல்லாம் காவியங்களில்தான் நடப்பதுண்டோ என எண்ணுவேன். சிலர் எண்ணிடம் சொன்னார்கள். அதுவெல்லாம் இளவயது நட்பில் மட்டுமே சாத்தியம் என்றார்கள். அப்படியானால் கர்ணனும்துரியோதனும் எப்போது நண்பரானார்கள்?நட்பென்பது தகுதியின் அடிப்படையில் வருகிறதா என்றால் இல்லையென்றே சொல்லலாம். தேரோட்டியின் மகனாக வளர்ந்த கர்ணனுக்கும் அரசகுமாரணான துரியோதணனுக்கும் இடையே மலர்ந்த நட்பு தகுதியின் அடிப்படையிலா? இறுதிவரை பார்க்கமுடியாமல் கோப்பெருஞ்சோழன் இறந்தான் என்ற செய்துகேட்டதும் வடக்கிருந்தாரே பிசிராந்தையார் அவர்களின் நட்புக்கு அடிப்படை எது?இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் மதிப்பும் தான் நட்புக்கு அச்சாணி போன்று இருந்து இயங்குகிறதுஎன்பதைக் காணலாம். ஒருவர் மீது இருக்கும் நம்பிக்கை போய்விட்டால் மதிப்பும் அன்பும்போய்விடும். முகமது நகுவது நட்பல்ல அகமது நகுவது நட்பே நட்பு என்ற இலக்கணம் சிதைந்து வாசனையற்ற காகிதமலராக ஒரு நட்பு நிறம் மாறும்போது நெஞ்சில் ஏற்படும் வேதனை நம்மோடு தோளுக்கு தோளாய் நிற்பவர்களைக்கூட துன்பியல் நோக்கோடு நோக்கும் அவலநிலை ஏற்படும்.நட்பின் அடிப்படையே ஒருவரின் செயலும் நடையும்தான். ஒருவரின் நடத்தையாலும் செயலாலும் கவரப்பட்டே அதையே நம்மிடம் காணும்போது நட்பு உருவாகிறது. இதற்கு ஒருவரை ஒருவர் சந்தித்திருக்க வேண்டும் அவசியம் இல்லை. விருந்தோம்பல் கூட இல்லாமல் எத்தனையோ நட்பு மலர்கிறது. சந்தித்து பழகி விருந்தோம்பி விருப்பமோடு பழகியவர்கள்கூட விலகிவிடுவதுண்டு. நட்புக்கு இலக்கணமே நண்பராக இருந்து கொண்டே அவருக்கு இழுக்கு ஏற்படுத்தாமல் இருப்பது.இரயில் சிநேகிதம் போல சில நட்புக்கள்ஏற்படுவதுண்டு. இந்த நட்பு சூழ்நிலைகளால் உருவாகும். இரயிலில் பயணிப்பவர் ஒருவரை ஒருவர் நன்கு உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. இறங்க வேண்டிய இடம் வந்ததும் முடிவடைவதைப்போல அவர்களது தேவை முடிவடைந்ததும் அந்நட்பும் முடிவடைகிறது. அதனால் எதையும் எதிர்பார்த்து உருவாக்கப்படும் நட்பு எதிர்பார்ப்பு நிறைவேறியதும் உருக்குலைந்து விடுகிறது. நிறம் மாறிய பூக்களாக நிலைகுலைந்தை உதிர்ந்து விடுகிறது. இதனை எண்ணி வருந்த முடியாது. ஏனெனில் இதன் தன்மை அத்தகையது. நீர்க்குமிழி போன்று நிலையற்றது.காதல் என்பது எப்படி ஒருவரை ஒருவர் உளமாறக் காதலிக்கும்போது ஏற்படுகிறதோ அப்படித்தான் நட்பும். பருவ வயதில் தோன்றும் பாலுணர்ச்சியின் ஈர்ப்பால் தோன்றும் காதல் நிலைத்து நிற்காது. பிரியும்போது வலியும் ஏற்படாது. ஆனால் உளமாற காதலித்த உறவை பிரிய நேர்ந்தால் உயிர்வாழவும் முடியாது. அந்ந வேதனைகளோடு வாழ்வதைவிட இறப்பதேமேல் என்ற உந்தலின் காரணமாகவே உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.கோப்பெருஞ்சோழனிடம் பிசிராந்தையார் என்ன எதிர்பார்த்தார்? பேரரசனாக இருந்த சோழனிடம் பொன்னையும் பொருளையும் எதிர்பார்த்திருந்தால் அரசனை நாடிச் சென்றிருக்கலாம் அல்லவா? நெல்லைப் பிரித்துவிட்டால் எப்படி திரும்பவும் ஒட்டவைக்க முடியாதோ அதைப்போல் உடைந்த நட்பையும் ஒட்ட வைக்கமுடியாது.நண்பர்களுக்கிடையே மாற்றுக் கருத்து வராமல் இருக்காது. கொள்கையளவில் கீரியும் பாம்பும் போன்ற நண்பர்கள் இருப்பார்கள். ஆனாலும் அவர்களது நட்பு இறுதிவரை தொடரும்.ஒத்த கருத்துடையவர்களதான் நண்பர்களாக இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. கொள்கைவேறு தனிமனிதப் பண்பென்பது வேறு. நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபடும்போது ஒருவேளை அதைப்பற்றி விவாதிக்கும் அவசியம் ஏற்பட்டால் அவர்களது விவாதத்தில் கண்ணியக்குறைவு ஏற்படாது. ஒருமுறை பெருந்தலைவர் காமராஜுக்கும் கண்ணதாசனுக்கும் பிரிவு ஏற்பட்டது. கொஞ்சகாலத்திற்குப் பின் காமராஜுடன் இணையவேண்டிய சந்தரப்பத்தில் கூட கண்ணியமாக “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்கும் சொல்லடி” என்று ஒரு பாடல் மூலம் தெரியப்படுத்தினார்.

நட்பில் கசப்பு வர அனுமதிக்க கூடாது. ஒருவேளை கசப்பு வந்தாலும் நண்பரின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தக் கூடாது. சகிக்க முடியாத அளவுக்கு பெரிய தவறைச் செய்வதாக உணர்ந்தால் அந்த நட்பை கைவிடுவது நல்லது. சுயநலத்துக்காக நண்பனை பலியாடாக்குவது தவறு. அதனால்தான் ஒருவருடன் நட்பை தொடரும்போது நன்றாக ஆராந்தபின்னே தொடரவேண்டும். ஏனென்றால் அவ்வாறு தொடரப்பட்ட நட்பில் பிளவு ஏற்படக்கூடாது. நண்பர்களை நம்பாவிட்டால் அப்புறம் அந்த உறவுக்கு பெயர்தான் என்ன?அன்பர்களே எல்லோருடனும் பழகுங்கள். தவறில்லை. நண்பர்களை தேரந்தெடுத்து நட்பு கொள்ளுங்கள். அவ்வாறு தேர்ந்தெடுத்து நட்பு கொண்டபின் பிளவு ஏற்படும் வண்ணம் நடக்காதீர்கள். நட்பை சுயநலப் போர்வை கொண்டு அலங்கரிக்காதீர்கள். ஏனென்றால் அழகுக்குக்கே அழகு செய்யமுடியும். மீறி அலங்கரிக்க முற்பட்டால் அலங்கோலமாகிவிடும். ஆதலால் நல்ல நட்பைத்தான் பலப்படுத்த முடியும் தீயதட்பு கேடில் முடியும் என்று சொல்லி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.-சங்கர சுப்பிரமணியன்.
![]()